Home இலங்கை ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள்! பகுதி-2 – நிலாந்தன்!

ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள்! பகுதி-2 – நிலாந்தன்!

by admin

பல மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சைவ அறக்கட்டளை ஒன்றின் நிறுவனர் என்னோடு உரையாடினார். வலிகாமம் பகுதியில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் யாழ்கட்டளைத் தளபதி தெரிவித்த ஒரு விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். பலாலி முகாமை அண்டிய பகுதிகளில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியில் தமிழ்மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை என்பதை சுட்டிக்காட்டிப் பேசிய மேற்படி படை அதிகாரி தமிழ் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஒருபுறம் போராடுகிறார்கள். இன்னொருபுறம் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியமரவில்லை என்ற தொனிப்பட உரையாற்றியிருக்கிறார். இதைச்சுட்டிக் காட்டிய மேற்சொன்ன சமயப் பெரியார் இக்காணிகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குரியவை என்றும் அதனால்தான் அங்கே மீளக்குடியேற்றம் நடக்கவில்லை என்றும் கூறினார்.


அப்பொழுது அவரிடம் நான் சொன்னேன் “ஒருபுறம் யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு காணியற்ற மக்கள் இருக்கிறார்கள். சாதி ஒடுக்குமுறைக்கும் நில உடமைக்கும் தொடர்பு உண்டு. தாயகத்தை அரசாங்கம் ஆக்கிரமிக்கிறது என்று கூறும் தமிழ்தேசிய தரப்புக்கள் அதாவது நில ஆக்கிரமிப்பு குறித்து பேசும் தமிழ் தேசியதரப்புகள் தமது சமூகத்திற்குள்ளேயே நிலமற்ற மக்களைக் குறித்து பெரியளவில் உரையாடுவது இல்லை. குறிப்பாக மக்கள் மீளக்குடியேறாத பெரும்பாலான காணித் துண்டுகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குரியவை. இந்த நிலத் துண்டுகளை அவர்கள் தாமாக விரும்பி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கலாம். உதாரணமாக இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வினோபா உருவாக்கியது போன்ற பூமிதான இயக்கம் ஒன்றை உருவாக்கி இது தொடர்பில்செயற்படலாம்தானே? என்று.


இது நடந்து சில மாதங்களின் பின் உலகப்புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளரான மைக்கல்ஒண்டாச்சியாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவரை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்த யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறையைச் சேர்ந்தகலாநிதி சனாதனன் என்னிடம் கேட்டார் “ஊர் காவற்றுறையை சுற்றி பார்க்க விரும்புகிறார் நீங்களும் வாருங்கள்” என்று. மூவரும் ஊர்காவற்றுறைக்கு போனோம் இலங்கைத் தீவிலேயே ஆட்களற்ற வீடுகளை அதிகமாகக்கொண்ட ஒரு பகுதியாக தீவுப்பகுதியைக் கூறலாம்.

குறிப்பாக ஊர்காவற்றுறையில் மேல் நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான வீடுகள் ஆட்கள் இன்றி புதர்மண்டி காணப்படுகின்றன. அந்த வீடுகளை சுட்டிக்காட்டி மைக்கல் ஒண்டாச்சி என்னிடம் கேட்டார் “இந்த வீடுகளின் உரிமையாளர்கள் எங்கே” என்று. நான் சொன்னேன் “இது ஆதித் தமிழ்க்கத் தோலிக்கம் அதிகம் செழிப்பாக காணப்பட்ட ஒரு பிரதேசம். ஒரு காலம் இப்பகுதி அதாவது ஊர்காவற்றுறை தேவாலயங்களின் நகரம் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அது ஆட்களற்ற வீடுகளின் நகரமாக மாறிவிட்டது. இந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள் அல்லது தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்களைத்த் தேடி யாழ் நகரை நோக்கி இடம் பெயர்ந்து விட்டார்கள்” என்று.

