இலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை விட வளர்ச்சித் திட்டங்களும் வாழ்வாதாரங்களும்தான் தேவை என இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்தியா- இலங்கை- சீனா உறவு, ஈழத் தமிழர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மிலிந்த மொரகொட கூறியிருப்பதாவது:
“இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒன்று அன்னிய செலாவணி கையிருப்பு. மற்றொன்று நிதிப் பற்றாக்குறை. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய இலங்கை பொருளாதார நிலைமை மிக மோசமானதாகவும் சவாலாகவும் இருக்கிறது. இதனை சீரமைக்க இந்தியாவும் உதவி செய்து வருகிறது.”
“இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கடந்த மாதம் டெல்லி வருகை தந்திருந்தார். உணவு, மருந்துகள் வாங்க 1 பில்லியன் டாலர் கடன் தொகை வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருட்களை கொள்முதல் செய்ய 500 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக இந்தியாவுக்கு திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கடங்குகளை பயன்படுத்தவும் நிர்வகிக்கவுமான மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இலங்கையின் சுற்றுலா சந்தை என்பதே இந்தியாவை மையமாகக் கொண்டது. கொரோனா காலத்துக்கு முன்னர் வரை 20-25% சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வந்தனர். இந்த துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”
“இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸ பதவி ஏற்றது முதலே இந்தியாவுடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் விருப்பம். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. இந்தியாதான் எங்களுக்கு கொரோனா தடுப்பூசி கொடுத்து உதவிய முதல் நாடு. இந்தியாவுடனான உறவில் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் தொடர்பான ஒப்பந்தம் மிக முக்கியமானது. அதேபோல் மன்னார் கடற்பரப்பில் 5,000 மெகாவாட் மெகா காற்றாலை மின் உற்பத்தி திட்டம், சம்பூர் அனல்மின்நிலையத் திட்டம் ஆகியவையும் இந்தியாவுடனான உறவில் மிக முக்கியமானவை. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதி இந்திய தொழில்நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது.”
“சீனாவிடம் இருந்து நாங்கள் 10%தான் கடன் பெற்றிருக்கிறோம். சர்வதேச நிதி அமைப்புகளிடமே நாங்கள் பெருமளவு கடன் வாங்கி இருக்கிறோம். சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் முக்கியமானதுதான். ஆனால் சிக்கலானது அல்ல. போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என காலந்தோறும் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்திருக்கிறது. 1980களில் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட முனைந்த போது இந்தியாவுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் சீனாவும் இந்த களத்துக்கு வந்து இணைந்து கொண்டது. வரலாற்று தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்கிறோம். சார்க் கூட்டமைப்பில் இலங்கை மிக முக்கியமான நாடு.”
“இலங்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று உரையாற்றிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ, புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான குழுக்களை அறிவித்திருந்தார். என்னுடைய பதவி காலத்தில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் பயணித்திருக்கிறேன். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தேவை அரசியல் சாசன திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது என்பது அல்ல. வாழ்வாதாரங்கள்தான் அங்கே பிரதான பிரச்சனை. அபிவிருத்தித் திட்டங்களைத்தான் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய நிலையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குதல்; 2-வதாக அதனூடாக வடக்குகிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை நாம் பின்பற்றலாம். தமிழர் தரப்பு பிரதிநிதிகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் வைக்கின்றனர். ஜனநாயகத்தில் விமர்சனங்களுக்கு அனுமதி இருக்கிறது. இவ்வாறு மிலிந்த மொரகட கூறியுள்ளார்.”