Home இலங்கை இந்தியாவால் இலங்கையில் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவு?

இந்தியாவால் இலங்கையில் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவு?

by admin

படக்குறிப்பு,இந்திய பிரதமர் நரேந்திர மோதி – சீன அதிபர் ஷி ஜின்பிங்: கோப்புப்படம்

இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சீனா குறித்த மின்சக்தி திட்டத்தை கைவிட தீர்மானித்திருந்த பின்னணியிலேயே, அதானி நிறுவனத்திற்கு வடக்கின் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை கையளிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விசேட சலுகைகளை வழங்கி, நாட்டின் வெளிவிவகார கொள்கைகள் நிலையில்லாது காணப்பட்ட நிலையில், சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்பட்ட அதிகாரங்கள் தற்போது வலுவிழந்து வருவதாக சர்வதேச தொடர்புகள் குறித்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், குறித்த திட்டமானது இந்தியாவிற்கு எந்தளவு இலாபகரமானது? என்பது குறித்தே ஆராய்கின்றோம்.

மூன்றாவது தரப்பினால் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்னை

யாழ்ப்பாணத்திற்கு சொந்தமான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்ட மின்சக்தி திட்டத்தை தாம் கைவிட தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டது.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் கடந்த முதலாம் தேதி ஈடுபட்டிருந்த தருணத்திலேயே, சீன தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த உத்தேச மின்சக்தி திட்டம் கைவிடப்படும் சந்தர்ப்பத்திலேயே, மாலத்தீவில் 12 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கத்துடன் நவம்பர் மாதம் 29ம் தேதி ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக தூரகம் அறிவித்துள்ளது.

”சினோ சோ ஹைப்ரிட் டெக்னாலஜி”” என்ற சீன நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்தியாவின் அழுத்தம்?

சூரிய மின்சக்தி திட்டம்
படக்குறிப்பு,சூரிய மின்சக்தி திட்டம்

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் மின்சக்தி திட்டத்திற்கான விலை மனுக்கோரலை சீனாவிற்கு வழங்கியமைக்கு, இந்தியா 2021ம் ஆண்டு முதல் காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு கடுமை எதிர்ப்பை வெளியிட்டது.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள குறித்த மூன்று தீவுகளிலும் மின்சக்தி கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம், இந்த ஆண்டு ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்டு, சீனாவிற்கு வழங்கப்பட்டது.

இந்த திட்டமானது, இலங்கை மின்சார சபையினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் மின்சார விநியோகத்தை மேம்படுத்துவதற்குள்ள திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த நிலையில், இந்தியாவின் அழுத்தம் குறித்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்புகள் குறித்த பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹசித் கந்தஉடஹேவா கருத்து வெளியிட்டார்.

”முதலில் சீனாவிற்கே இந்த திட்டம் கையளிக்கப்பட்டது. சீனாவிற்கு இந்த திட்டம் கையளிக்கப்பட்டதன் பின்னர், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. ஏனெனில், குறித்த மூன்று தீவுகளும், கச்சத்தீவு மற்றும் இந்தியா – இலங்கை ஆகிய கடல் எல்லை பகுதியில் உள்ளமையே இதற்கான காரணம். இவ்வாறான வெளிநாட்டு தலையீடு அல்லது வெளிநாடொன்றின் மின்சக்தி திட்டம் இந்தியாவிற்கு அருகில் ஸ்தாபிக்கப்படுகின்றமையானது, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இதன்படி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பிய இந்தியா, இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்தது”

நெகிழ்வான வெளியுறவுக் கொள்கை

”அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, 2015ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சமப்படுத்தி செயற்பட்டதை நாம் அவதானித்தோம். குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தி செயற்பட்டார். புதிய நிதி அமைச்சர் பதவியேற்றதன் பின்னர், சீனாவின் அதிகாரத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக, சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சலுகைகளை வழங்கி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை எப்படியாவது சமப்படுத்த தேவைப்பட்டது. இந்த மூன்று நாடுகளுக்கும் நாம் முக்கியத்துவம் வழங்குகின்றோம் என்பதனை வெளிகாட்ட வேண்டியிருந்தது. குறிப்பாக சலுகைகள் வழங்குவதை வெளிகாட் வேண்டியிருந்தது. இவ்வாறான நிலையிலேயே, அதானியின் வருகையின் பின்னர், இந்த தீவுகளை இந்தியாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது” என கலாநிதி ஹசித் கந்தஉடஹேவா தெரிவித்தார்.