“அவர்களில்அநேகர் வசதியானவர்கள். கொழும்பிலும் யாழ். நகரப்பகுதியிலும் அல்லது உலகின் பல பாகங்களிலும் அவர்களுக்கு வசிப்பிடங்கள் உண்டு. எனவே அவர்கள் பெரும்பாலும் திரும்பி வர வாய்ப்புகள் இல்லை”என்று.இது தீவுப்பகுதியில்இருக்கக்கூடிய பெரும்பாலான தீவுகளுக்கு பொருந்தும்.


இது நடந்து சில மாதங்களின் பின் நோர்வேயில் வசிக்கும் நண்பர் ஒருவரின் தந்தையார்இறந்தபொழுது நான் சாவீட்டுக்குப் போயிருந்தேன். நண்பர் ஊர்காவல்துறையி உள்ள மெலிஞ்சி முனை கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தையின் சாவு வீட்டுக்கு அவரும் வந்திருந்தார். சாவு வீடு கரம்பன் பகுதியில் பிரதான சாலைக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றது. மெலிஞ்சிமுனை கிராமம் பெருமளவுக்கு இடம்பெயர்ந்து கரம்பன் பகுதிக்கு வந்து விட்டது. அங்கே நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த பொழுது இப்பொழுது புலம்பெயர்ந்து வாழும் மற்றொரு மெலிஞ்சி முனை கிராமத்தைச் சேர்ந்தவர் கூறினார்…

கரம்பன் பகுதியில் உள்ள வீடுகளை காணிகளை நாங்கள் வாங்க முயற்சிக்கிறோம். ஆனால் வீட்டின் உரிமையாளர்கள் அவற்றை விற்க தயாரில்லை. சாதி ஒரு காரணம். காணி உறுதிகளை பங்கு தந்தையிடம் அல்லது திருச்சபையைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால் திருச்சபை அந்த காணிகளை பெரும்பாலும் பராமரிப்பதில்லை. புதர் மண்டி கிடக்கும் இந்தக் காணிகளை பராமரிப்பதற்கும் அக்காணிகளில் தற்காலிகமாகத் தங்கி இருக்கும் வெளிக் கிராமங்களைச் சேர்ந்த மக்களை அனுமதிக்கும் வீட்டு உரிமையாளர்கள் காணிகளையும் வீடுகளையும் அந்த ஏழைகளுக்கு விற்பதற்கு தயாரில்லை” என்று சொன்னார்.


இதே பிரச்சினை புங்குடுதீவிலும் உண்டு. ஒரு காலம் சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பொழுது மேற்படி ஆட்களற்ற வீடுகளில் தற்காலிகமாக வசித்து வருகிறார்கள். ஆனால் அந்த வீடுகளை அவற்றின் உரிமையாளர்கள் விற்பதற்கு தயாரில்லை. யாரையாவது வாடகைக்கு இருத்தி அல்லது தற்காலிகமாக இருத்தி காணிகளையும் வீடுகளையும் பராமரிக்க நினைக்கிறார்கள். ஆனால் அவற்றை மேற்படி தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு விற்கத் தயார் இல்லை. தற்காலிக குடியிருப்பாளர்களுக்கும் அவற்றை வாங்கும் நிதிப்பலம் இல்லை.யாழ்ப்பாணத்தில் மொத்தம் 4600 குடும்பங்களுக்கு சொந்தக் காணி இல்லை. வடபகுதி முழுவதும் மொத்தம் 10000 குடும்பங்களுக்கு சொந்தக் காணிஇல்லை.


ஒரு புறம் தமிழ்மக்கள் நில ஆக்கிரமிப்பு பற்றிப் பேசுகிறார்கள். அனைத்துலகமெய்நிகர்சந்திப்புக்களை நிகழ்த்துகிறார்கள். ஆனால் தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியது தான் என்ற அடிப்படையில் சிந்தித்து நிலமற்ற மக்களுக்கு நிலத்தையும் வீடற்ற மக்களுக்கு வீடுகளையும் வழங்குவதற்கு எத்தனை பேர்தயார்?


இது தொடர்பில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை ஊக்குவித்து காணிகளையும் வீடுகளையும் தேவைப்படும் மக்களுக்கு வாங்கி கொடுப்பதற்கு உரிய ஒரு நிறுவனக் கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது. நிலத்துக்காகபோராடும் தமிழ் மக்கள் தனது சமூகத்திற்கு உள்ளேயே வாழும் நிலமற்ற மக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். இல்லை யென்றால்நிலத்துக்கான போராட்டம் அதன் ஆன்மாவை இழந்துவிடும்.


இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பலாலிபடைத்தளத்தின் அதிகாரி கூறிய அந்த விடயத்துக்கு திரும்ப வரலாம். அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல தசாப்தகாலமாக வலிகாமத்திலும் வடமராட்சியிலும் உள்ள நலன்புரிநிலையங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள். 1200 குடும்பங்கள் இன்னமும் மீளக்குடியமரவில்லை. இதில் 300 குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை.அதாவது நாலில் ஒரு பகுதியினர்.அவர்கள் இடப்பெயர்வுக்கு முன்பு யாருடையதோ காணிகளில் கூலி உழைப்பாளிகளாக வாழ்ந்தார்கள். இடப்பெயர்வின் பின் இப்பொழுது முகாம்களை அண்டிய பகுதிகளில் தமது தொழில் துறைகளை விருத்தி செய்து கொண்டு விட்டார்கள்.

தவிர அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து படித்து அப்பகுதிகளிலேயே தொழில் தேடிக்கொண்டுவிட்டன. திருமணம் செய்துவிட்டன. எனவே தாம் வேர் விடாத ஒரு நிலப்பகுதிக்கு திரும்பிச் செல்ல இந்த மக்கள் தயாரில்லை. தாம் பல தசாப்தங்களுக்கு முன்பு வாழ்ந்த நிலத்துண்டுகளை தமது பூர்வீக பிரதேசம் என்றோபாரம்பரிய தாயகம் என்றோகூறுமளவுக்கு அவர்களுக்கு அது சொந்தமாகவும்இல்லை. அது குறித்து வேரோடிய நினைவுகளும் இல்லை. இந்நிலையில் தங்களுக்கென்று ஒரு துண்டுக்காணியும் இல்லாத ஓர் இடத்துக்கு அவர்கள் ஏன் திரும்பி போக வேண்டும்?


இதனால்தான் அந்த மக்கள் மீளக்குடியமர விருப்பமின்றி தற்காலிக முகாம்களில் தொடர்ந்தும்இருக்கிறார்கள்.அரசாங்கம் காணிகளை வாங்குவதற்கென்று நாலு லட்சம் ரூபாய்களை உதவியாக கொடுக்கிறது. ஆனால் ஆகக் குறைந்தது எட்டு லட்சம் ரூபாய் அதற்கு தேவை என்று ஒரு கணிப்பு உண்டு.


இதுவிடயத்தில் குறைந்தபட்சம் நிதிரீதியாக அந்த மக்களை பலப்படுத்தி மீளக் குடியமர்த்தும் திட்டங்கள் எவையும் தமிழ்த்தரப்பிடம் கிடையாது. இது குறித்து சிந்தித்து செயல்படும் தொண்டு நிறுவனங்களோ அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களோசெயற்பாட்டுநிறுவனங்களோதமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.


வவுனியாவை மையமாகக் கொண்டியங்கும் மாற்றம் நிறுவனம் 2015ஆம் ஆண்டுஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்ட நிலமும் நாமும் என்ற ஆவணநூலில் இது தொடர்பில்அறிக்கையிட்டிருகிறது. சிலகிழமைகளுக்கு முன்பு ஓக்லாண்ட் நிறுவனம் வெளியிட்ட ஆவணத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாயகத்தில் வெளியிடப்பட்ட ஆவணத் தொகுப்பு அது.மதநிறுவனங்களிடம் உள்ள காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டிருகிறது. அந்தநூலையும் விக்னேஸ்வரனே வெளியிட்டுவைத்தார். அதைப்பற்றி தினக்குரலில் 2015 டிசம்பரில் நான் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தேன்.


மேற்கண்டவற்றை தொகுத்துப்பார்த்தால் ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. தாயகம் குறித்தும் நிலம் குறித்தும் நில அபகரிப்பு குறித்தும் பேசும் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புக்களிடம் சமூக விடுதலை குறித்து பொருத்தமான செயல் பூர்வதரிசனங்கள் இல்லை என்பதே அது.தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை பெரிய திரளாக கூட்டிக்கட்டுவது. எந்த அடிப்படையில் அவ்வாறு மக்களைத் திரள்ஆக்குவது?

