Home இலங்கை யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

by admin


இறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களைத் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது!

இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சையானது முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு பேராசிரியர் ஷெரீவ்தீன், பேராசிரியர் ரிஸ்வி ஷெரீவ் முதலான விசேட மருத்துவ நிபுணர்களடங்கிய குழுவால் மேற்கொள்ளப்பட்டது.


இதனைத் தொடர்ந்து கொழும்பு தேசிய மருத்துவமனை, கண்டி தேசிய மருத்துவமனை, மாளிகாவத்தையிலுள்ள தேசிய இரத்தச் சுத்திகரிப்பு சிறுநீரக மாற்று நிறுவனம் (The National Institute of Nephrology Dialysis Transplantation), கராப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய போதனா மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன; தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.


இந்த வகையில் யாழ். போதனா மருத்துவமனையில் முதற் தடவையாக 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி சிறுநீரகம் செயலிழந்த இருவருக்கு, சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. யாழ். போதனா மருத்துவமனையில் தற்போது வரை 7 பேருக்கு வெற்றிகரமாக சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ். போதனா மருத்துவமனையில் குருதிக் குழாய் சத்திரசிகிச்சைத் துறையில் விசேட பயிற்சி பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் சிவலிங்கம் மதிவாணன் (Consultant Surgeon, Special Interest in Vascular Surgery),

சிவலிங்கம் மதிவாணன்

கண்டி தேசிய மருத்துவமனையில் கடமையாற்றும் குருதிக் குழாய் மற்றும் அங்கமாற்று சத்திரசிகிச்சை நிபுணர் பிரசாத் சுப்பிரமணியம் (Consultant Vascular & Transplant Surgeon),

பிரசாத் சுப்பிரமணியம்

யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் குருதிக் குழாய் மற்றும் அங்கமாற்று சத்திரசிகிச்சை நிபுணருமான சச்சிதானந்தன் வினோஜன்(Consultant Vascular & Transplant Surgeon),

சச்சிதானந்தன் வினோஜன்

கண்டி தேசிய வைத்தியசாலையின் குருதிக் குழாய் மற்றும் அங்கமாற்று சத்திரசிகிச்சை நிபுணர் (ச்)சரித்த பெர்னாண்டோ (Consultant Vascular & Transplant Surgeon),

(ச்)சரித்த பெர்னாண்டோ

யாழ். போதனா மருத்துவமனையின் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணரும் மருத்துவப்பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான மருத்துவர் பிரம்மா தங்கராஜா (Consultant Nephrologist)

பிரம்மா தங்கராஜா

மற்றும் யாழ். போதனா மருத்துவமனையின் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் வேதநாதன் பவந்தன்(Consultant Nephrologist),

வேதநாதன் பவந்தன்

முதலான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.


மேற்குறிப்பிட்ட விசேட மருத்துவ நிபுணர்களுடன் யாழ். போதனா மருத்துவமனை இரத்தமாற்று விசேட மருத்துவ நிபுணர்கள் (Consultant Transfusionists), உணர்வழியியல் சிகிச்சை நிபுணர்கள் (Consultant Anesthesiologists), மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை நிருவாகத்தினர் முதலான அணியினர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள வழங்கிய பங்களிப்பு என்பது ஈடிணையற்றது.


சிறுநீரகமாற்று சத்திரசிகிச்சையானது தேசிய வைத்தியசாலையுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடாகும். இலங்கையின் 2 ஆவது தேசிய வைத்தியசாலையாக விளங்கும் கண்டி தேசிய வைத்தியசாலையுடன் இணைந்தே நாம் யாழ்ப்பாணத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொள்கின்றோம்.
எமது சமூகத்தில் சிறுநீரக செயலிழப்புக் காரணமாக இளம் சமூகத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 5 வயது சிறுவர்கள் முதல் 75 வயது முதியவர்கள் வரை ஹீமோடயலிசிஸ் எனப்படும் இரத்தச்சுத்திகரிப்புச் செய்வதற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள். யாழ். போதனா மருத்துவமனையில் 2022ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மாத்திரம் 145 நபர்களுக்கு 962 தடவைகள் இரத்தச்சுத்திகரிப்பு (Haemodialysis) செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சில சிறுவர்களுக்கு வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் குருதிச் சுத்திகரிப்புச் செய்யப்படுகிறது. மேலும் பலர் ஒவ்வொரு வாரமும் இரத்தச் சுத்திகரிப்புச் செய்து வருகின்றனர். இவ்வாறனவர்களது வாழ்வு மருத்துவமனையுடனேயே இணைந்துள்ளது.


யாழ். போதனா மருத்துவமனையில் இயங்கிவரும் இரத்தச்சுத்திகரிப்பு அலகானது (Dialysis Unit) 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் அலகானது சிறிய ஓர் இடத்தில் மிகக்குறைந்த ஆளணியினருடன் சிறந்த முறையிலே 24 மணிநேரமும் இயங்கிவரும் ஒரு விசேட மருத்துவ அலகாகும். சருவதேச மருத்துவக் குழுவின்(IMHO-USA) நிதியுதவியுடன் இதனைத் தற்காலிகமாக விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச உதவியுடன் 6 தளங்களைக் கொண்ட நிரந்தரக் கட்டடத் தொகுதி அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


யாழ். போதனா மருத்துவமனைக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் முதலான மாவட்டங்களில் இருந்தும் “டயலிசிஸ்” செய்வதற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பலர் வருகிறார்கள். ஒருவர் “டயலிசிஸ்” செய்வதற்காக வரும் போது அவருக்கு உதவியாக இன்னொருவர் வருகின்றார். இதனால் குடும்பம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது. ஒருவர் சிறுநீரக செயலிழப்புக் காரணமாக “டயலிசிஸ்” செய்யும் மருத்துவப் பொறிமுறைக்கு வருகின்றபோது அவரைச் சார்ந்த குடும்பத்தின் சுதந்திரம் அல்லது சமூகச் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகிறது. “டயலிசிஸ்” செய்யும் பெரும்பாலானவர்களது வாழ்க்கை இவ்வாறு பல சவால்களை எதிர்நோக்கியிருக்கும்.


“டயலிசிஸ்” செய்யும் நிலைக்கு வந்த பெரும்பாலானோர் சிறுநீரக தானத்தை எதிர்பார்த்திருப்பார். சிறுநீரகம் செயலிழந்த ஒருவர் அவரது உடற்தகுதி, அவருக்கு உள்ள ஏனைய பாதிப்புக்கள், வயது என்பவற்றைக் கருத்திற்கொண்டு சிறுநீரகவியல் விசேட மருத்துவ நிபுணர்களால் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்குச் சிபார்சு செய்யப்படுவர். யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கின்றார்கள். ஆனாலும் மூளைச்சாவடைந்த ஒருவரிடமிருந்து சிறுநீரகத்தைத் தானமாகப் பெறுவதென்பது இலகுவானதல்ல.
இறப்புக்குப் பின்னர் சிறுநீரக தானம் செய்யும் நன்கொடையாளர்கள் கௌரவத்துக்கு உரியவர்கள்

சிறுநீரகத்தை தானமாகப் பெற்ற ஒருவருக்கு புதிய ஒரு வாழ்வு கிடைக்கிறது. ஒருவருக்கு சிறுநீரகத்தை வழங்குவது என்பது பெறுபவருக்கு மட்டுமன்றி அவரைச் சார்ந்த சமூகத்துக்கும் புதியதொரு வாழ்வை, எதிர்காலத்தைக் கொடுக்கிறது; சுதந்திரத்தை வழங்குகிறது; நம்பிக்கையைக் கொடுக்கிறது.


தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சுவாசிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் போது அவருக்குச் செயற்கைச் சுவாசம் வழங்கி உயிர்வாழ்வதற்கான உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒருவரது மூளையின் செயற்பாடு அற்றுப்போகின்றபோது அதனை மூளைச்சாவு என்பார்கள். இவ்வாறு மூளைச் சாவடைந்த ஒருவரது சிறுநீரகத்தைத் தானமாகப் பெறும் நடைமுறையே தற்சமயம் வடபகுதியில் காணப்படுகிறது. ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு 12 மணிநேரத்துக்குள் சத்திரசிகிச்சை செய்து சிறுநீரகத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.


தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ உபகரணங்களது உதவியின் மூலம் சுவாசிக்கும் ஒருவருடைய (Intubated patient) மூளையின் இறப்பை, பல்வேறு வழிகளால் மருத்துவர்கள் உறுதிப்படுத்துவர். மூளைச் சாவு என்பது 100 சதவீதம் மரணமடைந்த நிலையேயாகும். ஆனாலும் மூளைச் சாவடைந்த பின்னரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கைச் சுவாசம், மற்றும் மருந்துகள் வழங்குவதன் மூலம் ஒருவரது இருதயம் செயற்பட்டபடி இருக்கும். மூளைச்சாவடைந்தவருக்கு மருந்துகள் வழங்குவது படிப்படியாகக் குறைக்கப்படும். மூளைச் சாவடைந்தவர் உயிர் பிழைப்பார் என்ற தவறான நம்பிக்கை பொதுமக்களிடையே காணப்படுகிறது.


தீவிர சிகிச்சைப் பிரிவில் மூளைச் சாவடைந்த ஒருவரது குடும்ப உறுப்பினர்களை அல்லது அக்குடும்பத்தில் பொறுப்பு வாய்ந்த ஒரு நபரை அணுகி இறந்தவரது சிறுநீரகங்களைத் தானமாக வழங்குமாறு கேட்பது மருத்துவ நிபுணர்களுக்கு மிகவும் இக்கட்டான ஒரு நிலையாகும். இத்தகைய குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் துறைசார் மருத்துவ வல்லுநர்கள் நீண்ட உரையாடல் மேற்கொண்டு இறந்தவரது சிறுநீரகத்தைத் தானமாகப் பெறல் வேண்டும்.


மூளைச் சாவடைந்தவர்களது சிறுநீரகங்களைத் தானமாக வழங்கி இருவருக்கு வாழ்வு கொடுக்க முன்வருவோர் கௌரவத்துக்குரியவர்கள்; போற்றப்பட வேண்டியவர்கள்.
இலங்கையில் சிறுநீரகத்தை விற்பதோ அல்லது மறைமுகமாக சிறுநீரக விற்பனையைத் தூண்டுவதோ சட்ட விரோதமானதாகும். மூளைச் சாவடைந்தவர்களது சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்று சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சை செய்யும் நடைமுறையானது அரச மருத்துமனைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.


தென்பகுதியிலிருந்து வடபகுதி மக்களுக்குத் தானமாகக் கிடைத்த சிறுநீரகங்கள்!


பிறரது உயிரைக் காக்கும் சிறுநீரக தானத்தை நாம் இறந்த பின்னர் செய்வதற்கு எமது சமூகம் முன்வரல் வேண்டும். ஒருவரது இறப்புக்குப் பின்னரும் அவர் வழங்கும் சிறுநீரக தானம் இருவருக்கு உயிர் வழங்குவது போன்றதாகும். இறந்த பின்னர் சிறுநீரக தானத்தைச் செய்வதற்கு சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும். ஒருவர் தனது இறப்புக்குப் பின்னர் சிறுநீரக தானத்தைச் செய்யுமாறு தனது குடும்ப உறுப்பினர்களுக்குக் கூறிவைக்கும் போது அச்சமூகத்தில் சிறுநீரக தானம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும்.


தென்னிலங்கையைச் சேர்ந்த சகோதர இனத்தவர்கள் நன்கொடையாக வழங்கிய சிறுநீரகங்களே வடபகுதியில் சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்குச் சிறுநீரகமாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளமையை இங்கு நாம் நன்றியுடன் குறிப்பிடல் வேண்டும். அதே வேளை இங்கிருந்தும் சிறுநீரகங்கள் தென்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளன.


இறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களை வழங்கி பிறருக்கு வாழ்வுகொடுக்கும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது. சிறுநீரக தானம் என்பது உயிர்காக்கும் அறமாகும்.

மருத்துவர் த. சத்தியமூர்த்தி
பணிப்பாளர்
போதனா மருத்துவமனை
யாழ்ப்பாணம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More