Home இலக்கியம் கிராமிய சடங்கு முறைகளில் இராக்கையன் வழிபாடு – சதாசிவம் மகிழினி.

கிராமிய சடங்கு முறைகளில் இராக்கையன் வழிபாடு – சதாசிவம் மகிழினி.

by admin


மக்கள் தெய்வங்களுக்குச் செய்யும் சடங்குகளும், வழிபாட்டு நெறிகளுமே வழிபாட்டு முறை என்று கூறுவர். இவ்வழிபாட்டு முறைகள் மக்கள் நம்பிக்கை அடிப்படையில் இயற்கையில் கிடைத்தவற்றை கொண்டு தமக்கான முறைகளில் தெய்வங்களை வழிபடுகின்றனர். இதுவே பழம் தமிழர்களின் வழிபாடகவும் காணப்பட்டது. ஆனால் பிற்பட்ட காலங்களில் வந்த காலனிய ஆதிக்க செற்பாட்டால் இம் முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை சமகாலத்திலும் பார்க்க கூடியதாக உள்ளது. காலனிய ஆதிக்கம் என்றால் நாம் அனைவரும் மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்தையே கருதுவோம். ஆனால் தமிழ் சமூகத்தை பொறுத்த வரையில் ஆரியரின் வருகையும் பாப்பனிய சமூகத்தால் கொண்டுவரப்பட்ட சமஷ;கிருத மயமாக்கமூடான தழுவல்களுமே இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன.


பார்ப்பனிய சமூகத்தால் கொண்டுவரப்பட்ட சமஷ;கிருதமயமாக்கத்தால் இன்று பெரும்பாலான ஆலயங்களில் சமஷ;கிருத மொழியில் பூசையும், ஆகம முறைப்படி வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. கிராமிய சடங்கு முறையில் வழிபட்டுவந்த மக்கள் நாகரிகம் எனும் போர்வையில் தன்னிலை மறந்து சமஷ;கிருத ஆலய வழிபாட்டு முறைக்கு மாற்றி அமைக்கப்படுகின்றன. இவற்றுள் ஆகம முறைசார்ந்த ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகவும், ஆகமம்சார வழிபாட்டு முறையூடாக மரபு வழியாக பேணப்பட்டுவந்த தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.


காலனிய சிந்தனை மாற்றத்தால் கொண்டுவரப்பட்வையாக இவ் முறைகள் காணப்பட்ட போதிலும். குலவழி மரபுகளை தாங்கிவந்த வழிபாட்டு முறை எந்த வகையில் சிறு தெய்வங்களாக வகைப்படுத்த முடியும்! அச்சமூகம் சார்ந்த மக்களின் நம்பிக்கை அடிப்படையில் இன்றும் அவை பெரும் தெய்வங்களாகவே வழிபடப்பட்டு வருகின்றன. தமிழ் சமூகத்தில் சமஷ;கிருத மயமாக்கத்தால்; வந்த இவ் வகைப்படுத்தல் என்பது மாற்றி அமைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சிறுதெய்வம், பெருதெய்வம் என்பது அவரவர் நம்பிக்கை ஊடான வழிபாட்டு முறையாகவே அமையும். பெரும்தெய்வத்தை கடவுளாக கொண்ட ஆதிக்க நிலையில் ஏனையவற்றை கீழ்நிலைப்படுத்தி சொல்லுவது ஒரு கட்டமைத்த விடயமே அன்றி ஒவ்வொரு நம்பிக்கையும் அதுசார்ந்த தெய்வங்களும் அவரவருக்கு அவை பெரிதுதான்.


உலகப் பொது நிலையில் பார்த்தோமானால் ஆரம்ப காலங்களில் இயற்கையை வழிபட்ட மனிதர் பின் ஆவி வழிபாட்டையும் (மூதாதை வழிபாடு) பின் தனது சிந்தனை வளர்ச்சிக்கேற்ப இயற்கையில் கிடைத்தவற்றை கொண்டு புதிய அணுகு முறையில் அமைந்த வழிபாடுகளை மேற்கொள்ள தொடங்கினான். அவ்வாறு மாற்றம் பெற்று பல நாகரிகங்களையும் பல்வேறு தெய்வ வழிபாட்டு முறைகளையும் உருவாக்கி கொண்டான். அதனடிப்படையில் பழந்தமிழ் மக்களின் மரபுவழி வந்த வழிபாட்டிடங்களை பார்த்தோமானால் அவை பெரும்பாலும் மரங்களின் கீழ் அமைந்த கருங்கல் வழிபாடாகவோ அல்லது குறியீட்டு சின்னங்களை வைத்து வழிபடும் முறைகளாகவே காணப்படுகின்றன. இதனுடன் இணைந்ததாகவே மூதாதை வழிபாடும் சடங்குகளும் காணப்படுகின்றன.


இந்த வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் பல வகைகள் காணப்படுகின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்ற சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்களின் முன்னோர்கள் கற்று தந்த முறைப்படியும் மேற்கொண்டு வருகின்றனர்.


ஈழத்திருநாட்டில் பழந்தமிழர் சடங்கு முறை சார்ந்த கிராமிய வழிபாட்டிடங்கள் பல காணப்படுகின்றன. இவை பல்வேறு தெய்வங்களை கொண்ட வௌ;வேறு சடங்கு முறைகளை உள்ளடக்கியதாகவும் தத் தம் சமூகம் சார்ந்த நம்பிக்கை அடிப்படையில் தோற்றம் பெற்று மரபு வழியாக பேணப்பட்டு வருபவையாக காணப்படுகின்றன. அவ்வகையில் ஈழத்திருநாட்டில் வடபுலத்தில் வன்னிமா நகரில் இன்றைய வவுனியா மாவட்டத்தில் பழம் பெரும் கிராமமான சாஸ்திரிகூழாங்குளத்தில் அமையப்பெற்றுள்ள இராக்கையன் தெய்வ வழிபாட்டு முறையும் அதனுடன் தொடர்புபட்ட சில கிராமியசடங்கு முறைகளும் இன்றும் மரபு வழியாக பேணப்பட்டுவருகின்றதை காணமுடிகின்றது. ஒவ்வொரு பிரதேசத்திலும் அமைந்துள்ள வழிபாட்டிடங்கள் அப் பிரதேச மக்களின் ஆன்மீக வாழ்விற்கும், சமூக, கலைகள் சம்மந்தமான வாழ்வியல் வளர்ச்சிக்கும் தளமாக அமைந்துள்ளன.


