மதம் மற்றும் இனங்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக கைது செய்யப்படுவோரை, இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மனித உாிமைகள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் மூலம் மார்ச் முதலாம் திகதி வெளியிடப்பட்ட 2021ஆம் இலக்க சரத்துக்களின் பிரகாரம் இந்த சரத்துக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த சரத்துக்களின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம், அடிப்படை உரிமைகளை மீறி, மத மற்றும் சிறுபான்மை இனங்களை இலகுவாக இலக்கு வைக்க இடமளிக்கின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கான கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதற்குமான ஒரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிசீலித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்ப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மத, இன மற்றும் சிறுபான்மையினரை, சித்திரவதைக்குள்ளாக்கும் வகையில், நீண்ட கால விசாரணைகளின் இன்றி தடுத்து வைக்கும் நடவடிக்கை அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளாா்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் வலுவை குறைத்து, ஐக்கிய நாடுகளின் கரிசனையினை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, ராஜபக்ஸ நிர்வாகம் அதனை பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்கின்றது எனவும் விசாரணைகளுக்கு பதிலாக சந்தேகநபர்களை் வேறொரு இடத்தில் ஒரு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்கப்படுவதாகவும் அவர் தொிவித்துள்ளாா்.
இந்த உத்தரவை இரண்டு வருடங்கள் வரை நீடிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரம் உடையவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாமிய மதத்தவர்கள் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் அணிவதை தடை செய்யும் வகையிலான திட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, மார்ச் மாதம் 12ம் திகதி அறிவித்துள்ளாாா் எனவும் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்த விடயத்தை அவர் நியாயப்படுத்தியதாகவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளாா்
அதேபோன்று, நாட்டிலுள்ளள 1000திற்கும் அதிகமான இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கான எண்ணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளானது, மத சுதந்திரத்திற்கான உரிமையை கடுமையாக மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து, ராஜபக்ஸ நிர்வாகம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களை பயன்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு இலங்கை அரசாங்கம் அண்மைக் காலமாக முன்னெடுத்த அடக்குமுறைகள், மனித உரிமை பேரவையில் ஒரு வலுவான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது எதிர்கால துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும், கடந்த கால அட்டூழியங்களுக்கு முன்பாகவே பொறுப்பு கூறவும் உதவும் என மனித உரிமை கண்காணிப்பகம் எதிா்பாா்ப்பதாகவும் அவா் தொிவித்துள்ளாா். #இலங்கை #சிறுபான்மை #அச்சுறுத்தல் #மனிதஉாிமைகள்கண்காணிப்பகம்