Home இலங்கை வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை: நமது பயணத்தையும் கைவிட போவதில்லை.

வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை: நமது பயணத்தையும் கைவிட போவதில்லை.

by admin

“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும்,  எமது பங்களிப்பு வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்கு பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் என்ற பொதுநோக்கில்,  இந்த செயற்பாட்டை ஆரம்பித்த ஏற்பாட்டாளர்கள் செல்வம் அடைக்கலநாதன் எம்பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி, இணைப்பாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருக்கு எமது வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.  

அதேவேளை பொது இணக்கப்பாட்டின் மூலம் பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் தனித்தனியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஆவண கடிதம் எழுதப்படும் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவுகளை கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

முதல் கலந்துரையாடல்

“இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13வது (13A) திருத்த சட்டத்தை  முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை உறுதி செய்து, மாகாணசபை தேர்தலையும் விரைந்து நடாத்த இலங்கை அரசை வலியுறுத்த, இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கோருதல்” என்ற அடிப்படையிலான அழைப்பின் பேரிலேயே ஏற்பாட்டாளர்களால் இந்த கூட்டு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய வட கிழக்கு தமிழ் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டன.   

நோக்கம்

இலங்கை அரசமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே அதிகார பரவலாக்கல் சட்டமான 13ம் திருத்தம் என்பதை இறுதி தீர்வாக கருதி இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கம், இந்த குறைந்தபட்ச சட்டத்தைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல் இழுத்தடிப்பதுடன், இச்சட்டமூலம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களையும்கூட வாபஸ் பெறுகிறது என்ற உண்மை உலகிற்கு அதிகாரபூர்வமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே எமது பொது நோக்காக இருந்தது. 

இலங்கை தமிழரசு கட்சி உள்வாங்கல்

இந்த செயற்பாட்டில், இலங்கை தமிழரசு கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவரை நேரடியாக, தமுகூ மனோ கணேசனும், ஸ்ரீமுகா தலைவர் ரவுப் ஹக்கீமும் சந்தித்து அழைப்பு விடுத்ததையும், தமிழரசு கட்சியை தவிர்த்து விட்டு விண்ணப்ப கடிதத்தில் கையெழுத்திடும் யோசனையை, தமிழ் முற்போக்கு கூட்டணியாகிய  நாம் நிராகரித்தோம் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் நன்கறிவார்கள்.   

பொது ஆவணகடிதம்

ஆரம்பத்தில், பாரத பிரதமருக்கான கடித வரைபு, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும், பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை கொண்ட விண்ணப்ப கடிதமாக சுமார் ஒன்றரை பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. எனினும் தொடர்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, தமிழ் தேசிய அரசியலின் சமகால வரலாறு முழுமையாக அதில் எழுதப்பட்டு, எட்டு பக்கங்களை கொண்ட நீண்ட ஆவணக்கடித வரைபாக மாற்றப்பட்டது.  இதன் பின்னுள்ள நியாயப்பாட்டை எம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் சார்பான கடிதம் என்பதால், இதே நியாயப்பாட்டின் அடிப்படையில், இக்கடிதத்தில் மலையக தமிழ் மக்களின் அபிலாஷகளும் உள்ளடக்கப்பட வேண்டிய இயல்பான தேவைப்பாடு எழுந்தது.  மேலதிகமாக இந்த  ஆவணக்கடித வரைபு, இறுதி வடிவம் பெறமுன்னரே ஊடகங்களின் வெளிப்படுத்தப்பட்டு வாதப்பிரதிவாதங்களை தமிழ் பேசும் அரசியல் சமூக பரப்புகளில் ஏற்படுத்தியது. 

பொது ஆவணகடிதம் நிராகரிப்பு

இந்நிலையிலேயே, கடந்த வருடத்தின் இறுதி நாளான்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது கொழும்பு இல்லத்தில், தமுகூ தலைவர் மனோ கணேசன் உட்பட கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மறுநாள் இவ்வருடத்தின் முதல் நாள், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்பியின் கொழும்பு இல்லத்தில் கூடி புதிய கடித வரைபு தயாரிக்கப்பட்டது. 

ஆனால், இந்த ஆவணக்கடித வரைபு, உடனடியாகவே இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதை நாம் அறிந்தோம்.

மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி ஆவணக்கடிதம்  

ஆகவே, பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் ஆவணக்கடிதம் எழுத தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது.

வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு எமது ஒத்துழைப்பு தொடரும்

இப்பின்னணிகளிலேயே, தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், “வடகிழக்கு தமிழ் கட்சிகளின் இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று ஒத்துழைப்புகளை வழங்குவோம்” என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம். வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு, வரலாறு முழுக்கவும் இதை நாம் செய்துள்ளோம். இனியும் செய்வோம். “உரிமைக்கு குரல் கொடுப்போம்; உறவுக்கு கை கொடுப்போம்” என்ற எமது கொள்கை தொடரும்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More