இனத்தின் பெயராலோ மொழியின் பெயராலோ ஒடுக்குமுறயின் பெயராலோ மட்டுமல்ல பாரம்பரிய தாயகத்தின் பெயரால் ஒரு மக்கள் கூட்டத்தை திரட்டிக்கட்டுவது என்றால் அந்த தாயகத்தில் அந்த நிலத்தில் அவர்களுக்கு வேர் இருக்க வேண்டும்.சொந்தக் காணி இருக்க வேண்டும்.பாரம்பரிய தாயகம் என்பது நிலத்தில் வேரோடிய கூட்டு நினைவுதான்.அதை தமிழ்த்தேசிய தரப்புக்கள் உறுதிப்படுத்த வேண்டும். தாயகம் என்று சொல்லிக்கொண்டு ஒரு துண்டு நிலம் கூட இல்லாத ஒரு தொகை மக்களை நலன் புரிநிலையங்களில் வைத்துக் கொண்டு நில அபகரிப்பு பற்றிப்பேசுவதில் அர்த்தமில்லை.


எனவே புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து ஆளற்ற வீடுகளையும் பூதம் காக்கும் காணிகளையும் நிலமற்ற மக்களுக்கு வழங்க உடனடியாக ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.


இக்கட்டுரையின் முதலாவது பகுதியில் நிலம் தொடர்பான உரையாடல்களில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு குறித்து பார்த்தோம்.இப்பொழுது இரண்டாவது பகுதியில் பேசப்படும் தாயகத்தில் நிலமற்ற மக்கள் விடயத்திலும் புலம் பெயர்ந்த தமிழ்த்தரப்பு அதிகரித்த பங்களிப்பை செய்ய வேண்டியிருக்கும். என்றால் அவர்களுடைய காணிகளும்வீடுகளும்தான் புதர் மண்டிக்கிடக்கின்றன. ஆளற்ற தீவுகளில் ஆலயங்களை கட்டுவதற்கும் புனரமைப்பதற்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டும் புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தாயகத்தை உயிருள்ள விதத்தில் கட்டியெழுப்ப நிலமற்ற மக்களுக்கு நிலத்தையும் வீடுகளையும் வழங்க முன்வரவேண்டும்.


தீவுப்பகுதியில் மட்டுமில்லை யாழ்ப்பாணத்தின் பல குக்கிராமங்களில் ஆளற்ற வீடுகளையும் உரிமையாளர் இல்லாத காணிகளையும் காணமுடியும். இது தொடர்பில் சரியான புள்ளிவிபரங்கள் எவையும் தமிழ் தொண்டு நிறுவனங்களிடம் இல்லை. ஏன் அதிகம் சொல்வான் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பலமான தமிழ் தொண்டு நிறுவனமே தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.


ஆயுதப்போராட்டத்தின் தொடக்க காலகட்டங்களில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் இருந்தது. காந்தியம் இருந்தது. காந்தியத்துக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும்இடையிலான துரதிர்ஷ்டவசமான தொடர்பு காரணமாக அந்த இயக்கம் பின்னர் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக எல்லையோரங்களில் காந்தியம் முன்னெடுத்தகுடியேற்ற முயற்சிகள் மகத்தானவை. வவுனியாவை ஒரு தமிழ் தேர்தல் தொகுதியாக பலமாக பேணுவதற்கு காந்தியம் முன்னெடுத்தகுடியேற்ற முயற்சிகளும் ஒரு காரணமே.எனவே காந்தியத்தை போன்ற நிறுவனங்களை மீள உயிர்ப்பித்து வினோபா சிந்தித்ததை போலவோ அல்லது புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிதாக சிந்தித்தோ நிலமற்ற தமிழர்களுக்கு நிலத்தையும் வீடுகளையும் வழங்கும் ஒரு நிறுவனமயப்பட்ட சிந்தனை அவசியம். தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது பிரயோகத்தில் அதுதான்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More