தேர்தலை நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தினுள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதனை அடுத்து நாளை காலை 9.30 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது முதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் கோரி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டனர்.
தேர்தலை பிற்போடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் முன்னிலையாகி தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர், இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
எனினும், அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அனைத்து அரசியல் கட்சிகளும் இருக்கையில் இருந்து எழுந்து கண்டன பதாகைகளை ஏந்தியவாறு சபையின் நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாளை காலை 9.30 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.