வன்னிப் பிரதேசமானது அடர்காடுகளால் நிறைந்தும், குன்றா நீர்வளமும், குறையா செல்வ வளமும் பெற்று இயற்கையுடன் இணைந்த வாழ்விடமாக காணப்பட்டது. பிற்பட்ட போர் சூழலினால் பல்வேறு வடபுல மக்களின் இடப்பெயர்வுகளால் இன்று இத்தன்மை மாறி பல குடியிருப்புக்களையும், பல்வேறு இன, மத மக்கள் ஒன்றிணைந்து வாழும் பிரதேசமாக காணப்படுகின்றது. இதனால் மக்களின் தேவைகருதி பல்வேறு

குளங்கள் புணரமைக்கப்பட்டு அக் குளங்களை அண்டி கிராமங்கள் தோற்றம் பெற்றமை ஊடாக வன்னி மண்ணின் மகத்துவத்தை எடுத்துக் கூறலாம். இங்குள்ள அதிகளவான மக்களின் தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தம் காவல் தெய்வம் அல்லது குலதெய்வத்தை வழிபட்டு பின் தமது தொழிலில் ஈடுபடும் வழக்கம் உள்ளது. அவ்வகையில் இவ் சாஸத்;திரிகூழாங்குள மக்களின் விவசாயத் தொழிலுடன் தொடர்புபட்டதாகவே இராக்கையன் வழிபாடு காணப்படுகின்றது.


வன்னி நிலப்பரப்பில் மிக முக்கியமான மூன்று இடங்களில் மாத்திரமே இவ்வழிபாட்டுடன் கூடிய சடங்கு நிகழ்த்துகைகள் இடம்பெறுகின்றதாக அறியமுடிகின்றது. ஒன்று சாஸ்த்திரிகூழாங்குளம் இரண்டாவது இராக்கையன்குளம் மற்றது பம்பைமடு ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்றது. இராக்கையன் வயலும் வயல் சார்ந்த நிலப்பரப்பிற்குரிய காவல் தெய்வமாக சிறப்பிக்கப்படுகின்றார். இதில் சாஸ்த்திரிகூழாங்குளத்தில் அமைந்துள்ள இராக்கையன் வழிபாடு சுமார் முன்னூறு அல்லது நானூறு வருட பழமை பெற்றதாகும். சரியான எழுத்துரு ஆவணங்கள் கிடைக்காமையால் குறித்த காலத்திற்குரியது என கூறமுடியாதுள்ளது. ஆனால் வழிபாட்டு முறை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பான ஏடுகள் இச் சமூகத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அவற்றை தமது காப்புக்கருதி பூசாரிமார் வெளிப்படுத்துவதில்லை.
இக் கிராமத்தின் குளத்தை அண்மித்த பிரதேசத்தில் மண் அகழ்வின் போது 2000 வருட பழமை வாய்ந்ததாக கருதப்;படும் சில மண்ணாலான மண்சிற்பங்கள் (மனித உருவம் போன்ற விகார தோற்றமுடையவை) தொல்லியல் துறையினால் அடையாளம் காணப்பட்டு ஆய்விற்காக சில சிற்பங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளன. ஏனையவை வவுனியா கச்சேரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பாதுகாத்து வரப்படுகின்றது. அதனடிப்படைகளில் இக் கிராமம் வவுனியா மாவட்டத்தில் பழம்பெரும் வரலாற்றை கொண்ட கிராமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இராக்கையன் ஆலய அமைவிடமானது சாஸ்த்;திரிகூழாங்குள வயல் நிலப்பரப்பிற்கும் அதன் அருகில் உள்ள ஆலடிக்குளத்தின் பிரதேசத்திற்கும் உட்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பிரதான தெய்வமாக இராக்கையனும் அதனுடன் இணைந்ததாக பிள்ளையார், காட்டேறி, நாகதம்பிரான், ஊத்தகுடிப்பான் போன்ற தெய்வங்களும் காணப்படுகின்றன.


இராக்கையன் பொங்கல், வருடத்தில் ஒருமுறை மட்டும் இடம்பெறும் ஏனை தினங்களில் நீரினால் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஆரம்ப காலங்களில் ஆனி மாதத்தில் வரும் வளர்பிறையில் முதலாவது வெள்ளிக்கிழமையில் பொங்கல் சடங்கு இடம்பெற்றுவந்தது. ஆனால் இப் பிரதேசத்தில் சிவன் ஆலயம் வைக்கப்பட்ட பின்பு திருவிழா முறை மாற்றம் செய்யப்பட்டு ஆனி மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது ஐந்தாவது வெள்ளிக்கிழமையில் இராக்கையன் பொங்கல்

இடம்பெற்றுவருகின்றது. இதன்போது ஊர் பெரியவர்களால் பொங்கல் தினம் அறிவிக்கப்பட்டு. அதற்கான நன்கொடை ஊர்களில் சேகரிக்கப்படும். மக்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப பொங்கலுக்கான பொருட்கள், பணம், ஆடு, கோழி மற்றும் நேர்த்தி பொருட்களை வழங்குவார்கள். இவ் வழிபாட்டின் சிறப்பு என்னவெனில் இ;க் கிராமத்திற்குரிய பிள்ளையார் ஆலயம், முருகன் ஆலயங்களுடன் இணைந்ததாகவே இச்சடங்கு முறையுடன் கூடிய பொங்கல் விழா இடம்பெறும். பொங்கலின் போது பிள்ளையார், முருகனுக்கு சக்கரை பொங்கலும், இராக்கையன் பொங்கலில் வெண்பொங்கலும் பொங்கப்படும்.


