Home இலங்கைபுத்தூரில் இளைஞன் கடத்தல்

புத்தூரில் இளைஞன் கடத்தல்

by admin

புத்தூர் மேற்கு, நவக்கரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தூர் மேற்கு, நவகரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


நேற்று இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. வீட்டு வளாகத்தில் இருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞரை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் கூறப்படுகின்றது.


அதன்பின்னர் இளைஞர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான இளைஞரின் தந்தை தற்போதும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் நேற்று பிணையில் வெளியே வந்துள்ளனர் என்று இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிக் காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் சிலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்றும் காவல்துறையினா் தெரிவித்தனர்.–

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More