வெனிசூலாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சாிவில் சிக்கி 22 போ் உயிாிழந்துள்ளனா். கடும்மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமான வீடுகள் புதைந்தன. இதனால் வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற மீட்பு பணிகளின் போது 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 52 பேரைக் காணவில்லை. இடிபாடுகளை அகற்றி காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவால் பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அழிந்துவிட்டன. முறிந்துவிழுந்த மரங்கள் தெருக்களில் சிதறிக் காணப்பட்டுளளன.
இந்த பெருந்துயர சம்பவத்தைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சமூக வலைத்தளம் வாயிலாக பொதுமக்கள் உதவிகள் வழங்கிவருகின்றனர்.