இலங்கையின் கடன் சுமை இந்த வருட இறுதியில் மொத்த தேசிய உற்பத்தியின் 115 வீதமாக அமையும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
தெற்காசிய வலய நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான உலக வங்கியின் புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் வங்கிகளினால் பெற்றுக்கொண்டுள்ள கடன் 63 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசாங்கத்திற்கு மத்திய வங்கியினால் வழங்கப்படும் கடன் 176 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெப்ரவரி 28 ஆம் திகதியளவில் மத்திய வங்கி 810 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நிறைவில் அரச கடன் மற்றும் அரச உத்தரவாத கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 109.7 வீதமாக அதிகரிக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு நிறைவில் இலங்கையின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியின் 12.6 வீதமாக அமையும் எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
COVID நிலைமை மற்றும் அந்நியச்செலாவணி பற்றாக்குறைக்கு மத்தியிலேயே, இலங்கையின் கடன் சுமை தொடர்பில் உலக வங்கி இந்த முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த நிலமையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டளவில் 3.4 வீதத்தினாலும் 2022 ஆம் ஆண்டு 2 வீதத்தினாலும் அதிகரிக்கும் என உலக வங்கி கணிப்பீடு செய்துள்ளது.