முன்னர் பயங்கரவாதிகளை தடுத்து வைத்திருந்த தீவுகளில் இன்று அரசாங்கத்தின் தலைவர்கள் ஒளிந்துகொண்டுள்ளனர். மக்களுக்காக அர்ப்பணிப்புடனும் அன்புடனும் சேவை செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, புலிகள் அமைப்பினர் மீள் தாக்குதல் ஒன்றை நடத்தப்போவதாக கூறப்படுவது பொய்யான ஒன்றெனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (17.05.22) உரையாற்றிய அவர், 9ஆம் திகதி அலரி மாளிகையில் இருந்தே வன்முறை சம்பவங்கள் ஆரம்பமாகின. இதற்கு முன்னாள் பிரதமர் பொறுப்புக்கூற வேண்டும் என்பதால் இந்த வன்முறைச் சம்பவங்களை வேறு நபர்கள் மீது சுமத்த ஆளுந்தரப்பினர் முயல்கிறார்கள்.மக்களின் கோபங்களே வான்முறைக்கு காரணம். மக்களை நீங்களே கோபப்படுத்தினீர்கள்.
இதேவேளை தற்போது புலிகள் அமைப்பினர் தாக்குதல் ஒன்றை நடத்தப்போவதாக கூறுகிறார்கள். அது உண்மையில். எவ்வாறாயினும் இதுபோன்ற விடயங்களைக் குறைத்து மதிப்பிட்டு நடந்துக்கொள்ளக்கூடாது. கவனமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். காவற்துறையினரும், இராணுவத்தினரும் தங்களதுக் கடமைகளை சுயாதீனமாக மேற்கொள்ள வேண்டும். குற்றங்களை செய்த அரசியல் வாதிகளைப் பாதுகாக்க சட்டத்துக்கு புறம்பாக செயற்படக்கூடாது.
எதிர்க்கட்சியிலிருந்து பிரதமர் ஆசனத்தில் அமர்வது, பிரதமர் ஆசனத்திலிருந்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமரும் அரசியல் கலாசாரமே ரணிலுக்கும் தெரியும். 45 வருடங்களுக்குப் பின்னர் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென ரணிலுக்கு தெரிந்துள்ளது. அரசியலுக்கு வந்த 5 வருடங்களிலேயே நான் இதனைத் தெரிந்துக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.