இரண்டு சர்வதேச துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்காக நங்கூரமிட்டிருந்தபோது தீப்பிடித்த வணிகக் கப்பலில் அடங்கியிருந்த இரசாயனங்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கடல் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் மாசுபாட்டு பேரழிவின் ஐந்து சதவீதத்தை மாத்திரமே கடற்கரையில் காணக்கூடியதாக இருப்பதாக, இலங்கையின் கடல் சூழலைப் பாதுகாக்க செயற்படும், தன்னார்வ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
“அதாவது 95% கடலிலேயே காணப்படுகின்றது. இப்போது நாம் பார்ப்பது ஐந்து சதவீதம் மாத்திரமே என கருதலாம். மீதமுள்ளவை அனைத்தும் கடலில் இருக்கக்கூடும்.”
குறித்த இரசாயனங்களை அகற்ற நீண்டகாலம் எடுக்கும் என்பதால், அழிவின் அளவும் பெரியதாக இருக்குமென, பேர்ள் புரொடெக்டர்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முதிதா கட்டுவால தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் சமுத்திர சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, மே 20 முதல் தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில், கொள்கலன்கள், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் போத்தல்கள், பைகள், மின் கேபிள்கள் உள்ளிட்ட அடர்த்தியான பல வகையான பிளாஸ்டிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளன.
சிங்கப்பூர் கொடியின் கீழ் பயணம் செய்த எக்ஸ்பிரஸ் பேர்ள், எத்தனோல், 25 தொன் நைட்ரிக் அசிட், இரசாயனப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 1,486 கொள்கலன்கள் கப்பலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு வாரம் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், தண்ணீரில் கலந்த பிளாஸ்டிக் துகள்கள் கடுமையான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முதிதா கட்டுவால தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எண்ணெய் கசிவால் ஏற்படும் சேதத்தை குறைக்க இலங்கையில் எந்த வழிமுறையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எண்ணெய் கசிவு ஏற்பட்டால், எரிபொருள் கடல் நீரின் மேற்பரப்பில் பரவும். இதனால் சூரிய ஒளி கடலுக்குள் நுழைவது தடுக்கப்படும். இது கடல் வாழ் உயிரினங்களையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் மோசமாக பாதிக்கிறது.
“பின்னர் மீன்கள், அங்குள்ள நீர்வாழ் உயிரினங்கள், எண்ணெயால் நீர் மூடப்பட்ட பின் அவை அங்கேயே சிக்கிக்கொள்ளும், அவைகளால் எதுவும் செய்ய முடியாது.”
எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் எரிபொருள் கசிவு சுற்றியுள்ள கடல்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவித்துள்ள முதிதா கட்டுவால இது கொழும்பு துறைமுகம், துறைமுக நகரம் மற்றும் நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதேவேளை, இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான இழப்பு ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
“நிலைமை நல்லதாக இல்லை” என கடல் உயிரியலாளர் கலாநிதி ஆஷா டி வோஸ் கூறியுள்ளார்.
சுருக்கமாக கூறுவதானால், அலை தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே, கொழும்பு மற்றும் தென் மாகாணத்தில் அதிக கழிவு பொருட்கள் கரையொதுங்கக்கூடும். எண்ணெய் கொழும்பிலிருந்து வடக்கு கடற்கரைவ வரை பரவும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய மேற்கு பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் பேராசிரியர் சரிதா பட்டியாரச்சி மற்றும் பேராசிரியர் சரத் விஜேரத்ன ஆகியோரால் செய்யப்பட்ட ஒரு கணிப்பை மேற்கோள்காடடி, ஆஷா டி வோஸ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடல் நீரால் அடித்து வரப்பட்டுள்ள பிளாஸ்டிக் துகள்களால் மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட சேதம் மிகப்பெரியது என முதிதா தெரிவித்துள்ளார்.
கடலில் உள்ள இரசாயனங்கள் பிளாஸ்டிக் துகள்கள் உறிஞ்சப்படும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மேலும் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை உறிஞ்சும் துகள்கள் கடற்கரையில் மாத்திரமன்றி கடலிலும் காணப்படுகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற துகள்களை மீன்கள் சாப்பிடுவது அவைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும், இதனால் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த பிளாஸ்டிக் துகள்களை விழுங்கிய மீன்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நிலைமையை விரைவாகக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய முதித கட்டுவால, 2012 இல் ஹொங்கொங்கில் நடந்த ஒரு விபத்தின் போது பிளாஸ்டிக் துகள்களும் கடலுக்குள் வீசப்பட்டதாகவும், பிளாஸ்டிக் துகள்களை அந்த பிரதேசத்தின் கடற்கரையில் தற்போதும் காணலாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2012ஆம் ஆண்டில், ஹொகொங்கிற்கு அருகே ஏற்பட்ட புயலால் கப்பலிருந்து கடலில் வீழ்ந்த ஏழு கொள்கலன்களில் ஆறில், பிளாஸ்டிக் (பொலிப்ரொப்பிலீன்) பந்துகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, இறந்த மீன்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் சோதனைகளில் அவைகளின் வயிற்றில் ஒரு பெரிய அளவு இந்த பிளாஸ்டிக் துகள்களால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறிய பிளாஸ்டிக் துண்டுகளைப் போலவே, இவை உணவுச் சங்கிலியில் நுழைந்து மக்களின் உணவுத் தட்டுகளையும் அவை வந்தடையும் அபாயம் காணப்படுகின்றது.
கடல் மாசடைவதற்கு மேலதிகமாக, கப்பல் தீப்பிடித்ததால் காற்று மாசடையும் அபாயமும் காணப்படுவதாக முதிதா கட்டுவால குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ள் தீப்பரவல் காரணமாக அமில மழை பெய்யக்கூடும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வௌியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர குறிப்பிட்டுள்ளார்.
அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் பெய்யக்கூடும் என அவர் கூறினார்.
இதனால், வீடுகளுக்கு வௌியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட இரசாயன பொருட்களை மக்கள் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கடல் சூழலியல் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளனர். அவை உடனடியாக அகற்றப்பட வேண்டுமெனவும், இல்லையெனில் அவை மேலும் பரவக்கூடும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து கடற்கரையை சுத்தம் செய்வதற்கான வாய்ப்பு நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்திற்கான தற்போதைய கட்டுப்பாடுகள் தடையாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல் சூழலையும் கடற்கரையையும் பாதிக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி முதல் தீப்பிடித்து எரிந்தஎம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள், ஆபத்தின் முதல் அறிகுறியை அறிந்துகொண்ட நிலையில், சேதத்தைத் தடுக்க இரண்டு சர்வதேச துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதி கோரியுள்ளதாக ஸ்பிளாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டாரின் ஹமாட் மற்றும் இந்தியாவின் ஹசீரா துறைமுகங்களில் இரசாயன கொள்கலன்களை இறக்குவதற்கு கப்பலின் கெப்டன் அனுமதி கோரியிருந்ததாகவும்,
எனினும், கெப்டனின் இந்த கோரிக்கையை குறித்த இரண்டு துறைமுகங்களின் நிர்வாகங்களும் நிராகரித்ததாகவும், இந்நிலையிலேயே கப்பல் இலங்கை நோக்கி பயணித்ததாகவும், கப்பல் நிறுவனமான எக்ஸ்-பிடர்சின் நிர்வாகத் தலைவர் டிம் ஹார்ட்னோல் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட, 186 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பயணம் மேற்கொண்டது.
ReplyForward |