யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் பொது இடங்களில் குப்பை கொட்டுதல் , வெற்றிலை துப்புதல் , மல சலம் கழித்தல் ஆகியவற்றுக்கு தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றம் இழைத்தவர்களுக்கு உடனடியாகவே தண்டம் அறவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என யாழ்.மாநகர சபை உறுப்பினரும் , சுகாதர குழு தலைவருமான வ.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாநகரத்தை தூய்மையாக பேணும் முகமாக மாநகர சபையினால் கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கழிவுகளை உரிய முறையில் அகற்றும் செயற்பாடுகள் உள்ள போதிலும் , பலரும் கழிவுகளை உரிய இடங்களில் போடாது , வீதிகள் பொது இடங்களில் வீசி விட்டு செல்கின்றனர். அதனால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன.
வீடு வீடாக தூய்மை பணியாளர்கள் வரும் போது , குடியிருப்பாளர் குப்பைகளை தரம் பிரித்து அவர்களிடம் கையளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் வரவில்லை எனில் மாநகர சபைக்கோ , அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ முறையிடலாம். அதனை விடுத்து வீதிகளில் கழிவுகளை வீசி செல்வதனால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன.
கடந்த காலங்களில் இருந்த தண்டப்பணத்தினை தற்போது சபையின் அனுமதியுடன் திருத்தி அமைத்துள்ளோம். பொது இடங்களில் குப்பை கொட்டுதலுக்கு 5 ஆயிரம் ரூபாயும் , பொது இடத்தில் வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் , பொது இடத்தில் மலசலம் கழித்தால் 5 ஆயிரம் ரூபாயும் தண்டம் அறவிடப்படும்.
இவற்றை கண்காணித்து தண்டம் அறவிடும் பணிக்கவே மாநகர சபையினால் காவல் படை உருவாக்கப்பட்டது. அந்த காவல் படை , விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறையினரின் சீருடைகளை ஒத்த சீருடை அணிந்துள்ளதாகவும் , இது புலிகள் மீள் உருவாக்க முயற்சி எனவும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு , மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதமளவில் வழக்கில் இருந்து மாநகர சபை முதல்வர் விடுவிக்கப்பட்டதுடன் , சான்று பொருளாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட சீருடையும் மீள எம்மிடம் கையளிக்கப்பட்டது.
அந்நிலையில் இனிவரும் காலங்களில் மாநகர எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக செயற்படுபவர்களின் தண்டப்பணம் அறவிடும் பணி முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.