??அதிபர் மக்ரோன் விரைவில் உக்ரைன் விஜயம் செய்வார்?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நூறு நாள்களைத் தாண்டி நீடிக்கிறது. கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தின் முழுப் பகுதியையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. போரில் ஒரு கணிசமான வெற்றி தங்களுக்குக் கிடைத்திருப்பதாக மொஸ்கோ கூறுகிறது. ஆயினும் அங்குள்ள Severodonetsk என்னும் கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரில் கடும் சண்டை நீடித்துவருகிறது. நாட்டின் இருபது சதவீத நிலப்பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துவிட்டதாக உக்ரைன் கூறுகிறது. எனினும் இறுதி வெற்றி தங்களுடையதே என்று உக்ரைன் அதிபர் ஷெலான்ஸ்கி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அதிபர் மக்ரோன் விரைவில் தலைநகர் கீவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகத் தலைவர்கள் பலரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் ஏற்கனவே அங்கு சென்றுதிரும்பியுள்ள நிலையில் மக்ரோனும் உக்ரைன் விஜயம் செய்ய வேண்டும் என்று அவர் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. தனது பயணத்தை மறுக்க முடியாது என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
??12 யூரோ ஊதிய உயர்வுக்கு ஜேர்மனி எம்பிக்கள் ஒப்புதல்
ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளத்தை மணித்தியாலம் ஒன்றுக்குப் 12 யூரோக்களாக அதிகரிப்பதற்கு ஜேர்மனியின் நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பான பிரேரணைக்கு 400 எம்பிக்கள் ஆதரவாகவாக்களித்துள்ளனர். 41 பேர் மட்டுமே எதிர்த்து வாக்குச் செலுத்தினர். முன்னாள் அதிபர் அங்கெலா மெர்கலின் கட்சி உறுப்பினர்கள் உட்பட 200 எம்பிக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் ஆகக் குறைந்த அடிப்படைச்
சம்பளம் மணித்தியாலத்துக்கு €2.18 ஈரோ அதிகரிக்கப்பட்டு 12 ஈரோக்களாக
உயர்த்தப்படுகிறது. அதிபர் சோல்ஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளில் இந்த ஊதிய அதிகரிப்புத் திட்டத்தைப் பிரதான முன்மொழிவாக அறிவித்திருந்தார்.
??குரங்கு அம்மை வைரஸ் :
51 பேருக்கு தொற்று உறுதி பிரான்ஸில் குரங்கு அம்மை வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 37 பேர் பாரிஸ் இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொற்றாளர்கள் அனைவரும் 22-63 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆவர். அவர்களில் 22 பேர் மட்டுமே அண்மைக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களாவர். ஆபிரிக்க நாடுகளில் உள்ளூர் தொற்று நோயாக இருந்து வந்த குரங்கு அம்மை (Monkeypox) சமீப நாட்களாகத் தொற்று வலயங்களுக்கு வெளியே உலகின் ஏனைய பகுதிகளுக்குப் பரவிவருகிறது.
உயிர் ஆபத்தை ஏற்படுத்தாத இந்த வைரஸ் தொற்றியவர்களுக்கு அம்மைத் தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகிறது. ஆயினும் தொற்றாளர்களுடன் தொடர்புடைய சகலருக்கும் ஏற்றுவதற்குத் தேவையான தடுப்பூசிக் கையிருப்பு பல நாடுகளிடமும் இல்லை.
பல தசாப்தங்களுக்கு முன்பு மறைந்துபோன குரங்கு அம்மை மீண்டும் பரவத் தொடங்கி இருப்பது உலகத்திற்கு ஓர் எச்சரிக்கைச் செய்தி என்று ஐ. நா. சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
??ஜேர்மனி ரயில் விபத்தில் 12 பேரைக் காணவில்லை!
மேற்கு ஜேர்மனியின் அல்பின் மலைப் பிராந்தியத்தில் வெள்ளியன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 1 2 பயணிகள் தேடப்பட்டுவருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தடம்புரண்ட ரயில் பெட்டிகளின் கீழ்ப்பகுதியில் சிக்கியிருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. பவேரியா (Bavaria) மாநிலத்தின் கார்மிஷ்-பார்டென்கிர்சென் பகுதியில் வெள்ளிக்கிழமை நேர்ந்த இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். அறுபது பேர் காயங்களுக்குள்ளாகினர்.
??வாழ்க்கைச் செல்வு அதிகரிப்பு :
தேர்தலுக்குப் பின் உதவித் திட்டம் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் நாட்டு மக்களது வாழ்க்கைச் செலவு அதிகரிப்புப் பாதிப்பைக் குறைப் பதற்கான விதிகள் அடங்கிய சட்ட மூலம் கொண்டுவரப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம்,விலை அதிகரிப்புப் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிர்வரும் கோடை விடுமுறைக் காலத்தில் உதவிகளை வழங்குவதற்கு இச் சட்ட மூலம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 12-19 ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. கடும்போக்கு இடதுசாரியாகிய ஜோன் – லூக்-மெலன்சோன் தலைமையிலானஇடதுசாரிகளது புதிய கூட்டணி இம்முறை அதிபர் மக்ரோனின் கட்சிக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
04-06-2022