உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து, ஜேம்ஸ் அன்டர்ஸன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நொட்டிங்ஹாமில் நடந்து வருகின்ற நிலையில் 3-வதுநாளான நேற்று இந்திய துடுப்பாட்டவீரா் கே.எல்.ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியபோது, கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து அன்டர்ஸன் சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அன்டர்ஸன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 163 போட்டிகளில் விளையாடி 621 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தில் இருந்த நிலையில் அவரின் இடத்தை தற்போது அன்டரஸன் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திேரலியாவின் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது