Home இலங்கை பிச்சை எடுக்கப் பேச்சுவார்த்தை ? நிலாந்தன்.

பிச்சை எடுக்கப் பேச்சுவார்த்தை ? நிலாந்தன்.

by admin

2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே மெய்நிலை ஆகும்.

பன்னாட்டு நாணய நிதியம் தரும் சிறிய உதவி கடனைத் தீர்க்கப் போதாது. அது 2.8பில்லியன்கள் மட்டும்தான்.ஆனால் நாட்டின் மொத்த கடன் தொகை 50பில்லியன்களைவிட அதிகம். எனவே கடன்வாங்கி கடனை அடைக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கங்கள் கடன் வாங்குவது இதுதான் முதல் தடவையுமல்ல. இதற்கு முன் பதினாறு தடவைகள் கடன் வாங்கியிருக்கின்றன.அதில் ஏழு தடவைகள் பன்னாட்டு நாணய நிதியத்தோடு பொருந்திக்கொண்ட உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்நிலையில் கடனை வாங்கிக் கடனை அடைப்பது என்பதற்கும் அப்பால்,கடனே இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கடன் இல்லாத ஒரு நாட்டை அல்லது பிச்சை எடுக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது என்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு. அது இனப்பிரச்சினை தீர்ப்பதுதான்.இனப்பிரச்சினைதான் நாட்டை கடனாளியாக்கியது.கடன் வாங்கி,கடன் வாங்கி யுத்தம் செய்தார்கள்.வாங்கிய கடனில் வெடிமருந்து வாங்கி கடனைக் கரியாக்கினார்கள், தமது சொந்த மக்களையே கொன்று குவித்தார்கள். இப்பொழுது மீள முடியாத கடனில் நாடு சிக்கிவிட்டது.

இவ்வாறாக கடன்வாங்கி அல்லது பிச்சையெடுத்து யுத்தம் செய்த ஒரு நாடு இப்பொழுது பிச்சை எடுப்பதற்காக சமாதானம் செய்கிறது என்பதுதான் நூதனமான ஒரு மாற்றம்.ஆனால் பிச்சையெடுத்துச் செய்த யுத்தம் உண்மையானது. பிச்சை எடுப்பதற்காக செய்யும் சமாதானம் உண்மையானதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.

உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ பேச்சுவார்த்தைகள் நடக்கப்போகின்றன.கடந்த 75 ஆண்டுகளாக இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.இப்பேச்சுவார்த்தைகளில் சிங்களத்தலைவர்கள் மாறியிருக்கிறார்கள்.தமிழ்த்தலைவர்களும் மாறியிக்கிறார்கள்.இதில் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் மாறாமல் இருந்த ஒரே தலைவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்தான்.அவர் ஐந்து சிங்களத் தலைவர்களோடு பேசியிருக்கிறார்.இப்பொழுது கடந்த 13 ஆண்டுகளாக சம்பந்தர் பேசி வருகிறார்.
கடந்த 75ஆண்டுகால அனுபவத்தின்படி பேசுவதற்கு புதிதாக விடயங்கள் கிடையாது.ஒரே ஒரு விடயத்தில் துணிச்சலான முடிவை எடுத்தால் சரி. நாட்டின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை உடைத்து ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்கத் தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும். ஆனால் இலங்கைத்தீவின் துயரம் எதுவென்றால்,சிங்களமக்கள் மத்தியில் அதிகம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஸ்ரி என்பதுதான்.உலகின் மிகச்செழிப்பான ஜனநாயக நாடுகளில் நாட்டை ஒரு தேசமாக கட்டியெழுப்பும் சமஸ்ரிக் கட்டமைப்பானது இலங்கைத்தீவில் நாட்டை பிரிக்கக்கூடியது என்று கருதப்படுகிறது.

கடந்த 75 ஆண்டு காலப்பகுதிக்குள் நிகழ்ந்த பிரதான தீர்வு முயற்சிகளை பின்வருமாறு தொகுக்கலாம். 1957-இல் பிராந்திய சபைகள், 1965 இல் மாவட்ட சபைகள்.அதன்பின்1980இல் தென்னகோன் அறிக்கை,1981ல் மாவட்ட அபிவிருத்தி சபைகள்,1983இல் மாவட்ட மட்ட அதிகார பரவலாக்கம், 1986 இல் இரண்டு தமிழ் மாகாணங்கள் என்ற யோசனை,1987இல் இந்திய-இலங்கை உடன்படிக்கை, 1992இல் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை,1995இல் சந்திரிகாவின் பிராந்தியங்களின் ஒன்றியம் அதன்பின்,2002இல் ஒஸ்லோ பிரகடனம், 2003இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை,2005இல் சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பு,2009க்குப் பின் மகிந்தவின் 13பிளஸ், 2015இலிருந்து 2018 வரையிலுமான ரணில்-சம்பந்தன் கூட்டின் எக்கிய ராஜ்ய.

இதில் 1965இல் திருமதி சிறிமாவோவின் அணிக்குள்ளிருந்த என்.எம். பெரேரா சமஸ்ரிப் பண்புடைய ஒரு தீர்வு யோசனையை முன்வைக்கத் தயாராகக் காணப்பட்டார் என்றும் ஆனால் தமிழ்த் தரப்பு அதனை சமயோசிதமாகக் கையாளவில்லை என்றும் ஒரு விமர்சனம் உண்டு.அம்முயற்சி கருவிலேயே கைவிடப்பட்டது.

மேற்கண்ட தீர்வு முயற்சிகளையும் தீர்வுத் திட்டங்களையும் யார் குழப்பினார்கள் ஏன் குழப்பினார்கள்? என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரிவது என்ன?

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னும் பின்னுமான மிதவாத அரசியலில் நிகழ்ந்த பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் சமஸ்ரிப் பண்புடைய அல்லது ஒற்றையாட்சி கட்டமைப்புக்கு வெளியே வருவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் தீர்வு யோசனைகளை ஒன்றில் சிங்களத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,அல்லது கருவிலேயே கைவிட்டிருக்கிறார்கள்,அல்லது முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் குழப்பியிருக்கிறார்கள். அதேசமயம் தமிழ்த் தலைவர்கள் ஒற்றையாட்சிப் பண்புடைய தீர்வு முன்மொழிவுகளை பெரும்பாலும் நிராகரித்திருக்கிறார்கள்.அல்லது முதலில் நம்பிக்கை வைத்து பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஆயுதப்போராட்ட காலகட்டத்தில்தான் ஒப்பீட்டளவில் உயர்வான தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்குக் காரணம் நாட்டின் அரசியல் வலுச் சமநிலையை மாற்றக்கூடிய சக்தி ஆயுதப் போராட்டத்திற்கு இருந்தது. 2009க்குப்பின் ஒரு சிங்கள தொலைக்காட்சி திருமதி.சந்திரிக்காவை மேற்கண்டபோது “நீங்கள் முன்பு வழங்க தயாராக இருந்த பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வு இப்பொழுது பொருத்தமானதா?” என்ற தொனிப்பட ஒரு கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் “இல்லை.இப்பொழுது அதற்குத் தேவை இல்லை.ஏனென்றால் இப்பொழுது ஆயுதப்போராட்டம் இல்லை.” என்ற பொருள்பட பதில் கூறியுள்ளார்.அதுதான் உண்மை. நாட்டின் அரசியல் வலுச் சமநிலையை மாற்றக்கூடிய சக்தி இப்பொழுது தமிழ் அரசியலுக்கு இல்லை.அதனால்தான்,பிரிக்கப்பட முடியாத, பிளவுபடாத நாட்டுக்குள் சமஸ்ரி என்று கூற வேண்டியிருக்கிறது.ஆனால் சமஸ்ரிக்கு சிங்களத் தலைவர்கள் தயாரா?

2012ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் பேத்தி ஒரு நேர்காணலுக்காக சர்வோதயம் அமைப்பின் தலைவர் ஆரியரட்ணாவை சந்தித்தபோது அவர் சமஸ்ரி பற்றிக் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தன்னுடைய சிறுவயதில் 1950கள் 60களிலேயே சமஸ்ரி என்பது ஒரு பிரிவினைக் கோரிக்கையாக வியாக்கியானம் செய்யப்பட்டது என்று ஆரியரட்ணா கூறியிருக்கிறார்.ஆனால் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு பின்னரும் நிலைமை அப்படித்தான் உள்ளது.

எனவே ஒரு சமஸ்ரித் தீர்வை நோக்கி சிங்கள மக்களின் கூட்டு உளவியலை தயார்படுத்தும் பொறுப்பை ரணில் ஏற்றுக்கொள்வாரா? அதற்குத் தேவையான அரசியல் திடசித்தம் அவரிடம் உண்டா? அதற்குத் தேவையான மக்கள் ஆணை அவருக்குண்டா?

அவர் தனது அரசியல் எதிரிகளின் பலத்தில் தங்கியிருக்கிறார்.அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் ராஜபக்சகளின் வேட்பாளராக களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன.எனவே ராஜபக்சக்களை மீறி ஒரு தீர்வை அவர் தர மாட்டார்.ராஜபக்சக்கள் 13பிளஸ்தான் தங்களால் தரக்கூடிய தீர்வு என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.சஜித் பிரேமதாசவும் 13ஐ முழுமையாக அமல்படுத்துவதே தமது தீர்வு என்று கூறுகிறார்.இப்படிப்பார்த்தால் 13ஆவது திருத்தத்தைத் தாண்டிச் செல்வதற்கு மகிந்தவும் தயாரில்லை சஜித்தும் தயாரில்லை. பதின்மூன்றாவது திருத்தத்தை தொடர்ந்து வலியுறுத்துவதன்மூலம் சிங்களத் தலைவர்கள் இந்தியாவையும் தமது நிகழ்ச்சிநிரலின் பங்காளிகளாக்கலாமா என்று யோசிக்கக்கூடும்.

கடந்த சில வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை அதிகம் நெருங்கி செல்கிறார்.அவர் பதவியேற்ற காலத்தில் இருந்ததைவிடவும் இப்பொழுது அவருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஒப்பீட்டளவில் சுமூகமாகி வருகிறது.பலாலி விமான நிலையத்தை மறுபடியும் திறந்துவிட்டார்,காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே ஒரு பயணிகள் போக்குவரத்து சேவையும் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அடுத்த சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்திலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதில் இந்திய நிதி உதவியோடு கட்டப்பட்ட யாழ் கலாச்சார மையத்தை ஒரு இந்திய தலைவர் வந்து திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்தியப் பிரதமர் மோடி வருவார் என்று கூறப்பட்டது.பின்னர் இந்திய ஜனாதிபதி வருவார் என்று கூறப்பட்டது. இப்பொழுது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.யார் வந்தாலும் அது ஒரு கோலாகலமான விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.அவ்வாறு கலாச்சார மையத்தை கையளிக்கும் விழாவை இலங்கையின் சுதந்திரதின விழாவின் ஒரு பகுதியாக ஒழுங்கமைப்பதன்மூலம் தமிழ் மக்களுக்கான இந்தியாவின் உதவிகள் எவையும் இலங்கைத்தீவின் சுதந்திரத்துக்கு வெளியே இல்லை என்ற செய்தி இந்தியாவுக்கும் தரப்படும்,தமிழ் மக்களுக்கும் தரப்படும்.இவ்வாறாக, கடந்த சில வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை நோக்கி முன்னெடுக்கும் நகர்வுகளைத் தொகுத்துப்பார்த்தால்,அவர் பேச்சுவார்த்தைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பை மறைமுகமாகப் பெற முயற்சிக்கலாம் என்று தெரிகிறது.

13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த போகிறோம் என்று அரசாங்கம் கூறுமாக இருந்தால் அது இந்தியாவுக்கும் விருப்பமாகத்தான் இருக்கும்.கடந்த வெள்ளிக்கிழமை ஆறாம் தேதி தமிழ்நாட்டில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது அதன் தலைப்பு 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீர்வை ஈழத்தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசைக் கோரும் நோக்கிலானது.அதில் சுமந்திரனும் பங்குபற்றினார்.எனவே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் 13-வது திருத்தத்தை தாண்டாமல் இருப்பதற்கு ரணில் இந்தியாவிடமிருந்து உதவியை எதிர்பார்க்கக்கூடும். அவரைப் பொறுத்தவரை ஒருபுறம் பிச்சையெடுப்பதற்காகச் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது.இன்னொருபுறம் அவருடைய வயோதிப காலத்தில் அவருக்கு கிடைத்திருக்கும் சிம்மாசனத்தை சமாதானத்துக்காகத் தியாகம் செய்யவும் முடியாது. பிச்சையா? சமாதானமா? அரச போகமா?

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran January 8, 2023 - 1:28 pm

13வது திருத்தத்தை மேம்படுத்தப் பரிந்துரைக்கக்கூடியவை:

1. வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணம் ஆக்குதல்.
2. வடக்கு – கிழக்கு மாகாண சபையை நிரந்தரமாக ஸ்தாபித்தல்.
3. கவர்னர் பதவியை நீக்குதல்.
4. முதல்வர் ஜனாதிபதியின் கீழ் பணியாற்றுதல்.
5. அமைச்சரவை அமைச்சர்கள் முதல்வரின் கீழ் பணியாற்றுதல்.
6. ஜனாதிபதி, மாகாணத்திற்கு முழு ஆதரவை தொடர்ச்சியாக வழங்குதல்.
7. அடிப்படைத் தேவைகள் மற்றும் முக்கியத் தேவைகள் அனைத்தையும் முதல்வர்களின் பொறுப்பாக்குதல்.

பணிகள் 3, 4, 5, 6 மற்றும் 7ம் அனைத்து மாகாணங்களுக்கும் பொருந்தும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More