உலகம் பிரதான செய்திகள்

இத்தாலியில் காணாமற் போயுள்ள பாகிஸ்தான் யுவதியின் மாமனார் பாரிஸ் புறநகரில் வைத்துக் கைது

இத்தாலியில் கடந்த ஏப்ரல் இறுதியில் பாகிஸ்தான் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பாக – அந்த யுவதியின் மாமன் முறையான – ஆண் ஒருவர் பாரிஸ் புறநகரில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு இணங்க மறுத்து இத்தாலியில் உள்ள தனது காதலனுடன் மேற்கத்தைய வாழ்வு முறைமையை விரும்பிய காரணத்துக்காக அந்த யுவதியை அவரது குடும்பத்தவர்களே”கௌரவக் கொலை” செய்து புதைத்து விட்டனர் என்று நம்பப்படுகிறது.

பெற்றோருடன் இணைந்து யுவதியைக் கொன்றவர்களில் ஒருவர் என நம்பப்படுகின்ற 36 வயதான ஆண் ஒருவரே கடந்த திங்களன்று பாரிஸில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் .ஐரோப்பியக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபரான அந்தப் பாகிஸ்தான் பிரஜை அவரது சமூகவலைத்தளங்களைப் பின்தொடர்ந்ததன் மூலமாகவே காவல்துறையினரின் வலையில் சிக்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

பாரிஸின் புற நகரான Garges les Gonesse பகுதியில் வேறு சிலருடன் சேர்ந்து அவர் தங்கியிருந்த வீட்டைப் காவல்துறையினா் அடையாளம் கண்டு அவரை மடக்கியுள்ளனர். விசாரணைகளுக்காக அவர் இத்தாலிக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரலில் அந்த யுவதிக்கு நேர்ந்தகொடுமை இத்தாலி நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாலியின் Reggio Emilia பகுதியில் உள்ள Novellara என்ற தோட்டப்புற நகரத்தில் வசித்துவந்த பாகிஸ்தான் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர் அந்த யுவதி. முன் அறிமுகம் இல்லாத ஒருவரை மணம் முடிப்பதற்காக யுவதியை பாகிஸ் தானுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் விரும்பினர்.

ஆனால் யுவதி அதற்கு மறுப்புத் தெரிவித்த காரணத்தால் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்துக் குடும்ப கௌரவம் கருதி ரகசியமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தங்கள் மகளை ஒன்றுவிட்ட சகோதரர்கள் மற்றும் மாமன்மாருடன் இணைந்துகொலை செய்து சடலத்தை மறைத்துவிட்டுப் பெற்றோர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். ஏனையவர்கள் ஜரோப்பியநாடுகளுக்குச் சென்று தலைமறைவாகிவிட்டனர்.அவர்களில் யுவதியின் ஒன்றுவிட்ட சகோதரர் உறவு முறையான ஒருவர் கடந்த ஜூன் மாதம் பிரான்ஸிற்குள் நுழைய முயன்ற வேளை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இப்போது மாமனார்முறையான ஒருவரும் கைதாகி இருப்பதால் யுவதிக்கு என்ன நடந்தது அவரதுஉடல் எங்கே புதைக்கப்பட்டது போன்றமர்மங்கள் துலங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலிய காவல்துறையினா் யுவதியின் உடல் எச்சங்களைத் தேடிவருகின்றனர். கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற தினத்தன்று வீட்டின்அருகே உள்ள பண்ணைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய விதத்தில் மூன்றுபேர் மண்வெட்டி, வாளி மற்றும் ஆயுதங்கள் சகிதம் செல்வதைக் கண்காணிப்புக் கமெரா(CCTV) காட்சிகள் உறுதிப்படுத்திஇருந்தன.

அவர்கள் மூவரும் யுவதியின்உறவினர்கள் எனக் காவல்துறையினா்ர் சந்தேகிக்கின்றனர். இதேவேளை-பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுத்தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தாய், தந்தை இருவரையும் இத்தாலிக்கு நாடுகடத்துமாறு அந்நாட்டின் விசாரணையாளர்கள் கேட்டிருக்கின்றனர்.தங்களதுமகளைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் அவர் பெல்ஜியத்துக்குத் தப்பிச்சென்றுவிட்டார் எனவும் பெற்றோர்கள்இருவரும் கூறிவருகின்றனர்.

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.24-09-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.