பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, கொரோனா,ஒமிக்ரோன் போன்ற பரவிவரும் தற்கால சூழ்நிலையில் காலவரையின்றி ஒத்தி வைக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை கூட நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன். அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகரசபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.
அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனை தடுக்க முற்படுவோம் என்றார். குறித்த பட்டத்திருவிழாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆதரவு வழங்கியுள்ளதுடன், நிகழ்வில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டி வரும் நிலையில் , சிவாஜிலிங்கம் இக்கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.