பொருட்களுக்கான நிதி சேகரிக்கப்பட்ட பின் ஊர் பெரியவர்களால் பொங்கல் தினத்திற்கு முன் வரும் புதன்கிழமையன்று பூசைப்பொருட்கள், பண்ட பொருட்கள் வாங்கி வந்து ஆலயத்தினுள் உள்ள அறையில் வைத்து பூட்டப்படும். இராக்கையன் வழிபாட்டிற்குரிய பூசாரி 14 நாட்கள் விரதம் இருந்து பொங்கல் அன்று விடிய உணவு அருந்தாமல் மதியம் முருகன் ஆலயத்தில் இடம்பெறும் அன்னதானத்தில் உணவு உண்டால் மறுநாள் பூசாரி வேள்வியில் தான் உணவு உண்பார். இது மரபு வழியாக பூசாரிகளால் பேணப்பட்டு வரும் சடங்குசார் முறையாகும். பொங்கல் தினத்தன்று குளத்தடி பிள்ளையாருக்கு பூசாரி முறையில் பூசை இடம்பெற்று பொங்கல் வைக்கப்படும். பொங்கலினை வளந்து உரித்துகாரரிடம் ஒப்படைத்துவிட்டு முருகன் ஆலயம் செல்வார்கள்.
வளந்து என்பது வழமையாக பொங்கல் செய்ய பயன்படுத்தப்படும் மட்பானைக்கு பதிலாக சற்று வேறுபட்ட தன்மை உடையதாக காணப்படும். வளந்தின் அடிப்பக்கம் அகன்றும் வாய்பகுதி சற்று சிறுத்தும் காணப்படும். கிராமிய சடங்கில் இவ் வளந்து பானை அல்லது யத்து பானை முக்கியத்துவம் பெறுகின்றது. வளந்து உரித்துக்காரர்கள்; எனப்படுபவர்கள் பரம்பரையாக அத்தெய்வத்தை ஆதரித்து வந்தவர்கள் அல்லது அத் தெய்வத்துடன் நெருங்கிய தொடர்புபட்டவர்களாவர். இவர்களே வளந்து பெறுவதற்கு உரிமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள். முருகன் ஆலயத்திற்கு சென்றடைந்ததும் ஆலயத்திற்கு முன் நான்கு மூலைக்கும் தடி நட்டு வெள்ளைகட்டி மேலே தென்னங்குருத்து போட்டு பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். அதன் கீழ் மூன்று கல்வைத்து அடுப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதனருகே வெள்ளை நேர்ந்து பூசை இடம் பெற்று வளந்தில் பொங்கல் வைக்கப்படும். பின் வளந்து உரித்துகாரரிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் குளக்கட்டு பிள்ளையாரிற்கு செல்வார்கள். மதியம் 12 மணியில் இருந்து 1மணி மட்டில் படையல் வைத்து பூசை இடம் பெறும்.

குளத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு எதிரே இத்திமரத்தடியில் வீரபத்திரர், வன்னியனார், அகத்தியனார் ஆகிய தெய்வங்கள் உள்ளனர். இக் கிராம சூழலில் சித்த மருத்துவ துறையில் ஈடுபடுபவர்கள் உள்ளதால் இவர்களின் பிரதான தெய்வமாக வீரபத்திரனும், தமிழ் சித்தமருத்துவ மரபின் குருவாக அகத்தியர் காணப்படுவதால் அகத்தியனார் வழிபாடும் காணப்படுகின்றன. மற்றும் வன்னி மக்களின் காவல் தெய்வமான வன்னியனார் வழிபாடும் காணப்படுகின்றது. பிள்ளையாரிற்கு பொங்கல் படைக்கமுன் இவர்களுக்கான பிரசாதம் கடகம் அல்லது தட்டில் எடுத்து வைக்கப்படும். அதனுடன் இணைத்து வெற்றிலை, பாக்கு, வீபூதி, சந்தனம், குங்குமம், ஊதுபத்தி கற்பூரம் என்பவற்றை எடுத்து வெள்ளை துணியால் மூடி வைப்பார்கள். பிள்ளையாருக்கு பூசை முடிய ஆண்கள் மட்டும் சென்று அபிஷேகம் செய்து மடைபரவி பூசை இடம்பெறும்.


பின்பு பிள்ளையாரடியில் பிரசாதம் வழங்கியதும் அனைவரும் செல்ல பூசகர் பூசாரிக்கல்லடி சென்று திரிபோட்டு திரும்பி பார்க்காமல் செல்வார். பூசையின் ஆரம்பத்தில் பரிகலன் அழைப்பாக தெய்வத்தை அழைத்து பூசையில் கலந்து சிறப்பிக்குமாறும், பின் அதன் பாதையில் செல்ல அனுமதிப்பதாக வழிவிடல் சடங்கில்; திரிபோடல் இடம்பெறும். ஆரம்ப காலங்களில் திரி(விளக்கு திரி) என்பது நூல் துணியினால் சுருட்டி தயாரிப்பார்கள் அம் முறை இன்றும் நிலவிவருவதை இச்சடங்கில் காணலாம். பூசாரி திரியினை கையில் சுருட்டி எடுத்து சென்று தெய்வத்தை அதன் வழியில் அனுப்பும் போது திரியை கீழே போட்டுவிட்டு வருவார். இம்முறை கிராமிய சடங்கில் திரிபோடல் என்றும் ஆகமமுறைசார் ஆலயங்களில் காப்புக்கட்டல் என்றும் அழைக்கப்படும். அதன் பின்பு முருகனாலயம் சென்று பூசை இடம்பெற்று அன்னதானம் வழங்கப்படும். இவ் வழிபாட்டில் உள்ள சிறப்பு பூசை வேளையின் போது பறை மேளம் மற்றும் தப்பட்டை இசைக்கருவிகளில் ஒலி எழுப்பி கைச்சிலம்பு அணிந்து பூசகர் உருப்பெற்று ஆடிய வண்ணமே பூசை செய்வார். இவ்விரு ஆலய சடங்கு வழிபாடும் முடிந்ததும் மாலை ஆறு மணியளவில் மாலை முழக்கம் பறை மேளக்காரர்களினால் முழக்கப்படும்.


