இலங்கை பிரதான செய்திகள்

இலங்கைக்கு அதி உச்ச உதவிகளை வழங்கிவரும் இந்தியா!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இந்தியா பல்வேறு வகையான உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியா இதுவரை 12 க்கும் அதிகமான கப்பல்களில் சுமார் 4,00,000 க்கும் அதிகமான மெட்ரிக் டன் அளவுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் வழங்கியுள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு தேவையான ஒரு தொகுதி மருந்து வகைகளை இந்திய தூதர் கோபால் பாக்லே, கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி அப்போதைய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் வழங்கினார்.

அத்துடன், கண்டி – பேராதனை போதனா மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை இந்தியா அண்மையில் வழங்கியிருந்தது.

அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, முக்கிய சத்திர சிகிச்சைகளை இடைநிறுத்துவதாக பேராதனை மருத்துவமனை அண்மையில் அறிவித்திருந்தது.

இதையடுத்து, குறித்த காலப் பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தூதர் கோபால் பாக்லேவுக்கு இது குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தல் பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, பேராதனை மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட் காலப் பகுதியில் இலங்கைக்கு தேவைப்பட்ட உயிர் காக்கும் திரவ ஆக்சிஜன் 1000 தொன் இந்தியாவினால் வழங்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் மூலம் இந்த திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன், இந்தியாவினால் வழங்கப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான நாணய பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவிருந்த பின்னணியில், அந்த கால எல்லையை நீடிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருந்தது.

இதேவேளை, இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டது.

இதன்படி, குறிப்பிட்ட ஒரு வார காலத்தில் மாத்திரம் 16,000 மெட்ரிக் தொன் அரிசி இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான எரிபொருள் உள்ளட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவால் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் எரிபொருள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஆணையரக தகவலகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்திய அரசாங்கம் இவ்வாறான உதவித் திட்டங்களை வழங்கி வருகின்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியில் இலங்கைக்கு பெருமளவிலான அத்தியாவசிய பொட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதன்படி, தமிழ்நாட்டினால் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகளை வழங்க இணக்கம் எட்டப்பட்டது.

இதையடுத்து, முதல்கட்டமாக 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்து பொருட்கள் முதல்கட்டமாக கடந்த 18 ஆம் திகதி சென்னையில் இருந்து கப்பல் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்கள் நேற்றைய தினம் (மே 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்த பொருட்களை பொறுப்பேற்ற இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, அந்த பொருட்களை நேற்று மாலை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கிருந்தார்.

தமிழ்நாடு அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட 2 பில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியாக நிவாரண உதவிப் பொருட்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பொருட்கள் அரச அதிகாரிகளின் ஊடாக, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் தெரிவிகிக்கின்றது.

தமிழ்நாடு அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருளாதார நிவாரண உதவித் திட்டத்திற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரிசி, பால்மா, மருந்து உள்ளிட்ட 2 பில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான மனிதாபிமான நிவாரண உதவித் திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக ட்விட்டர் பதிவொன்றில் ஊடாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கும் தனது பாராட்டுக்களை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிர்ந்துள்ளார்.

(பிபிசி தமிழ்)

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.