யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது, பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
நாளை மறுதினம் சனிக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 46 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2ஆயிரத்து 378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதல் இரண்டு நாட்களும் முறையே மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் முறையே இரண்டு அமர்வுகளுமாக எட்டு அமர்வுகளில் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 185 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர்.அவர்களில் கலாநிதிப் பட்டத்தை இரண்டுபேரும், முதுமெய்யியல்மாணிப் பட்டத்தை பதினொரு பேரும், சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஆறு பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஒருவரும் முதுவியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை ஏழு பேரும், கல்வியியலில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழினை 157 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழினை ஒருவரும் பெறவிருக்கின்றனர்.