இலங்கையை விட்டு தப்பிச் சென்றுள்ள 132 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சிரேஷ்ட காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன, அவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த வருடம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 95,000 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், 1,630 கிலோகிராம் ஹெராயின், 15,000 கிலோகிராம் கஞ்சா மற்றும் சுமார் 377 கிலோ கிராம் செயற்கை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சுமார் 800 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு 360 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் 2100 கிலோ கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.