Home இலங்கைவர்த்தக நிலையங்களுக்கு எதிராக இரண்டு வாரத்தில் 45 வழக்குகள்

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக இரண்டு வாரத்தில் 45 வழக்குகள்

by admin

யாழ்.மாவட்டத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்றல், காலாவதியான பொருட்களை விற்றல் போன்ற குற்றச்சாட்டுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 45 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 
மேலும் தெரிவிக்கையில் , 
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்றல் காலாவதியான பொருட்களை விற்றல் போன்ற குற்றச்சாட்டுகளில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக 45 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய தினத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக நீதிமன்ற நடைமுறையில் சற்று தாமதம் காணப்படுகின்றது.

இருந்தபோதிலும் தொடர்ச்சியாக பாவனையாளர் அதிகார சபையினால் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

அதனுடன் இணைந்த வகையிலே நிறுத்தல் மற்றும் அளவைகள் திணைக்களமும் இந்த சந்தர்ப்பத்திலும் தங்களுடைய பணியாளர்களை களப் பணியில் ஈடுபடுத்தி பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் நடைபாதை வியாபார நிலையங்களையும் நடமாடும் வண்டிகளையும் பரிசோதனை செய்யவுள்ளார்கள். எனவே வியாபாரிகள் மிகவும் விழிப்புணர்வுடன் பொதுமக்களுக்கு சகாய விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

அதிக விலைக்கு விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது அத்தோடு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையுடன் இணைந்த வகையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவில் 5 பட்டதாரி பயிலுனர்களுடன் இணைந்து இந்த பரிசோதனை அறிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

குறிப்பாக சீனி அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான விற்பனை நிலை தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. நேற்றைய தினத்தில் இருந்து மிகவும் இறுக்கமான முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More