யாழ்.மாநகர குடியிருப்பாளர்கள் கழிவகற்றல் தொடர்பான தங்களுடைய முறைப்பாடுகளையும் குறைபாடுகளையும் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் முறைப்பாடு செய்வதற்கு ஏதுவாக தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வரதரராஜன் பார்த்திபன் தெரிவிக்கையில் ,
யாழ்.மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தை சீர்செய்வதோடு அதனை மேம்படுத்தும் செயற்பாடுகளை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்டு வருகின்றார்.
அதன் முதற்கட்டமாக மாநகர மக்கள் கழிவகற்றல் தொடர்பிலான முறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை அறிவிக்கும் முகமாக முறைப்பாடு இலக்கம் ஒன்றினை மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை 27 வட்டாரங்களை கொண்டது அவ் 27 வட்டாரங்களுக்கும் தனிதனியான கழிவகற்றல் வாகனங்கள் இப் புதிய முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அவ் கழிவகற்றல் வாகனங்களில் வட்டார இலக்கம் மற்றும் முறைப்பாட்டுக்குரிய தொலைபேசி இலக்கம் என்பன ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த வட்டார இலக்கத்தினையுடைய கழிவகற்றல் வாகனம் அவ் வட்டார கழிவுகளினை அகற்றுவதற்கு அவ் வட்டார மேற்பார்வையாளர் தலைமையில் பயன்படுத்தப்படும்.
ஆக மாநகரத்தின் கழிவகற்றல் செயற்பாடுகள் வட்டாரரீதியாக தினமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மாநகர முதல்வர் அறிவித்துள்ள முறைப்பாட்டு இலக்கம் வைபர் மற்றும் வாட்சப் இலக்கங்கள் (0716390000) ஆகும். அவற்றின் ஊடாக மாநகர குடியிருப்பாளர்கள் கழிவகற்றல் தொடர்பான தங்களுடைய முறைப்பாடுகளையும் குறைபாடுகளையும் படங்கள் மற்றும் வீடியோக்களாக குறித்த இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.
செயற்றிட்டம் ஒன்று வெற்றியடைவதும் தோல்வியடைவதும் மாநகர மக்களாகிய எங்களுடைய மனங்களில் எழும் சிந்தனை மாற்றங்களிலும் தங்கியுள்ளது அந்தவகையில்
‘நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை முதல் படியில் ஏறு’ என்ற மாட்டின் லுதர் கிங் இன் வரிகளை சிந்தனையில் கொண்டு ஒரு முன்னேற்றகரமான தூய்மையான மாநகரத்தை உருவாக்க மாநகர சபை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
ஓவ்வொரு நிமிடங்களும் பெறுமதியானவை அவை இவ் மாநகரத்திற்கானவை என்பதன் அடிப்படையில் மாநகர திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தின் மேம்படுத்தல் செயற்பாடுகள் தொடரும் என தெரிவித்தார்.