இலங்கை பிரதான செய்திகள்

குருந்தூர்மலையில் காணி சுவீகாிப்பு- பௌத்த கட்டுமானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களின் 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிக்கின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையையும் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை ஆகியவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால்  இன்று (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை அடிவாரத்தில் பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச் சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 19.06.2022 ம் திகதி குருந்தூர்மலைக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா , இதற்குமேல் கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்த போதிலும் தற்போதும் அங்கு நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை அங்கு மீண்டும் பௌத்த கண்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்கார்களால் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பியதனையடுத்து ஏற்பட்ட சலசலப்பை அடுத்து அங்கு பாரிய அளவில் ஆயுதங்கள் தாங்கிய காவல்துறையினா் குவிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினா் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

இற்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ், கரைதுறைப்பற்று பிரதேசசபை  உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.