இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் இராணுவ மயமாக்கலும், இனவாதமும் இணைந்துள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நாடாளுமன்ற உரை.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்கு அறிக்கை மீதான விவாதம் இன்று 25-03-2021 பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றினார்.
அவரது உரைவருமாறு.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்கு அறிக்கை மீதான இன்றைய விவாதம் தொடர்பில் எமது கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.


இங்கு உரையாற்றி பல உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பம் தொடர்பாகவும், அதனை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தொடர்பாகவும், அவ்வாணைக்குழு விசாரணைகளை நடத்திய முறை தொடரபாகவும் பல்வேறு விமர்சனக் கருத்துகளை வெளியிட்டனர்.


ஆனால் இங்கு உரையாற்றிய யாரும் இக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பின்னரும், அதற்கு முன்னரும்கூட இந்நாட்டில் உருவாகிவரும் புதிய கலாச்சாரம் பற்றி குறிப்பிடவில்லை. எத்தகைய பின்னணியில் இச்சம்பம் நடைபெற்றது என்பதனை ஆராயத் தவறிவிட்டனர்.


இவ்வறிக்கையானது நம்பகத்தன்மையுடையாதாக இருந்தாற்கூட அர்த்தமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கும். சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுதப் போராட்ட காலத்தில் முஸ்லீம் சமூகம் அரசாங்கத்திற்கு உதவியதாக எனக்கு முன்னர் உரையாற்றி உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கூறினார். அது சரியானது.


அது மட்டுமல்ல, முஸ்லீம் மக்களின் அரசியற் தலைமைகளும் பெரும்பாலான சந்தரப்பங்களில் அரசுடன் இணைந்திருந்தன. தமிழ்பேசும் மக்களான முஸ்லீம்கள் சிறிலங்கா அரசின் பக்கம் நின்றமையையிட்டு தமிழ்மக்கள் விசனமடைந்திருந்தனர். தமிழ் மக்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுவது தெரிந்துகொண்டும் முஸ்லீம்கள் இவ்வாறு நடந்து கொண்டது தமிழ்மக்களை ஆத்திரப்படுத்தியது. அந்தளவிற்கு முஸ்லிம் மக்களின் அரசியற் தலைமைகள் அரசிற்கு விசுவாசமாக நடந்துகொண்டது. அதேபோன்ற விசுவாசத்துடன் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து பணியாற்றினார்கள்.


ஆனால் போர்முடிவுக் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழ் மக்களைக் காட்டிலும் முஸ்லிம் மக்களே சிறீலங்கா அரசினால் குறிவைக்கப்பட்டனர். இனப்பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், இஸ்லாம் மதத்துக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை ஒருவரும் மறுக்கமுடியாது. இவ்வாறான கலாச்சாரம், தீவிரமான இஸ்லாமிய எதிர்ப்பு முஸ்லீம்களை தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதற்கு வழிவகுத்தது.
ஏனெனில் அவர்கள் தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதுகிறார்கள். இதுதான் உண்மை நிலவரம்.


அரசுக்கு விசுவாசமாகவிருந்த ஒரு சமூகத்தை குறிவைத்து, பாசிசவாத கருத்துகளை வெளியிடும்போது, அவர்களை வேண்டத்தகாதவர்களாக நடத்தும்போது, அச்சமூகம் தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதனைத் தடுக்கமுடியாது.


எனது மனதில்படுகிறபடி சொல்வதானால் இந்த நாடு பாதாளத்தை நோக்கிச் சரிந்து செல்கிறது. சிங்கள பௌத்த தேசியவாதம் காரணமாக இவ்வாறு நடைபெறவில்லை. சிங்கள பௌத்த தேசியவாதம் இனவாதமாக மாறிவிட்டது. இவ்வினவாதமானது திட்டமிட்டு சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை குறிவைத்துச் செயற்படுகிறது.


உங்களுடைய அடையாளங்களைப் பேணுவதற்காகச் செய்யும் காரியங்களைச் செய்யுங்கள். சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டில் மட்டுமே இருக்கிறாரகள். அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டுமானால் அதனைச் செய்யுங்கள். ஆனால் இந்த நாடு தனித்து சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற அடிப்படையில் செயற்படுவீர்களேயானால் மற்றைய சமூகத்தினர் தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதனைத் தடுக்கமுடியாது. இந்நாடு சிங்கள இனவாத நாடாக மாற்றப்பட்டுள்ளது என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. இது இனவாத நாடாக மாறிவிட்டது. இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளும் அதனையே காட்டுகிறது. இது கடந்த 40 வருடங்களாக நடக்கிறது.


இப்போது இராணுவமயமாக்கலும், இனவாதமும் இணைந்திருக்கிறது. சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையீடு செய்கிறது. இவை பாசிசவாத ஆட்சிக்கான அத்திவாரக் கற்களாகும், தெளிவாக ஆரம்ப அறிகுறிகளாகவும் அமைந்திருக்கின்றன.
இந்த அவையில் உள்ள மூத்த உறுப்பினர்களைப்பார்த்து இந்த எச்சரிக்கையை விடுக்கிறேன். இனவாதமும் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடும் பாசிசவாத ஆட்சியை நோக்கி இந்நாடு கொண்டு செல்லப்படுவதனை குறிகாட்டுவதாக அமைந்துள்ளது
என்பதனை இச்சபையிலுள்ள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கிறேன்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link