கோழிக்கோடு விமான நிலையத்தில் ஒரே நாளில் 23 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டதோடு, இது தொடர்பாக 22 பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவோரில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி சுங்க அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
அதிகாரிகள், நேற்று காலை முதல் இரவு வரை கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற அனைத்து விமானங்களையும் கண்காணித்தனர்.
இதில் சந்தேகப்படும் நபர்கள், பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தினர். பின்னர் அவர்களின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
இச்சோதனையில் 23 கிலோ கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தல் தங்கம் அனைத்தும் பயணிகள் தங்களின் உடமைகள் மற்றும் தாங்கள் கொண்டு வந்த பொருள்களில் மறைத்து வைத்திருந்தனர். அவை அனைத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர். அதிகாரிகள் கைப்பற்றிய தங்கத்தின் மதிப்பு இந்திய 10.50 கோடி ருபாயாகும்.
இந்த கடத்தல் தொடர்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 22 பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் ஒரே குழுவை சேர்ந்தவர்களா? அல்லது வேறு நபர்களுக்காக தங்கத்தை கடத்தி வந்தார்களா? என்பது பற்றி சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.