”சீனா தமது எல்லையை அண்மித்து முன்னெடுக்கும் திட்டத்தை இந்தியாவினால் நிறுத்திக் கொள்ள முடிந்தது. அதேபோன்று, வடக்கில் இந்தியாவிற்கு விசேட திட்டங்களை செயற்படுத்த முடிந்துள்ளது. இந்தியாவின் செயற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை காட்டுவதற்கே அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். உண்மையில் இந்த திட்டம் இந்தியாவிற்கு எந்தளவிற்கு லாபகரமானது என்பதில் பிரச்னை உள்ளது”

”இந்தியாவின் பாதுகாப்பை உருவாக்கும் செயலாகும். உண்மையில், இலங்கையின் மின்சக்தி துறைக்குள் பிரவேசிப்பதற்கும், இலங்கையின் பொருளாதாரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் எந்தவொரு தேவையும் கிடையாது. அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை காண்பிக்கவே இந்த திட்டத்தை எடுத்துள்ளனர்” என அவர் கூறுகின்றார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிகொணர்ந்த விடயம்

அதானி சுரங்கத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போராட்டம்
படக்குறிப்பு,அதானி சுரங்கத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போராட்டம்

”மின்சார சபையின் தலைவர் நவம்பர் மாதம் 25ம் தேதி நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை எழுதுகின்றார். வடக்கு மாகாணத்தில் அதாவது, மன்னார் முதல் பூநகரி வரையான பிரதேசம் வரை 500 மெகா வோர்ட் காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு உடனடியாக வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த கடிதத்தின் மூன்றாவது சரத்தில் கூறப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

கொழும்பில் டிசம்பர் மாதம் 6ம் தேதி இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

”இந்த நாட்டின் கேள்விகள் இரவு வேளையிலேயே அதிகம் என்பதனை இந்த நாட்டின் பிரஜைகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கேள்வியானது, 3000 மெகா வோர்ட்டிற்கும் குறைவானது. காற்றாலை மற்றும் சூரிய மின்சார திட்டத்தின் மூலம் முழு நாட்டிற்கும் மின்சாரத்தை விநியோகிக்கும் வல்லமை, மன்னார் முதல் பூநகரி வரையான பிரதேசத்திற்கு உள்ளது. இந்த திட்டத்திற்கு மின்சார சபை விலை மனுக்கோரலை கோரியுள்ளது. இந்த விலை மனுக்கோரலுக்காக பெரும்பாலானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவரையும் ரத்து செய்து, அதானி நிறுவனத்திற்கு இதனை வழங்க போகின்றார்கள்” என அவர் மேலும் கூறினார்.

அதானி நிறுவனம் மன்னாருக்கு விஜயம்

கெளதம் அதானி
படக்குறிப்பு,கெளதம் அதானி

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதியை அபிவிருத்தி செய்யும் அதானி நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் முன்னணி செல்வந்தருமான கௌத்தம் அதானி குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் கடந்த ஒக்டோபர் மாதம் 25ம் தேதி மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த குழுவினர் ஒக்டோபர் மாதம் 24ம் தேதி நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

துறைமுகத்தின் மேற்கு பகுதியின் அபிவிருத்தி மற்றும் மின்சக்தி திட்டங்கள் குறித்து, இலங்கை அதிகாரிகளுடன் அவர்கள் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

எனினும், இந்த திட்டத்தை இந்தியாவிற்கு வழங்க அமைச்சரவை தீர்மானத்தை எட்டவில்லை என கடந்த 7ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்திருந்தார்.

”அதனூடன் தொடர்புடைய தீர்மானம், உரிமை தரப்பிற்கு இடையில் கொடுக்கல் வாங்கல் முறையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அமைச்சரவை தீர்மானம் எட்டப்படவில்லை” என அவர் கூறினார்.

சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவா?

சீனா
படக்குறிப்பு,சீனா

சீனாவிற்கு ராஜதந்திர ரீதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை என கலாநிதி ஹசித் கந்தஉடஹேவாவின் கருத்துக்கு அமைய வெளிப்படுகின்றது.

”சீனாவின் திட்டமொன்று இலங்கையில் இல்லாது போன ஒரு சந்தர்ப்பம். எனினும், வடக்கு பகுதியிலோ அல்லது துறைமுகத்தை அண்மித்த பகுதியிலோ சீனா இதற்கும் மேலாக விடயத்தை முன்னெடுக்கக்கூடும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்து அல்ல. ஏதேனும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும். பெரும்பாலும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து திட்டமொன்று ஆரம்பிக்கப்படும். இந்தியா – திருகோணமலை திட்டத்துடன், சீனாவும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. பெரும்பாலும் அபிவிருத்தி திட்டமொன்றுக்கு சீனா நிதி வழங்கக்கூடும்” என அவர் கூறினார்.

தமக்கு இலங்கை இல்லாது போனாலும், இந்த வலயத்தில் இந்தியாவிற்கு எதிராக செயற்படக்கூடிய நாடொன்றுடன் தாம் தொடர்புகளை பேணுகின்றோம் என்பதனை வெளிப்படுத்துவதற்காகவே மாலத்தீவில் தமது திட்டத்தை ஸ்தாபிப்பதற்கு சீனா முன்வந்துள்ளது என சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹசித் கந்தஉடஹேவா தெரிவிக்கின்றார்.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More