நாட்டில் கோவிட்19 பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக பரீட்சைகளை நடாத்துவது தொடர்பாக ஊழியர் சங்கம் தனது நிலைப்பாட்டை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ் பல்கலைக்கழகத்தில் ஓகஸ்ட் 21ஆம் திகதிக்குப் பின்னான மிக கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் கூட பரீட்சைகள் நடைபெற்று வருவதையும் இதற்கு கல்விசாரா ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.
கல்விசாரா ஊழியர்களின் ஒத்துழைப்பின் அர்த்தம் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறைப் பரீட்சைகள் நடாத்தும் அளவிற்கு கோவிட் தொற்று குறைந்து வருகின்றது என்பதல்ல.
மாறாக கோவிட் தொற்று மிக மோசமாக பரவி வருகின்றது என்பதும் பரீட்சைகள் நடைபெற இது உகந்த காலம் அல்ல என்பதும் எமது கல்விசாரா ஊழியர்களின் குடும்பங்களின் பாதிப்பு வீதமும் கடந்த சில தினங்களாக மிகவும் அதிகரித்து செல்வதும் நாம் நன்கறிந்ததே.
இருந்தபோதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய சூழ்நிலையிலும் பரீட்சைகள் நடைபெறுவதை விரும்புகிறார்கள் என நாம் கருதி வந்தமையால் தான், அவர்கள் வலிந்து தொற்றாளராக்கப்படும் ஆபத்தான சூழ்நிலையிலும் எமது அங்கத்தவர்களை பரீட்சைக் கடமைகளில் ஈடுபட நாம் ஊக்கப்படுத்தி வந்தோம்.
ஆனால் பரீட்சையை பின்போடுமாறு மாணவர்கள் இணைந்து எழுத்து மூலம் கோரிக்கை விட்ட பின்பும் பரீட்சைகள் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்திலும் தொடர்ந்து நடைபெறுமெனத் தீர்மானித்திருப்பதை நோக்கும் போது, நாம் எமது ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது அவர்களை பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுமாறு தூண்டியமை முறையற்றதென தற்போது உணருகிறோம்.
பல்கலைக்கழகமும், மருத்துவ பீடமும், தொழிற்சங்கத்தினரான நாமும் கோவிட் சமுகபரவலை தடுக்க எந்த அறிவுரைகளை வழங்கினோமோ அதை நாமே மீறுவது அபத்தமானது.
இடர்கள் மத்தியிலும் பல்கலைக்கழக பணிக்காக தம்மை அர்ப்பணிக்க குறைந்த பட்சம் சில ஊழியர்களாவது உள்ளனர் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நாம் நம்புகின்றோம்.
பல்கலைக்கழக நிர்வாகிகள் சொல் ஒன்று செயல் வேறொன்றாகச் செயற்படின் இத்தகு ஊழியர்களும் விரக்திக்குள்ளாகி பணிகளில் ஊக்கம் குன்றி விடுவர். இவ்வாறு நிகழ்வதை நாம் தவிர்க்க வேண்டும்.
பல்கலைக்கழக கோவிட் செயலணிக்குழு உண்மையில் இயங்குகிறதா? அதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்ற எமது சந்தேகத்தையும் இத்தருணத்தில் நாம் வெளிப்படுத்தியாக வேண்டும்.
அவ்வாறானதொரு பல்கலைக்கழக கோவிட் செயலணிக்குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவானது தனது கடமையை சரிவர ஆற்றியிருந்தால் பராமரிப்பு ஊழியர்கள், நிதிக் கிளை ஊழியர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு பதட்டமடைந்த சூழ்நிலையிலும், ஊழியர் ஒருவரின் மரணத்தின் போதும், ஊழியர் சங்கம் தலையிட்டு ஊழியர்களின் பாதுகாப்பு கருதி சில அறிவித்தல்களை விட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆனால் அத்தருணங்களில் எமது நிலைப்பாட்டை தாங்கள் தெளிவாக புரிந்து கொண்டமையால் பிரச்சினை எதுவும் எழவில்லை.
மருத்துவ பீடத்திலும், சித்த மருத்துவ அலகிலும், விஞ்ஞான பீடத்திலும் வேறு பீடங்களிலும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தாங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாது பரீட்சைக் கடமைகளுக்காக பணிக்கமர்த்தப்படும் அனைவரும் தொற்றாளர்கள் இல்லை என்பதை தாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள அல்லது அடுத்து வரும் தினங்களில் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படப்போகும் அபாயமுள்ள மாணவர்களும் பரீட்சைக்கு சமுகமளிக்கவுள்ளனர். பரீட்சைக் கடமைகளின் போது இவர்களுடனும் எமது ஊழியர்கள் ஊடாட அவசியம் ஏற்படும். மேலும் அதனால் உருவாகும் விளைவுகளையும் தயவு செய்து சீரிய கவனத்தில் கொள்ளவும்.
இன்று இலங்கையிலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ள கோவிட் தொற்று நிலைமை குடிமக்கள் பரம்பல் அடிப்படையில் ஒப்பிடும்போது மிக மோசமானது என்பதை நாம் சுட்டிக்காட்டித் தான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஏனையோர் புரிந்து கொள்ள வேண்டுமென நாம் கருதவில்லை. என குறிப்பிடப்பட்டுள்ளது .
ReplyForward |