இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் 11 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பெரும் நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் குப்பை கூழங்கள் ஆறுகளில் தேங்கி சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் இந்தோனேசியாவின் தன்னார்வ அமைப்புகள் வெள்ளம் வடிந்த பிறகு, ஆறுகளில் தேங்கிய குப்பைகூழங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை செய்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள உயர்நிலை பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் (15.10.21) அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்ட போது சிலர் ஆற்றில் இருந்த பாறைகள் வழியாக ஆற்றை கடக்க முயன்றனர்.
21 மாணவர்கள் ஒருவரின் கையை ஒருவர் பிடித்தவாறு பாறையில் நடந்து சென்ற வேளை முன்னால் சென்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென கால் இடறி ஆற்றுக்குள் விழுந்தார். அவரை தொடர்ந்து மற்ற 20 மாணவர்களும் அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர்.
அருகில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் இறங்கி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளை பயன்படுத்தி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் இந்த தேடுதல் நீடித்தது இருந்த போதிலும் 11 மாணவர்கள் பிணமாகவே மீட்கப்பட்டதாகவும், 10 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.