முதல்தர வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் இன்று முதல் 17ம் திகதிவரை வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியிலிருந்து உலகின் முதல்தர வீராங்கனையும், நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் பொருட்டும், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாகவும் இநதப் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
இதேபோல் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபிரும் விகியுள்ளாா். . அவர்களுக்கு பதிலாக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), 10-வது இடத்தில் உள்ள பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரிவுகளுக்கு மெக்சிகோ நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதில் ‘சீச்சன் இட்சா’ பிரிவில் சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும், ‘தியோதி அகான்’ பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோா் இடம் பிடித்துள்ளனர்.
இதில் ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடி லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் ஒற்றையர் போட்டிகளில் கிரெஜ்சிகோவா-கோன்டாவெய்ட், கரோலினா பிளிஸ்கோவா-கார்பின் முகுருகா ஆகியோர் போட்டியிடுகின்றனா்.
அதேபோன்று பெண்கள் இரட்டையர் பிரிவிலும் போட்டயில் ஷூகோ அயமா-எனா ஷிபஹரா (ஜப்பான்), சமந்தா ஸ்டோசுர் (அவுஸ்திரேலியா)-ஜாங் ஷூய் (சீனா) உள்பட 8 இணைகள் கலந்து கொள்கின்றனா் .