Home உலகம் சுட்டுக் கொன்று நதியில் வீசப்பட்ட அல்ஜீரியர்களுக்கு மக்ரோன் அஞ்சலி!

சுட்டுக் கொன்று நதியில் வீசப்பட்ட அல்ஜீரியர்களுக்கு மக்ரோன் அஞ்சலி!

by admin


“மன்னிக்க முடியா குற்றம்” என்கிறது எலிஸே மாளிகை!

1961 இல் பாரிஸ் பொலீஸாரால் படு கொலை செய்யப்பட்ட அல்ஜீரிய ஆர்ப்பாட்டக்காரர்களின் அறுபதாவது நினைவேந்தல் நிகழ்வில் அதிபர் மக்ரோன் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

பாரிஸ் நகரின் மத்தியிலும் புற நகரங்களிலும் அமைதியாகப் பேரணி நடத்திய அல்ஜீரிய நாட்டவர் மீது நிகழ்த்தப்பட்டமிக மோசமான இந்தப் படுகொலை, உலகப் போருக்குப் பின்னரான பிரான்ஸின் வரலாற்றில் ஓர் இருண்ட அத்தியாயமாகக் கொள்ளப்படுகிறது.

நினைவேந்தல் நிகழ்வில் பிரான்ஸின் அதிபர் ஒருவர் பங்குபற்றுவது இதுவே முதல் முறை ஆகும். அல்ஜீரியப் போருக்குப் பின்னர் பிறந்த முதலாவது அதிபர் என்ற வகையில் மக்ரோனின் பிரசன்னம் கடந்த கால வரலாறு மீதான புதிய தலை முறையின் அணுகுமுறையாகவும் நோக் கப்படுகிறது.

அல்ஜீரியர்கள் பலர் சுடப்பட்டு செய்ன் நதியில்(Seine) வீசப்பட்டதன் நினைவிடங்களில் ஒன்றாகிய ‘பெஸோன்ஸ்’ என்ற பாலத்தில் (pont de Bezons) அதிபர் மக்ரோன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பெஸோன்ஸ் பாலம் பாரிஸின் புறநகராகிய Colombes பகுதியில் – பாரிஸ் நகரையும் இல் து பிரான்ஸ் பிராந்தியத்தையும் குறுக்கறுத்துச் செல்லும் செய்ன் நதி மீது- அமைந்துள்ளது.

மக்ரோன் அவ்விடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய பிறகு உரை எதனையும் ஆற்றவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் எலிஸே மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. இந்தப் படுகொலைகளை”மன்னிக்க முடியாத ஒரு குற்றம்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

“அன்றைய இரவில் பாரிஸ்பொலீஸ் அதிகாரி மொறிஸ் பப்போன் (Maurice Papon) தலைமையில் இழைக்கப்பட்ட குற்றங்கள் குடியரசால் மன்னிக்கமுடியாதவை” (les crimes commis cette nuit-là sous l’autorité de Maurice Papon sont inexcusables pour la République”) என்றுஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


?படுகொலையின் பின்னணி என்ன?


பிரான்ஸின் காலனி ஆதிக்கக் காலப் பகுதியில் அல்ஜீரிய மக்களது சுதந்திரப் போராட்டத்துக்குஎதிராக அந்த மண்ணில் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் போரை எதிர்த்த பிரான்ஸ் வாழ் அல்ஜீரிய நாட்டவர் மீது பாரிஸில் புரியப்பட்ட இரக்கமற்ற படுகொலைகளே “1961 பாரிஸ் படுகொலைகள்” என்று அழைக்கப்படுகிறது.

1961 இல் அல்ஜீரிய சுதந்திரப் போர்முடிவுக்கு வந்த இறுதிக் கால கட்டத்தில் அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியின் (National Liberation Front),பிரான்ஸ் பிரிவினரால் பாரிஸில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


அந்த ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக “அல்ஜீரிய முஸ்லீம்களுக்கு மட்டுமான” ஊரடங்கு உத்தரவை அன்றைய பாரிஸ் பொலீஸ் தலைமைத்தளபதி மொறிஸ் பப்பொன் (Maurice Papon) என்பவர் அமுல் செய்திருந்தார்.


பாரிஸிலும் சூழவுள்ள இடங்களிலும் ஊரடங்கை மீறி ஒன்று கூடிய ஆண்கள் பெண்கள் அடங்கிய அல்ஜீரியர்கள் இனப்பாகுபாடு காட்டும் ஊரடங்கு உத்தரவுக்குத் தங்கள் எதிர்ப்பை அமைதி யான வழிமுறைகளில் வெளிப்படுத்த முயன்றனர். பாரிஸ் பொலீஸ் தளபதி மொறிஸ் அந்த எழுச்சியை அடக்கி ஒடுக்குமாறு உத்தரவிட்டார்.


சுமார் 30-40 ஆயிரம் அல்ஜீரியர்கள் பங்கு பற்றிய பேரணிகளைப் பொலீஸ் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது . ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு முகாம்களில் தள்ளப்பட்டனர்.


பொலீஸார் இறப்பர் ரவைகளுக்குப் பதிலாக நிஜமான குண்டுகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட்டனர். ஒக்ரோபர் 16-17 ஆம் திகதி இரவில் பல டசின் கணக்கான அல்ஜீரியர்கள் படுகொலை செய்யப்பட்டு செய்ன் நதிக்குள் மூழ்கடிக்கப்பட்டனர்.


பாரிஸ் நகரின் மத்தியில் புகழ்பெற்றசென் மிஷல் தேவாலயத்தின் அருகே அமைந்துள்ள சென் மிஷல் பாலத்தில்வைத்து பலர் சுடப்பட்டும், கைகளைக் கட்டியும் நதியில் வீசப்பட்டனர் என்பதைநேரில் கண்டவர்கள் பின்னர் உறுதிப்படுத்தினர்.


பொலீஸ் வன்முறைகளில் ஆக மூன்று பேர் மட்டுமே உயிரிழந்தனர் என்று உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கைதெரிவித்தது. ஆனால் பல டசின் கணக்கானவர்கள் அல்லது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று சுயாதீன விசாரணையாளர்கள் கூறிவருகின்றனர்.


அன்றைய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் படுகொலைகள் பற்றிய உண்மைகளை மூடி மறைத்தமை பின்னர் பெரும்சர்ச்சைகளாக வெடித்தன. ஒரு படுகொலை நிகழ்ந்தது என்ற உண்மையை பாரிஸ் அரச சட்டவாளர் அலுவலகம் 1999 இலேயே முதல் முறையாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது.


பின்னர் 2012 இல் இந்தப் பொலீஸ் படு கொலைகளை “இரத்தக் களரியான ஓர் அடக்குமுறை” என்று முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட் ஒப்புக்கொண்டார். அறுபது ஆண்டுகள் நிறைவடையும் இத்தினத்தில் பிரான்ஸ் அரசின் உத்தியோகபூர்வமான மன்னிப்பை மக்ரோன் வெளியிடுவார் என்று பாதிக்கப்பட்ட அல்ஜீரியர்களும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

            -பாரிஸிலிருந்து குமாரதாஸன். 
                                                      17-10-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More