இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டில் கபில்தேவின் தலைமையில் முதன் முறையாக உலகக் கிண்ணத்தினை வென்றிருந்தது. விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் இருக்கும் அரசியல் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்திருந்த போதிலும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்த்த உலகக்கிண்ணத்தினைக் கைப்பற்றிய வரலாறு எந்த மொழியிலும் இதுவரை படமாக்கப்படவில்லை.
இந்தநிலையில் முதல்முறையாக உலகக்கிண்ண வெற்றியை அடிப்படையாகக் கொண்டு 83 என்ற திரைப்படம், இந்தியில் உருவாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் மொழிமாற்றத்துடன் இது வெளியாகவுள்ளது. .
கபீர்கான் இயக்கி உள்ள இந்த படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர்சிங் நடிக்கிறார். கபில்தேின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கிண்ணத்தினை வென்ற போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார்.
மது மட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். டிசம்பர்24ம் திகதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி டில்லியில் 83 திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.