Home உலகம் ஜேர்மனிக்கு இடதுசாரித் தலைமை? ஞாயிறு தேர்தலில் முடிவு தெரியும்!

ஜேர்மனிக்கு இடதுசாரித் தலைமை? ஞாயிறு தேர்தலில் முடிவு தெரியும்!

by admin


நிதி அமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அடுத்த அரசுத் தலைவராக வாய்ப்பு!


ஜரோப்பாவின் பொருளாதார வல்லமை மிக்க ஜேர்மனி நாட்டின் நாடாளு மன்றத்தையும் அரசுத் தலைவரையும் தெரிவு செய்கின்ற தேர்தல் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.
அங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி(CDU) தலைமையில் 16 ஆண்டு காலம் நீடித்த பழமைவாதிகள் ஆட்சியை ஞாயிறு தேர்தல் முடிவுக்குக் கொண்டுவரும் என்று கணிப்புகள் தெரி விக்கின்றன.அது நடந்தால் ஜேர்மனியின் சான்சிலர் (Chancellor) எனப்படும் அரசுத் தலைவர் பதவி 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் இடதுசாரிக் கட்சியின் கைகளுக்கு மாறுகின்ற வாய்ப்புக்கள் தெரிகின்றன.


நாட்டின் மிகப் பழைய கட்சியாகிய மைய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் (centre-left Social Democratic Party – SPD) தலைமையில் கூட்டணி ஆட்சி ஒன்று அமையக்கூடும் என எதிர்வுகூறப்படு வதால் அந்தக் கட்சியின் வேட்பாளராகிய 63 வயதுடைய ஓலாஃப் ஸ்கோல்ஸ்(Olaf Scholz) நாட்டின் சான்சிலராகப் பதவிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. .அவரது சமூக ஜனநாயகக் கட்சி அங்கெலாவின் தற்போதைய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது. அங்கெலாவின் அரசில் ஸ்கோல்ஸ் தற்போது நிதி அமைச்சராகவும் பிரதி சான்சிலராகவும் இருக்கிறார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி காலப் பகுதியில் நாட்டின் நிதி நெருக்கடிகளை சிறப்பாகக் கையாண்டார் என்ற காரணத்தினால் நாட்டு மக்கள் மத்தியில் அவரதுசெல்வாக்கு உயர்ந்திருந்தது.


எனினும் நிதி அமைச்சர் என்ற வகையில் அவரது அமைச்சில் இடம் பெற்றதாகக் கூறப்படுகின்ற இரண்டு பெரிய ஊழல் முறைகேடுகளைத் தடுக்கத் தவறிவிட்டார் என்று தேர்தல் பிரசார காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகள் கிளப்பப்பட்டன.அவை தொடர்பான விசாரணைகள் அவரது கழுத்தை இறுக்கும் ஆபத்து உள்ளது. கொரோனா தொற்றுநோய்க்குள் நாட்டின் தொழிற் துறைகளையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்காக ஓலாஃப் ஸ்கோல்ஸ் தயாரித்த சுமார் 750 பில்லி யன் ஈரோக்கள் அடங்கிய அவசரகால நிதித் திட்டம் பெரும் நெருக்கடிக்குள் இருந்து நாடு மீண்டுவர உதவியது என்றுமதிப்பிடப்படுகிறது. அங்கெலா அம்மையார் வைரஸ் தொற்ளுக்குள்ளாகி இருந்த சமயங்களில் அரசின் முக்கிய கூட்டங்களை அவரே தலைமை வகித்து நடத்தியிருந்தார்.


1998 இல் முதல் முறையாக மத்திய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்தவர்ஸ்கோல்ஸ்.(ஜேர்மனிய மொழியில் நாடாளுமன்றம் Bundestag என்று அழைக்கப்படுகிறது.) அதன் பிறகு 2011-2018 காலப்பகுதியில் நாட்டின் ஹம்பேர்க்(Hamburg) நகரின் மேயராகவும் விளங்கியவர்.பதவிக்கு வந்தால் பிரான்ஸுடனானஉறவுகளைத் தொடர்ந்தும் அதே நெருக்கத்துடன் முன்னெடுக்கக் கூடியவர் அவர்என்று பிரெஞ்சு தலைவர்கள் நம்புகின்றனர். ஓலாஃப் ஸ்கோல்ஸின் சகோதரர் மருத்துவர் ஜென்ஸ் ஸ்கோல்ஸ் (Jens Scholz) கொரோனா நெருக்கடி காலத்தில் பிரான்ஸில் இருந்து அவசர நோயாளர்களை ஜேர்மனிக்கு இடம்மாற்றிச் சிகிச்சையளிப்பதற்கு நேரடியாகக் களத்தில்நின்று உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


2005 இல் அப்போதைய இடதுசாரி சான்சிலர் ஜெர்ஹார்ட் ஷூரோடர் (Gerhard Schröder) அவர்களது சகாப்தத்தின் பிறகு அந்தப்பதவியில் அமரப்போகின்ற இடதுசரியாக நோக்கப்பட்டாலும், ஓலாஃப் ஸ்கோல்ஸ் பெரும்பாலும் அங்கெலாகூட்டணி அரசின் பழமைவாதக் கொள்கைகளை ஆதரித்துவந்தவர் என்று அவரது எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.


அங்கெலாவுக்குப் பின் அவரது வாரிசாகவரக்கூடியவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டவர் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிவேட்பாளர் அர்மின் லாசெற் (Armin Laschet). ஆனால் தேர்தல் பிரசாரத்தின்இறுதிக் காலங்களில் அவரது தனிப்பட்ட செல்வாக்கு சரிவுகளைச் சந்தித்தது.


நாட்டை உலுக்கிய மழை வெள்ள அனர்த்தத்தின்போது அழிவுகளைப் பார்வையிட்ட சமயத்தில் அவர் நகைச்சுவை ததும்பசிரித்துப்பேசிய காட்சிகள் வெளியாகிக்கடும் விமர்சனங்களைக் கிளப்பி இருந்தன. எனினும் கடந்த சில நாட்களாகஅதிபர் அங்கெலா மெர்கல் அவரது கட்சியின் இறுதிப் பிரசாரக் கூட்டங்களில்அர்மின் லாசெற்றுக்கு ஆதரவாக் குரல் எழுப்பியிருந்தார்.


ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்ற தேர்தலின் முடிவுகள் அன்றிரவு முதல் தெரியவந்தாலும் அடுத்த சான்சிலர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்குச் சில தினங்கள் செல்லலாம். ஜேர்மனிய வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளுக்கும் தாம் விரும்பிய கட்சிக்கும் என இரண்டு வாக்குகளைச் செலுத்த முடியும். ஆனால் புதிய சான்சிலரை அவர்கள் நேரடியாகத் தெரிவு செய்வதில்லை.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுகின்ற கட்சி அல்லது கட்சிகள் அடங்கிய கூட்டணியே அடுத்த அரசுத் தலைவரைத் தெரிவு செய்யும். (படம் :அங்கெலாவின் பதவியில் அமருவார் என்று நம்பப்படுகின்ற வேட்பாளர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்.)

        - பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                   24-09-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More