தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் நிலையின் காரணமாக ஒக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சீல் வைக்கப்பட்டு முடியிருந்த தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ,உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜூலை 31ஆம் திகதி வரை ஒக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனுமதி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுத் தாக்கல் செய்தது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், தமிழகத்தில் போதுமான ஒக்சிஜன் கையிருப்பு உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை நீட்டிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டதனையடுத்து அங்கு செய்யப்பட்டு வந்த ஒக்சிசன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு இரண்டு மெகாவாட் மின்சாரத்தினை ஒக்சிஜன் உற்பத்தி பிரிவைத் தொடர்ந்து இயங்கும் நிலையில் வைத்திருக்க வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது