நல்லூர் ஆலயத்தை சூழவுள்ள வீதி தடைகளுக்குள் உள்ள கடைகளுக்கு செல்வதற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கான நேர ஒழுங்கொன்றினை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. மகோற்சவ காலங்களில் வழமையாக ஆலய சூழலை சுற்றியுள்ள வீதிகள் பொதுமக்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு வீதி தடைகள் போடப்பட்டு இருக்கும்.
அந்த வகையில் இம்முறை மகோற்சவத்தை முன்னிட்டு கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 7ஆம் திகதி நள்ளிரவு வரையில் வீதித்தடைகள் போடப்பட்டு பொது போக்குவரத்திற்கான தடை நடைமுறையில் இருக்கும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்முறை ஆலய மகோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் , ஆலய சூழலில் வர்த்தக நிலையங்களை நடாத்துபவர்கள் வியாபாரங்கள் இன்றி நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். அதேநேரம் அப்பகுதி மக்களுக்கும் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டு வந்தமையால் , இவை தொடர்பில் யாழ்.மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து , இன்றைய தினம் யா.மாநகர முதல்வர் யாழ்ப்பாண காவல்துறையினருடன் ஆலய சூழலுக்கு சென்று வீதித்தடைகள் குறித்து நேரில் ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் வீதித்தடைகள் ஊடாக பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது.
அது தொடர்பில் முதல்வர் அறிவிக்கையில் ,
ஆலயத்தின் விசேட பூஜை நேரமான அதிகாலை 4 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரையிலும் , காலை 10 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையிலும் , மாலை 04 மணி முதல் இரவு 06 மணி வரையிலும் வீதித்தடைகள் ஊடாக உட்செல்ல அனுமதியில்லை.
அதேநேரம் விசேட திருவிழா நாட்களில் முழுநாளும் வீதித்தடை ஊடாக உட்செல்ல அனுமதி இல்லை. ஏனைய நேரங்களில் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின் பற்றி தங்கள் தேவைகளுக்காக வீதித்தடைகள் ஊடாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அதேவேளை சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் , தேவையேற்படின் இந்த நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.