இலங்கை பிரதான செய்திகள்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் வடக்கிலிருந்து தெற்கிற்கு வாக்குறுதி

தெற்கில் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்நிற்கத் தயார் என வடக்கின் தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன வேறுபாட்டை பொருட்படுத்தாமல், பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க வடக்கு, தெற்கு என பாகுபாடின்றி செயற்படத் தயார் என யாழ். ஊடக மையம் அறிவித்துள்ளது.

மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் காணாமல்போன சக ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில்  யாழ். ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட ஊடகவியலாளர் ரத்னம் தயாபரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு சர்வதேச ஊடக சுதந்திர தினத்தன்று இடம்பெற்றது.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மிகவும் கடினமான மாதங்கள் என ரத்னம் தயாபரன் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை வடக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் இழக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க வடக்கு, தெற்கு வேறுபாடுகளை மறந்து செயற்படத் தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வருடத்தின் இந்த நான்கு மாதங்களில் மாத்திரம் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த 29 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

வடக்கில் ஒரு வெகுஜன ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிட முற்படுகையில், பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்ட, இலங்கையில் நன்கு அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலர் ருகி பெர்னாண்டோ, 2021 உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அடக்குமுறை சட்டங்கள், கொள்கைகள், கைதுகள், தடுப்புக்காவல்கள், சித்திரவதை, அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் சுதந்திரமான விமர்சகர்கள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, அச்சமின்றி கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில சம்பவங்கள்

ஏப்ரல் – 2021

* வாகனத்தில் ஒலி எழுப்பி எதிர்ப்பு வெளியிட வழியேற்படுத்திய இளைஞரை கைது செய்யப்பட்டார்.

* ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்ற புகைப்பட ஊடகவியலாளர் மலிக அபேகோன் பல நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து சித்திரவதை செய்யப்பட்டார்.

* அரசாங்க நிவாரணத் திட்டத்தை பகிரங்கமாக விமர்சித்து சில நாட்களின் பின்னர், 2019 இல் பிறப்பிக்கப்பட்ட பழைய பிடியாணைக்கு அமைய நுகர்வோர் உரிமை ஆர்வலர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டார்.

* முகநூலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்றதோடு, இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மார்ச் 2021

* கடத்தல் மற்றும் சித்திரவதை தொடர்பான முறைப்பாடு பொய்யானது என குற்றச்சாட்டில்  அச்சு மற்றும் இணையதள ஊடகங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுஜீவ கமகே கைது செய்யப்பட்டார்.

* டியூப் தமிழ் யூடியூப் தளத்தின் யாழ்ப்பாண அலுவலகம் மற்றும் அதன் இணையதளத்தை காவல்துறையினா் சோதனைக்கு உட்படுத்தியதோடு, கணினிகள் மற்றும் மடிக் கணினிகளை பறிமுதல் செய்தனர். மேலும்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இருவரை கைது செய்தனர்.

* தன்னுடைய தனிப்பட்ட தகவல்களைத் தேடும் சந்தேகத்திற்கிடமான குழு ஒன்று தொடர்பில் பிபிசி தமிழ் ஊடகவியலாளர் ரஞ்சன் அருண் பிரசாத் காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்தார்.

* இறக்குவானையைச் சேர்ந்த மாணவி பாக்யா அபேரத்ன தனது பிரதேசத்தில் நிகழும் சுற்றுச்சூழல் அழிவு குறித்து பிரபல தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த பின்னர் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்.

2021 பெப்ரவரி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

* பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான இடம்பெற்ற ஐந்து நாட்கள்  தொடர் பேரணியின் போதும், அதன் பின்னரும்  நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் காவல்துறை விசாரணைகள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.

* லங்காதீப பத்திரிகையின் கதிர்காமப் பிராந்திய ஊடகவியலாளர் எம். கே. நந்தசேனவை  கதிர்காமம் காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தொலைபேசியில் அச்சுறுத்தினார்.

2021 ஜனவரி

* சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இணையதள எழுத்தாளர் பைசால் மொஹமட்  நிசார் கைது செய்யப்பட்டார்.

* மவ்பிம பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று தொடர்பாக, அப்போதைய  இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர,  ஊடகவியலாளர் ஷிரான் ரணசிங்க மற்றும் மவ்பிம பணிப்பாளர் சிசிர பரணதந்திரி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தினார்.

* சுதந்திர ஊடகவியலாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லக்மால் ரனபாஹு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த முறைப்பாடு செய்துவிட்டு திரும்பும் போது ஒரு குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

 வேறு சில சம்பவங்கள்

 * தமது தந்தையின் மரணத்துக்கு நீதிமறுக்கப்பட்டதாகக் கூறி அரசாங்கத்தை விமர்சித்து  வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க எழுதிய கட்டுரை தொடர்பில் கருத்து வெளியிட்ட, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே அஹிம்சா விக்ரமதுங்க இலங்கையை அழித்து அதன் வீழ்ச்சியை காண விரும்புவதாக  தெரிவித்திருந்தார்.

* உலகளாவிய காலநிலை மாற்ற தினத்தை நினைவுகூரும் வகையில் கொழும்பின் விஹாரமஹாதேவி பூங்காவில் இளைஞர்கள் குழு வைத்த ஓவியத்தை காவல்துறையினரும் கொழும்பு நகர சபையும் அகற்றியிருந்தன.

* இரண்டு மாதங்களுக்கு முன்பு, எழுத்தாளர் ருகி பெர்னாண்டோ இரண்டு ஊடகவியலாளர்களுடன் வடக்கின் இரணைதீவு பிரதேசத்திற்கு செல்ல முயன்றபோது கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

* இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் ஒரு வருடத்திற்கும் மேலாக குற்றச்சாட்டுகள் இன்றி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

* மட்டக்களவைச் சேர்ந்த முருகபிள்ளை கோகுலதாசன் என்ற ஊடகவிலாயளர் குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றி  சுமார் 5 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

* முகப்புத்தக பதிவு தொடர்பாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின்  கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் ரம்ஸி ரசீக் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் காணப்படுகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.