ஜனாதிபதியின் இல்லத்தின் முன்னான போராட்டத்தில், ஊடகவியலாளர் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்!
ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது காவற்துறையினரின் தாக்குதலால் இதுவரையில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீரிஹானையைத் தொடர்ந்து களனியிலும் போராட்டம்!
மீரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியை பதவி துறக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
களனி தலுகம பகுதியில் கண்டி வீதியின் குறுக்கே பலகைகளையும் ரயர்களையும் இட்டு கொழுத்தி மக்கள் வீதியின் இரு மருங்கிலும் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து களனி தலுகம பகுதியில் தடைப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வீட்டின் முன்னாள் பேருந்து ஒன்றுக்கு தீவைப்பு!
ஜனாதிபதியின் வீட்டின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களால் பேருந்து ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு ஏராளமானோர் குவிந்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவும், மற்றும் அதிரடி படையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அத்தனையும் மீறி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் படையினரை ஏற்றி வந்த பேருந்து ஒன்று மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மேலதிகமாக காவற்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது மின்சாரத்தை நிறுத்திவிட்டு தாக்குதல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி வருவதோடு கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம் என்பனவும் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனத்தின் மீதும் கல்லெறிந்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக பதற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் மிரிஹானவில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை காவல்துறையினா் தடுத்து வருகின்றனர். நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், காஸ், மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.