சந்தேகத்திற்கு இடமான படகுகளை துரத்திய இலங்கை கடற்படை படகுகள் இரண்டு மோதி விபத்துக்கு உள்ளானதில் , கடற்படை சிப்பாய் ஒருவர் காணாமல் போன நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை நெடுந்தீவுக்கு தொலைவில் , இந்தியா பக்கமாக இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான இரண்டு படகுகளை கடற்படையினர் மறிக்க முற்பட்ட போது , குறித்த படகுகள் கடற்படையின் கட்டளையை மீறி தப்பி சென்றுள்ளது. அதனை அடுத்து கடற்படை படகுகள் அவர்களை விரட்டிய போது , கடற்படைக்கு சொந்தமான இரண்டு படகுகள் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
அதன் போது படகில் இருந்த நான்கு கடற்படையினர் கடலில் தவறி விழுந்த நிலையில் மூவர் ஏனைய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் காணாமல் போயிருந்தார். காணாமல் போனவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வந்த நிலையில் காரைநகர் கடற்பரப்பில் காணாமல் போன கடற்படை வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேவேளை மீட்கப்பட்ட மூன்று கடற்படையினரில் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.