யாழ்ப்பாணம் தவசிக்குளம் கண்ணகை அம்மன் கோவிலில் இருந்த நாக பாம்பை ஒருவர் திருடி சென்றுள்ளமையால், ஆலய பக்தர்கள் பலரும் மனக்கவலையுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆலயத்திற்கு அருகில் உள்ள பாம்பு புற்றோன்றில் நீண்ட காலமாக நாக பாம்பொன்று இருந்துள்ளது.அதற்கு ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், குரங்கு ஒன்றுடன், குரங்கு வித்தை காட்டும் நபர் ஒருவர் ஆலய சூழலுக்கு, சென்று அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மத்தியில் குரங்கு வித்தை காட்டி, மகுடியும் வாசித்துள்ளார்.
அவ்வேளை புற்றில் இருந்து வெளியே வந்த நாக பாம்பினை பிடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இது தொடர்பில் சிறுவர்கள், பெரியவர்களிடம் சொன்ன போது, பாம்பினை பிடித்து சென்ற நபரை அவர்கள் அப்பிரதேசத்தில் தேடிய போதிலும், அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
நீண்டகாலமாக தெய்வீக உணர்வுடன் வழிபட்டு வந்த நாக பாம்பு திருட்டு போனது, ஆலய பக்தர்கள் இடையில் பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது.