159
மனித பாவனைக்கு உதவாத புளியை மீள் பொதி செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் இருந்த களஞ்சிய சாலையை சோதனையிட்ட போது, மனித பாவனைக்கு உதவாத 6ஆயிரம் கிலோ நிறையுடைய புளியை மீள் பொதி செய்து கொண்டிருந்த போது அவை மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட புளியையும் , அவற்றின் உரிமையாளரையும் கடந்த மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் முற்படுத்தி இருந்தார். அதனை அடுத்து , 6ஆயிரம் கிலோ புளியையும் அழிக்க உத்தரவிட்ட மன்று , அதன் உரிமையாளரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு தவணைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , புளியின் உரிமையாளருக்கு பிணை வழங்குமாறு, அவரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார்.
அதனை அடுத்து வரை இலட்ச ரூபாய் காசு பிணையிலும் , மூன்று சரீர பிணையில் , சரீர பிணையாளியில் ஒருவர் யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கும் மாலை 3.30 மணிக்கும் இடையில் நீதிமன்றில் கையொப்பம் இட வேண்டும் எனும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
Spread the love