இவ் மாலை முழக்கம் நான்கு திசைக்கும் முழக்கப்படும் இத் தருணத்தில் ஆலயத்திற்கு குறுக்காக யாரும் செல்லமாட்டார்கள். ஏன் எனில் அம் மாலைப் பொழுதில் பறைமேள ஒலி எழுப்பி பரிகலன் அழைப்பதாக நம்பிக்கை ஒன்று உள்ளது. பரிகலன் எனப்படுவது தெய்வங்கள் அல்லது தேவர்கள், காவலுக்கு உள்ள தேவர்கள், மூதாதைகள் எனும் நம்பிக்கை உள்ளது. மாலைமுழக்கம் முடிய குறித்த நேரத்தில் பண்டபொருட்கள் எடுத்து வரப்படும். இவை ஆலய முன்றலில் உள்ள பழைய கிணற்றடி முன்பாக ஆடைச்சலவைத் தொழிலில் ஈடுபடுபவர்களால் வெள்ளை விரித்து மஞ்சள் தெளித்து அதில் பண்ட பொருட்கள் அடுக்கப்பட்டு வெள்ளை துணியால் மூடிவைப்பார்கள்.
இதன் பின் இப் பொங்கலுக்கான ஆரம்ப சடங்கு நிகழ்வு படிக்கட்டு பூசையுடன் தொடங்குகின்றது. முருகன் ஆலய பூசாரி கதவு திறந்து முருகனுக்கு பூசை செய்து கதவை மூடுவார். அதன் பின் படிக்கட்டு பூசை இடம்பெறும். அதில் வைக்கப்பட்ட அணிகலன்களில் மாலையை மட்டும் எடுத்து பூசாரி அணிவார். ஏனைய அணிகலன்கள், காவல் பொருட்கள் பூசாரிகல்லடிக்கு எடுத்து வரப்படும். பின் பூசாரிக் கல்லிற்கு அபிஷேகம் செய்து கல்லில் அணிகலன் வைத்து மடை பரப்பி பூசை இடம்பெறும். அணிகலன்களாக இராக்கையனுக்கு சற்று பெரிய பிரம்பும், ஊத்தகுடிப்பானிற்கு சற்று சிறிய அளவிலான பிரம்பும், சிலம்பு, மணி, பூச்செம்பு, கற்பூரத்தட்டு போன்றவைகளை குறிப்பிடமுடியும்.


இத்தருணத்தில் வாக்கு வாங்கும் சடங்கு இடம் பெறும். இதன் போது குலவழக்கின் படி குடும்பத்தில் மூத்த பெண்மணியிடம் பூசாரி வாக்கு வாங்குவார். அதன் பின்பு அப் பெண்மணி தனது சேலை தலைப்பை விரித்து படைத்த வெற்றிலை, பாக்கு, பழம் என்பவற்றை மடிப்பிச்சையாக வாங்குவார். வாங்கியதும் பூசாரி அப் பெண்மணி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதும் அணிகலன்களை எடுத்து பூசாரிக்கு அணிவித்து விடுவார். அதன் பின் பறைஒலி முழங்க பண்டமெடுத்தல் சடங்கு இடம்பெறும். மூடியிருக்கும் பண்ட பொருட்களை பூப்போட்டு, சாம்பிராணி காட்டி, பாரம்பரியமாக பயன்படுத்தும் கற்பூரத்தட்டில் வீபூதி நிரப்பி அதன் மேல் கற்பூரம் கொழுத்தி தீபம் காட்டுவார்.


தழிழ்மக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் இவ் பறை இசையும், கற்பூர தட்டில் தீபம் காட்டுதல் மரபு காணப்படுகின்றது. இம் முறை ஆகம வழிபாட்டு ஆலயங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கு பஞ்சாராத்தி, மற்றும் அடுக்கு தீபங்களும், நட்டுவமேளம் மற்றும் நாதஸ்வர இசைக்கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. பறைமேளத்தின் சிறப்பு அதன் இசை ஒலி கேட்டு தசையும் ஆடும் என்பர். அதன் வழி தெய்வமேறி தெய்வாதிகள் உருக்கொண்டு ஆட பறை ஒலி முழங்க பண்டமெடுக்கும் நிகழ்வு இடம் பெறும்.


தெய்வமேறிய பூசாரி பண்டபொருட்களை சுற்றி தண்ணீர் தெளித்து, தீபம்காட்டி, மணி ஒலி எழுப்பிய வண்ணம் வலம் வருவார். முதலில் வளந்துக்கள் பரவணிகாரர்களிடம் வழங்கப்படும். வளந்து வாங்குபவர் தலையில் வெள்ளை துணியால் மொக்காடிட்டு வலது பக்க தோளில் வளந்து பானையை வைத்து பானையின் வாய்ப்பகுதியும் வெள்ளை துணியால் மூடுவார்கள். பின் ஏனைய உரித்துகாரரிடம் பொங்கலிற்கான அரிசி, தேங்காய், பாக்கு, வெற்றிலை, வாழைப்பழக் குலைகள், பலாப்பழங்கள், இளநீர்,

சாரய பெட்டிகள் மற்றும் நேத்திக்கான பெருட்கள் ஆடு, கோழி என்பன வழங்கப்படும். வழங்கப்பட்ட பொருட்களை எடுத்து கொண்டு பூசாரி ஒற்றை தீபத்துடன் மணி அடித்து முற்செல்ல அவ் வெளிச்சத்தில் இராக்கையன் ஆலயம் நோக்கி அனைவரும் நடைபவணியாக செல்வார்கள்.
அங்கு சென்றடைந்ததும் ஓரிடத்தில் வெள்ளை விரித்து மஞ்சள் தெளித்து அதன் மீது பண்ட பொருட்கள் வைக்கப்படும். பின்பு நேர்தி பெருட்கள் வழங்கப்படும். இவ் ஆலயத்தினுள் ஆண்கள் மட்டுமே செல்வார்கள். இதில் பெண்கள் கொண்டுவரும் பால்ச்செம்பு, தீச்சட்டி என்பன வெளியில் வைத்து வாங்கப்பட்டு நேர்த்தி நிறைவேற்றப்பட்டதும் செம்பில் உள்ள பாலை வெளியில் ஊற்றி விட்டு செம்பை மீண்டும் வழங்குவர். பெண்கள் இவ்வழிபாட்டில் ஈடுபடமாட்டார்கள் இத்துடன் வீடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.


