வட்டுக்கோட்டை பகுதியில் வீடு புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் திருட்டில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை மேற்கு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள், கடந்த 4ஆம் திகதி வெளியில் சென்றிருந்த வேளை , வீடு புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த இரண்டரை பவுண் நகைகளை திருடி சென்று இருந்தனர்.
வீடு திரும்பிய உரிமையாளர்கள் , வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதனை கண்ணுற்று நகைகள் இருந்த இடத்தினை பார்த்த போது , அங்கிருந்த இரண்டரை பவுண் நகைகளை காணவில்லை அது தொடர்பில் அன்றைய தினமே வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் வீட்டின் அருகில் இருந்த சிசிரிவி காமராவின் உதவியுடன் சந்தேக நபர்களை இனம் கண்டிருந்தனர். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மூளாய் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்ததில் , திருடிய நகைகளில் இரண்டு பவுணை யாழ்.நகர் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்ததாகவும் , மிகுதி அரை பவுண் தன்னிடம் உள்ளதாக கூறி அரை பவுண் நகையை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , இவருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட மற்றைய நபர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.