உலகம் பிரதான செய்திகள்

“பிரிந்திருந்த குழந்தையை தாயுடன் சேர்த்து வைப்பது கடத்தல் ஆகாது “


சிறுமி மியா விவகாரத்தில் கைதான நால்வரில் ஒருவர் இவ்வாறு ஒப்புதல்.


பிரான்ஸில் கடந்த சில தினங்களாகப் பெரிதும் பேசப்பட்டுவரும் எட்டு வயது சிறுமி மியா(Mia) கடத்தல் விவகாரத்தில் புதிய பல தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் கிழக்குப் பகுதியில் Vosges என்ற மாவட்டத்தில் உள்ள தனது பேர்த்தியாரின் வீட்டில் இருந்து சிறுமி மியா கடந்த 13 ஆம் திகதி சத்தம் சந்தடி ஏதும் இன்றிக் கடத்தப்பட்டிருந்தார்.


நீதிமன்றத்தின் உத்தரவில் தாய் வழிப் பேர்த்தியாருடன் வசித்து வந்த சிறுமி யைக் கடத்தினர் எனச் சந்தேகிக்கப்படுகின்ற நால்வர் பாரிஸ் பிராந்தியத்தின் பல பகுதிகளில் வைத்துக் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

கல்வி அலுவலர்கள் போன்று நடித்து பேர்த்தியாரை அணுகிய இவர்கள் அவரது வீட்டில் இருந்து சிறுமியைக் கடத்திச் சென்று தாயா
ரிடம் ஒப்படைத்துள்ளனர் என்று சந்தேகி க்கப்படுகிறது. சிறுமி மியாவும் தாயாரும் எங்கே உள்ளனர் என்பது தெரியவில்லை
அவர்களைப் பொலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


28 வயதான மியாவின் தாயார் குழந்தைகள் மீது வன்முறைகளில் ஈடுபடுபவர்என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் ஒன்றினால் குழந்தையிடம் இருந்து பிரிக்கப் பட்டிருந்தவர். பாதுகாப்புக் கருதி சிறுமி மியாவை அவரிடம் இருந்து பிரித்த நீதிமன்றம் சிறுமியைப் பேர்த்தியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.


Lola Montemaggi என்ற பெயர் கொண்ட தாயார், தனது மகளை பாடசாலையில் இருந்து வெளியேற்றி சமூகத் தொடர்புகள் இன்றி வளர்க்க முயன்றார் எனக் கூறப்படுகிறது.


குழப்பமான குணவியல்புகள் உள்ள அந்தத் தாயார் திட்டமிட்ட முறையில் சிறுமியை பேர்த்தியாரிடம் இருந்து கடத்தும் பொறுப்பைக் கைதானவர்ளிடம் ஒப்படைத்துள்ளார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.


கைதாகியுள்ள நபர்கள் “அராஜக இயக்கம்” என்ற (Anarchists) அல்ற்றா வலது சாரி வன்முறை அமைப்பு (survivalist movement) ஒன்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்றும் அவர்கள் ஏற்கனவே பாதுகாப்புத் துறையினரால் அறியப்பட்டவர் கள் என்றும் கூறப்படுகிறது. கைதானவ ர்கள் தங்கி இருந்த இடத்தில் ஆபத்தான வெடி பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன. சிறுமியைக்கடத்தும் பொறுப்பை ஒப்படைப்பதற்காக அந்த இளம் தாயார் இணைய வழியில் இவர்களோடு தொட ர்பு கொண்டு திட்டம் தீட்டியிருந்தமையும் தெரியவந்துள்ளது.


கடத்தல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த அரச சட்டவாளர், தாயும் சிறுமியும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என்று தெரிவித்தார். கைதாகியுள்ள சந்தேக நபர்கள் நால்வரில் ஒருவர் பொலீஸாருக்கு வழங்கிய தகவலின்படி சிறுமியைக் கடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் ஒரு குழந்தையைத் தாயுடன் சேர்த்து வைப்பது எவ்வாறு கடத்தல் குற்றம் ஆகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


“மியா தனது தாயாரைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சியைப் போன்ற ஒன்றைஇதற்கு முன் ஒரு குழந்தையிடம் நான்கண்டதில்லை. இப்படி ஒரு செயலை மீண்டும் செய்யவேண்டி வந்தால் நிச்சயம் செய்வேன். என் வாழ்நாளில் நல்ல காரியங்களைச் செய்தது குறைவு.
இதற்காகச் சிறை செல்ல நேர்ந்தாலும் பரவாயில்லை ” கைதான நபர் இவ்வாறு தனது செயலை நியாயப்படுத்தி உள்ளார். ஆனால் சட்டம் அதன் பணியை தொடர்ந்து செய்யும். குழந்தையைத் தேடிப்பிடித்து தாயாரைக்கைது செய்யும் நடவடிக்கை சர்வதேச அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
16-04-2021

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link