இதன் பின்பு ஆண்கள் மட்டுமே இவ் இராக்கையன் பொங்கல் சடங்கில் ஈடுபடுவார்கள். அதன்படி திரிநேர்தல் இடம்பெறும். இதில் தெய்வங்களுக்கென்று தனி தனி திரி போடல் எண்ணிக்கை உள்ளது அதன் முறைப்படி நான்கு திக்கும் நேர்ந்து பரிகலன் அழைத்து திரிபோடுவார்கள். பின் விளக்கு கொழுத்தி அவ் வெளிச்சத்தில் வெள்ளை நேருவார்கள். இதில் ஆடம்பர திரியோ அல்லது வெள்ளையோ பயன்படுத்தப்படாது. இங்கு சலவைதொழில் செய்பவர்களால் கொண்டுவரப்படும் நூல் துணியிலே திரிபோடல், வெள்ளை கட்டல் இடம்பெறும். வெள்ளை வேட்டியை எடுத்து இராக்கையன் மற்றும் ஊத்தகுடிப்பானின் பந்தல் மேல் பூசாரி நேர்ந்து எறிவார். பூசாரி நேர்ந்து எறிந்ததும் சலவை தொழிலாளியால் 4 பக்கமும்; வேட்டி சுற்றி கட்டப்படும். இது சடங்குடன் கூடிய கலை சார்ந்த அழகியல் அமைப்பாக இதை நாம் காணலாம். அந்த இடைவெளியில் இரவு வேளைக்கான அன்னதானம் இடம் பெறும்.


அதை தொடர்ந்து இப்பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார், இராக்கையன், காட்டேறி, நாதம்பிரான், ஊத்தகுடிப்பான் போன்றோருக்கு இதே ஓழுங்கில் பூசை இடம்பெறும். முதலில் பிள்ளையாருக்கு அடுத்ததாக இராக்கையனுக்கும் இடம்பெறும். இராக்கையனுக்கு வருடத்தில் ஒரு முறை மட்டுமே பால், தயிர், இளநீர் போன்ற அபிஷேக பொருட்கள் பயன்படுத்தி அபிஷேகம் இடம்பெறும். பிள்ளையார், இராக்கையனுக்கு அபிஷேகம் முடிந்ததும் கச்சை நேர்தல், அரிசி நேர்தல், வெற்றிலைநேர்தல், பாக்குநேர்தல், பழம் நேர்ந்து முறைப்படி வைப்பார்கள். கச்சை நேர்தல் என்பது வெள்ளை வேட்டியை இறைவனை நினைத்து நேர்ந்து நிலத்தில் விரித்து அதன் மேல் மடைபரவுவார்கள். ஆனால் காட்டேரிக்கு கச்சை நேருவதற்கு பதிலாக பச்சை நேர்தல் இடம்பெறும். பச்சை நேர்தல் என்பது காட்டில் உள்ள பன்னங்குலைகள் பறித்து வந்து அவற்றை நிலத்தில் பரவி அதன் மேல் மடைபரவி பூசை இடம்பெறும்.


பின் நாகதம்பிரான் மற்றும் ஊத்தகுடிப்பான் ஆகிய தெய்வங்களுக்கு கச்சை நேர்ந்து கட்டி பூசை இடம்பெறும். அதனை தொடர்ந்து வளந்து நேர்தல் இடம்பெறும். வெள்ளை விரித்து மூன்று வளந்தும் கழுவி எடுத்துவரப்பட்டு வீபூதி, சந்தனம், குங்குமம் பூசி ஒவ்வொரு தெய்வத்திற்கென்று இத்தனை என வெற்றிலை எண்ணிக்கை உள்ளது அதன்படி சுருள் சுற்றி வெள்ளை துணி கிழித்து கட்டுவார்கள். பின் சாம்பிராணி, ஒற்றைதீபம், கற்பூரதட்டு காட்டி வணங்குவார்கள். நாலு திக்கும் (நான்கு திசைக்கும்); நேர்ந்து வளந்தினுள் அரிசி போட்டுவார்கள். தேங்காய்ப்பாலினை நாலு திக்கும் நேர்ந்து வளந்தினுள் விடுவார்கள். பின் தேங்காய் உடைத்து அதன் இளநீரை விட்டு வளந்தை தூக்கி நாலு திக்கும் நேர்வார்கள். இவ் சடங்கு முறையே வளந்து நேர்தல் எனப்படும். அடுப்பு கல் கழுவி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு அடுப்பை மூட்டி வளந்தினை வைத்து தண்ணீர் விட்டு பரவணிக்குரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். பொதுவாக கிராமிய தெய்வ வழிபாட்டில் இம் முறையிலே வளந்து நேர்தல் இடம்பெறும். இதே முறையிலே அடுத்ததாக ஊத்தகுடிப்பானிற்கும் இடம்பெறும்.


வளந்து ஒவ்வொரு தெய்வத்திற்கும் என்று குறிப்பிட்ட அளவுகளை கொண்டு காணப்படும் பிள்ளையாருக்கு சற்று பெரிதாகவும், இராக்கையனுக்கு சற்று சிறிதாகவும், ஊத்தகுடிப்பானுக்கு அதை விட சிறிய வளந்தும் பயன்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும். வளந்து நேர்தலின் போது பறை, தப்பட்டை ஒலியுடன் தெய்வாதி உரு ஏறி ஆடியவண்ணம் காணப்படுவார். இவை எல்லாம் கிட்டதட்ட அதிகாலை 2 மணியளவில் இடம்பெறும். பொங்கல் பொங்கி முடிய மடைபரவல் இடம்பெறும். இதற்கென்று பாரம்பரியமாக பின்பற்றிவரும் முறையில் 1008 வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அதனுடன் வாழைப்பழம், பலாப்பழம், இளநீர் என கொண்டுவரப்பட்ட மடைப்பண்ட பொருட்கள் வைக்கப்பட்டும்.


இங்கு உள்ள ஒரு முறையாக இராக்கையன், காட்டேறி, ஊத்தகுடிப்பான் தெய்வங்களிற்கு சாராயம் வைக்கும் வழக்கம் உள்ளது. சாராயம் வைக்கமுன் அதன் வாய்ப்பகுதி திறந்து அதன் மீது வெற்றிலை நேர்ந்து பூசாரியால் கட்டப்பட்ட பின் வைக்கப்படும். அதனுடன் வளந்தில் பொங்கி எடுக்கப்பட்ட வெண் பொங்கலினை முறைப்படி எடுத்து படைப்பார்கள். படைத்து முடிய கிட்டத்தட்ட காலை 5 மணியளவில் பூசை இடம்பெறும். இதனை அடுத்து வழிவிடல் எனும் சடங்கு இடம்பெறும். இதன் போது பிள்ளையார், இராக்கையன், காட்டேறி, நாகதம்பிரான் ஆகிய நான்கு தெய்வங்களுக்கும் படைத்ததை எடுத்து மண்சட்டி ஒன்றில் போட்டு இளநீர், தீர்த்தம் விட்டு குழைப்பார்கள். அவற்றை ஓடி தெளிக்கும் இடம் உண்டு அதில் ஓடி தெளித்து திரிபோட்டு எறிந்துவிட்டு வந்து விடுவார்கள்.

அதே போல் ஊத்த குடிப்பானிற்கென்று தனி வழிவிடும் இடம் உண்டு இதே முறையில் சுற்றி தெளித்து வருவார்கள். இச்சடங்கை முடித்து வரும் பூசாரிக்கு உடனே பிறவளம்(உள்வளம்) எடுத்து வேட்டி மாற்றி கட்டப்படும். பின் பிள்ளையாரை வெள்ளை துணியால் மூடிவிடுவார்கள். இங்கு பலி இடுதல் முறை காணப்படுகின்றது. முதற் காலங்களில் பலியிடல் முறை இருந்தாலும் தற்காலத்தில் இம்முறை மாற்றம் செய்யப்பட்டு இரத்தம் காட்டல் மட்டுமே இடம்பெறுகின்றது. முதலாவதாக இராக்கையனுக்கு பலி இடல் சடங்கு இடம்பெறுகின்றது. இதன் போது 5 சாவல்கள் பலி கொடுக்கும் மரபு காணப்படுகின்றது. இதில் பலியிடப்பயன்படுத்தும் சாவலின் தலையிலுள்ள பூ அல்லது ஆட்டின் காதில் சிறு வெட்டிட்டு இரத்தம் காட்டல் இடம்பெறும். இவ் இரத்தத்தினை ஒரு சட்டியில் வெண்சாதம் எடுத்து அதனுடன் சேர்த்து வழிபடும் இடத்தில் கொண்டு போய் வழிபாடு செய்து திரி போட்டுவிட்டு வருவார்கள்.


அதே போல் ஊத்தகுடிப்பானிற்கு 3 அல்லது 5 கறுப்பு கோழி நேர்வார்கள். அதனையும் இதே முறையில் வழிபட்டு சுற்றி மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படும். பொதுவாக தமிழ் கலாச்சாரத்தில் மஞ்சள் நீர் தெளிக்கும் மரபு காணப்படுகின்றது. இதனை சுத்தம் செய்தல் அல்லது கிருமி நீக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர். சடங்கில் தீட்டு போன்ற விடயங்களின் அடிப்படையில் இவ் மஞ்சள் நீர் பயன்படுத்துவதை காணலாம். தெளித்து முடிய பிள்ளையார் மேல் போடப்பட்டிருந்த வெள்ளைதுணி நீக்கப்படும். இதன் பின் பூசாரி வீபூதி, சந்தனம், குங்குமம் வழங்கி பக்தர்களுக்கு படையல் வழங்கப்படும். பிள்ளையாருக்கு படைத்தது பூசாரிக்கும், இராக்கையனுக்கு படைத்தது பக்தர்களுக்கும், காட்டேறிக்கு படைத்தவை காட்டிற்கு வேட்டைக்கு செல்பவர்களுக்கும், ஊத்தகுடிப்பானது வளந்து குடிமக்களுக்கும் வழங்கப்படும். இதில் குடிமக்கள் என்போர் பறைமேளம் அடிப்பவர்கள், ஆடை சலவைத் தொழிலில் ஈடுபடுபவர்கள், பரியாரிகள் போன்றவர்களாவார்கள். இவர்களுக்கென தனிய சேவல்களும் வழங்கப்படும். பூசாரி வேள்விக்காக பூசாரிக்கு கோழிகள், ஆடுகள் வழங்கப்படும்.


இச்சடங்கு முடிய பூசாரியாரை மேளம் அடித்து அவர் வீட்டிற்கு அழைத்து செல்வார்கள்;. அங்கு வீட்டின் முன் கும்பம் வைத்து பூசாரிக்கு ஆரார்த்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து செல்வார்கள். வந்த அனைவரையும் உபசரித்து அன்றைய தினம் பூசாரி வேள்வி இடம்பெறும். ஆடு, கோழி வெட்டி சமைத்து ஏனைய பூசாரி வீடுகளுக்கு கொண்டுபோய் படைத்து பின் பொங்கலில் பங்கு பற்றிய அனைவருக்கும் சாப்பாடும், சாராயமும் வழங்கப்படும். இராக்கையன் பொங்கல் இடம்பெற்றதில் இருந்து 8 நாள் வரைக்கும் அவ் ஆலயத்தில் எந்த நேர்திகடனும், கற்பூரம் கொழுத்தல், தேங்காய் உடைத்தல் என்று எவ்வித வழிபாடும் இடம்பெறாது. 8ம் மடை அன்று பொங்கல் சடங்கின் போது போட்ட பந்தல் தடிகள் கழற்றி எடுத்து சுற்றம் செய்து முழு தெய்வங்களுக்கும் அபிஷேகம் இடம்பெற்று அன்றையதினம் மடை ஒன்று இடம்பெறும்.
இவ் எட்டாம் மடையுடன் இராக்கையன் சடங்கு பொங்கல் விழா இனிதே நிறைவுபெறும். இத்திருவிழா அறிவிக்கபட்ட நாளில் இருந்து இச்சமூக மக்கள் அனைவரும் ஊர் திருவிழாக்கு தயார் ஆகுவது போன்று ஒற்றுமையுடன் கோயில் பகுதிகளை வெளியாக்கல், தேவையான பொட்களை வழங்கல் என மன மகிழ்வுடன் ஈடுபடுவார்கள். வேறு ஊர்களில் திருமணம் ஆகி சென்றவர்கள் கூட இப் பொங்கல் விழாவிற்கு குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வார்கள். பகலில் வேலைக்கு சென்றாலும் கூட ஆண்கள் அனைவரும் இரவு வேளை இடம்பெறும் பொங்கலில் கலந்து ஊர் கூடி செயற்படுவார்கள்.


இத்தகவல்கள் அனைத்தும் 2021 இடம்பெற்ற இராக்கையன் பொங்கல் சடங்கில் நான் கலந்து கொண்ட போது இவ் ஊர்மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். மற்றும் இராக்கையன் ஆலயத்தில் இடம்பெறும் பொங்கல் சடங்கு தொடர்பாக அச்சமூகத்தை சேர்ந்த கணேசலிங்கம் டிலக்சன்;, கனகரெத்தினம் சதாசிவம் ஆகியவர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் என்பதையும் உறுதிப்படுத்தி கொள்கின்றேன். இதனுடன் தொடர்புபட்ட சில நம்பிக்கை அடிப்படையிலான வாய்மொழி தகவல்கள்; தவிர இது தொடர்பான வேறு சான்றாதாரங்கள் எதுவும் இல்லை.


ஊத்தகுடிப்பான் தொடர்பாக வயதான மூதாட்டி குறிப்பிடுகையில் ‘இத் தெய்வம் ஓரு பெண் தெய்வமாகும். இது பெண்களை பிடிப்பதாகவும், பிழையான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை தெய்வம் கண்டிக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. கூடுதலாக இவ் பெண்தெய்வம் அமைந்திருக்கும் பகுதி அடர்ந்த பற்றைக் காடுகளாக உள்ளது. இவற்றை சடங்கு நிகழ்த்துகையின் போதும் பற்றை காட்டை வெளியாக்காமல் அப்படியே வைத்து பெண் தெய்வ வழிபாடு இடம்பெறுவது வழக்கமாக இன்றும் தொடர்கின்றது. பண்டைய காலம் முதல் இன்று வரை அப் பிரதேசத்தால் கன்னி பெண்கள் செல்வதில்லை’ என்றும் குறிப்பிட்டார்.


அண்மையில் சிலர் ஊத்தகுடிப்பான் தெய்வம் செல்லும் வழியில் இருந்து மது அருந்தியவர்கள் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் பீடிக்கப்பட்டு தீராநோயினால் வருந்தி அதன் பின்பு அவர்கள் தவறுணர்ந்து ஆலயம் வந்து மடைபோட்ட பின்னரே மாறியதாக நம்பிக்கை உண்டு. காட்டேறி எனப்படும் தெய்வத்திற்கு வேட்டைக்கு காடுகளுக்கு செல்பவர்கள் பாதை மாறுவதும் அங்கு மயங்கி விழுவது போன்ற தீய சக்திகளின்

செயற்பாடுகளில் இருந்து விடுபட இவ் வழிபாடு செய்யப்படுகின்றது. காட்டேறி தெய்வத்திற்கு நேர்ந்து சென்றால் சென்ற வேலை சிறப்பு பெற்று வீடு திரும்புவர் என்ற நம்பிக்கை உள்ளது. இதனாலே பொங்கலின் போது பன்னங்குழை வைத்து வழிபடும் மரபும் இவர்களிடம் உள்ளது.
இராக்கையன் தொடர்பாக வயதான அம்மாவிடம்; வினவிய போது ‘பண்டைய காலம் முதல் இன்றுவரை இராக்கையனின் நடமாட்டம் இப்பிர தேசங்களில் காணப்படுவதாக குறிப்பிட்டார். அதாவது கோயில் அமைந்த பிரதேசத்திற்கு அண்மையில் யாரையும் குடியிருக்க விடாது என்ற நம்பிக்கை உள்ளது. முன்னொரு காலத்தில் 80 வயது மூதாட்டி கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 100அ தொலைவில் உள்ள வீட்டில் குடி அமர்ந்தபோது. அது இராக்கையனின் பாதை இதில் உண்னை குடி இருக்கவிடாது என்று மக்கள் கூறியதும். அம் மூதாட்டி இராக்கையனை வேண்டி இவ்வழி செல்லாது வீதிவழியாக செல்லுமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் இரவு இயற்கை அழைப்பு கருதி வீட்டின் வெளியே வந்தபோது பிரம்மாண்ட ஒளியில் ஓரு ஆண் உருவம் வீதிவழி சென்றதை கண்டதாகவும் இச் சமூகத்தவரிடம் கூறியுள்ளார். தனது வேண்டுகோளை ஏற்று இராக்கையன் பாதை மாற்றி சென்றதாக நம்பிக்கை வழிவந்த கதை ஒன்றும் உள்ளது’ என கூறினார்.


மற்றுமொரு பெரியவர் குறிப்பிடுகையில்; ‘முதியவர் ஒருவர் வயற்காவலின் போது வெற்றிலை, பாக்கு போடும் வழக்கமுள்ளது. அவரிடம் அன்று பாக்கு மட்டும் இருந்த போது இராக்கையனை நினைத்து என்ன ராக்கையப்பா ஒரு வெற்றிலை பாக்கு போட கூட வழி இல்லை என மனம் வருந்தி, உறக்கத்திற்கு சென்று எழும்பிய போது அவர் வசித்த குடிலின் மேல் சீதுளாய் கொப்பு ஒன்று போடப்பட்டிருந்ததை கண்டு வியப்புற்றதாக நம்பிக்கை அடிப்படை வந்த கதைகளுண்டு’ என குறிப்பிட்டார். இக் கிராமத்திலே வெற்றிலைக்கு பதிலாக சீதுளாயை பாக்குடன் போடும் வழக்கமுள்ளது. இது துளசியை ஒத்த ஒருவகை தாவரம் ஆகும்.


மற்றும் ஒரு நபர் குறிப்பிடுகையில் ‘அண்மித்த காலத்தில் இராக்கையன் பரவணிக்குரியவர் அவ்வழி செல்லும் போது இராக்கையனை வழிபடாது மறுபக்கம் திரும்பி சென்றதால் அவரது கழுத்து மற்றப்பக்கம் பார்த்தவண்ணம் சுழுக்கியதாகவும் பின்பு இராக்கையனுக்கு நேர்ந்து பூசாரியால் நூல் முடிந்து போட்டதும் சுழுக்கு எடுபட்டதாக’ குறிப்பிட்டார். நான் அறிந்த வகையில் அண்மையில் கோயில் உண்டியலை திருடி சென்றவர். ஏதோ இடம்பெற்று எடுத்த பொருள் அனைத்தையும் துணி ஒன்றில் கட்டி அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், சாராயம் போன்றவற்றை வைத்து வழிபட்டு சென்றார். இவை இராக்கையனின் நடமாட்டம் மற்றும் நம்பிக்கைக்குரிய தகவலாகும். வாய்மொழி வந்த வரலாற்று தகவல்களே இவ் வழிபாட்டிற்குரிய ஆதாரங்களாக விளங்குகின்றன. சிலரிடம்; இராக்கையன் என்பவர் மூதாதையாக இருக்க கூடும் என்ற நம்பிக்கையும் காணப்படுகின்றது. அவ்வகையில் அச் சமூகம் சார்ந்த நம்பிக்கை அடிப்படையிலே இராக்கையன் பொங்கல் சடங்கு இடம்பெற்று வருகின்றது. தம் ஊர்சார்ந்த காவல் தெய்வமாக இம் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.


இராக்கையன் தெய்வ வழிபாடு வயலுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. அதாவது சாஸ்த்திரகூழாங்குள வயல்வெளி, ஆலடிக்குள வயல்வெளியில் உள்ளவர்கள் வயல் அறுவடை வெட்டுதலின் போது முதலில் கிழக்கு பார்த்து சூரியனையும், பிள்ளையாரையும் நினைத்து நேர்ந்து தேங்காய் உடைத்து, தேங்காயின் இரு பகுதிக்குள் நெல் உருவி போட்டு, கற்பூரம் கொழுத்திய பின் நெல்லினைவெட்ட ஆரம்பிப்பார்கள். அதனுடன் ஒவ்வொரு வயல்காரரும் இராக்கையனுக்கு நேர்ந்து தேங்காய், கற்பூரம், சாராயம் என்பவற்றை அவரவர் வயலுக்குள் அவர்கள் வழமையாக வைக்கும் இடம் ஒன்றிருக்கும் அதற்குள் ஒழித்து வைப்பார்கள். வயல் வெட்டின் போது எந்த பிரச்சனையும் இல்லாது நல்லபடியாக வெட்டி முடியனும் என்று நேர்வார்கள். இப்படி வைக்காவிட்டால் அனர்த்தம் நேரும் என்பது இவர்கள் நம்பிக்கையாக உள்ளது. நல்படியாக வெட்டு முடிந்ததும் அதை எடுத்து கொண்டு போய் இராக்கையன் வழிபாட்டிடத்தில் வைத்து கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைப்பார்கள். சிரட்டையில் இராக்கையனுக்கு சாராயத்தை எடுத்து வைத்து விட்டு மிகுதியில் சிறிதளவை களத்தில்(வயலில்) தெளித்துவிட்டு, வேலையில் ஈடுபட்ட மக்களுக்கு வழங்குவார்கள். இவ்வாறு இராக்கையன் மீதான நம்பிக்கை இக் கிராம மக்களிடையே உயர் நிலையில் காணப்படுகின்றது.


இவ் முறைகளிலே பெரும்பாலான பழந்தமிழ் மக்களின் வழிபாட்டு முறைகள் அமைந்திருப்பதை காணமுடிகின்றது. ஆனால் இன்று சமஷ;கிருத மயமாக்கத்தால் ஆகம வழிபாட்டு முறை கோயில்களாக மாற்றம் பெற்று வருகின்றன. சாதிய வர்க்கப் பாகுபாடுகள், தீண்டாமை, புனிதம், தூய்மை, தீட்டு போன்ற காரணிகளாலும் மிருகபலிக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் மற்றும் ஆலய புணரமைப்பு, ஆலய நிர்வாக முறைகளின் காரணமாக இவ்வாறான சடங்கு முறை சார் பாரம்பரிய வழிபாட்டிடங்கள் ஆகம வழிபாட்டிடங்களாக மாற்றம் பெற்று வருகின்றது. ஒவ்வொரு வழிபாட்டு முறைக்குள்ளும் அச்சமூகம் சார்ந்த பல்வேறு பண்பாட்டு, வாழ்வியல் முறைகள் காணப்படுகின்றன. அவை இன்று மருவி வருதல் அல்லது மாற்றம் பெறுதல் என்பது வருந்தத்தக்க விடயமாகும். ஆகவே இவற்றை அதன் தன்மை மாறாது அதற்குரிய

சிறப்பம்சங்களுடன் பேணுவது இன்றை கால சூழலில் முக்கிய விடயமாக உள்ளது. மரபு வழி வருபவர்கள் இவற்றை பொருட்படுத்தாமல் அல்லது அலற்சியமாக எண்ணினாலோ நமது எதிர்கால சந்ததியினருக்கு அவர்களிற்கான அடையாளம் என்பது இல்லாமல் போகும் நிலை உருவாகும்.


போர்கால சூழலின் பின் பல்வேறு ஆலயங்கள் அழிக்கப்பட்டும் தமது அடையாளம் மற்றும் தனித்துவத்தை இழந்தும் வருகின்றது. பிற சமயத்தழுவல்கள் மற்றும் தமிழின அடையாளங்கள் அழிக்கப்பட்டு தம் அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்படும் சூழலில் இருந்து வருகின்றோம். இதனை உணர்ந்து அனைவரும் செயற்படுவதன் மூலம் நம் பழந்தமிழ் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை பேணி நமக்கான அடையாள இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளமுடியும். சமஸ்கிரத ஆலயங்களை விட சடங்கு ஆலயங்களலே அதிகளவான சூழல் சார்ந்த, நம் பண்பாடு சார்ந்த விடயங்கள் உட்பொதிந்துள்ளன. அதனால் அவற்றை சிறு தெய்வம் என எண்ணும் பிற்போக்கான சிந்தனையில் இருந்து விடுபட்டு. அவற்றையும் முன்நிறுத்தி வலுப்படுத்துவதுவதற்கான செயற்திட்டங்களில் ஈடுபடுவதன் மூலமே தமிழ் இன அடையாள அழிப்பை தடுக்கவும் வலுப்படுத்தவும் முடியும்.
சதாசிவம் மகிழினி
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More