Home இலங்கை மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? நிலாந்தன்.

மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? நிலாந்தன்.

by admin

கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டும். இதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், மின் கட்டணத்தை குறைப்பது என்றால் மின்சாரத்தை குறைவாக நுகருங்கள் என்பதுதான். இப்படி ஒர் உத்தியைத்தான் எரிபொருள் விநியோகத்திலும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. கியூஆர் கோட் முறைமை என்பது எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தியது. எரிபொருள் பதுக்கப்படுவதையும் தேவைக்கும் அதிகமாக நுகரப்படுவதையும் அது ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தியது. அதன் விளைவாக வெளியே போகும் டொலர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இப்பொழுது மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது.ஆனால் மின் கட்டண உயர்வினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகள்தான் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.அதிகளவு மின்சாரத்தை நுகரும் பணக்காரர்களுக்கு ஏற்கனவே கட்டணம் உயர்ந்துவிட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட மின் அலகுகளைப் பயன்படுத்தும் கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான் இப்புதிய மின் கட்டண உயர்வால் பாதிப்படைவார்கள் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. அரசாங்கம் தந்திரமான முறையில் மானியத்தை வெட்டுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

ஏனெனில் கடந்த இருபதாம் திகதி கண்டியில் உரையாற்றும் பொழுது ஜனாதிபதி அதை வெளிப்படையாகக பின்வருமாறு கூறியிருந்தார்….“சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு கடந்த ஒகஸ்ற் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. அதன்படி, செப்டெம்பரில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு காண முடிந்தது.அவர்கள் எமக்கு நடைமுறைப்படுத்த பதினைந்து விடயங்களைக் முன்வைத்தார்கள். டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அவற்றை நடைமுறைப்படுத்த சர்வதேச நாணய நிதியம் கால அவகாசம் வழங்கியது. ஆனால், அன்று அதைச் செய்யமுடியவில்லை.பின்னர் ஜனவரி 31ஆம் திகதி வரை அவகாசம் பெற நடவடிக்கை எடுத்தோம்.அப்போதும் அந்த 15 விடயங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இறுதியாக பெப்ரவரி 15 ஆம் திகதிவரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.பெப்ரவரி 15 ஆம் திகதி மாலை 6 மணிக்குள் அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி வாஷிங்டனுக்கு அனுப்பினோம்…”

அதாவது,ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிறைவேற்றுவது என்ற ஒரே இலட்சியத்தை நோக்கி அவர் உழைக்கிறார் என்பது அந்த உரையில் தெரிகிறது.ஐ.எம்.எஃப் என்ன கேட்கும்? மானியங்களை வெட்டு; தனியார்மயப்படுத்து; வரிகளைஉயர்த்து; ஆட்குறைப்பைச்செய்…போன்ற விடயங்களைத்தானே? அரசாங்கம் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படியத் தொடங்கிவிட்டது.இதன்மூலம் வரும் மார்ச் மாதமளவில் ஐஎம்எஃபிடமிருந்து உதவி கிடைக்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.ஆனால் அது ஒரு சிறிய தொகை.அதன் மூலம் கடனை அடைக்க முடியாது. எனினும்,அது நாட்டின் கடன் வாங்கும் தகைமையை அங்கீகரிக்கும் ஓர் உதவியாக அமையும். இதை இன்னும் கூரான வார்த்தைகளில் சொன்னால் பிச்சை எடுப்பதற்கான தகைமையை அது அதிகப்படுத்தும்.

இவ்வாறு பிச்சை எடுத்து பொருளாதாரத்தை ஒரு கட்டத்துக்கு மேல் நிமிர்த்தி விட்டால்,அதன் விளைவாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெறலாம் என்று ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார்.ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு நடத்த வேண்டும்.அதனால்தான் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் பின்னடிக்கின்றதா? வடிவேலுவின் பகிடியில் வருவது போல உள்ளூராட்சி சபைத் தேர்தல் வரும் ஆனால் வராது என்ற நிலைதான் காணப்படுகிறது. பெரும்பாலும் ஒரு ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.பொருளாதாரத்தை ஓரளவுக்கு நிமிர்த்தினால்,அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை விட்டால் வேறு தெரிவு நாட்டுக்கு இருக்காது. சஜித் பிரேமதாச தன்னுடைய தலைமைத்துவத்தை இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை.ஜேவிபி ஒரு பிரதான நீரோட்ட கட்சியாக மேலெழுமா என்பதனை இனிவரும் தேர்தலே தீர்மானிக்கும். எனினும் பொருளாதாரத்தை நிமிர்த்தும் சக்தி ரணிலுக்கு உண்டு என்று நிரூபிக்கப்பட்டால் அவர்தான் அடுத்த ஜனாதிபதி.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவோடு அவருடைய அதிகாரம் மேலும் கூடியிருக்கிறது. அரசியலமைப்பின் 70(1)அ,உறுப்புரையின்படி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இப்பொழுது அவருக்கு உண்டு. இதை அதன் விளைவுகளின் அடிப்படையில் கூறின்,நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் தாமரை மொட்டுக் கட்சி இனி ரணிலுக்கு மேலும் கீழ்ப்படிவாக மாறும். அதாவது ரணில் மேலும் பலமடைந்திருக்கிறார் என்று பொருள்.இப்படியாக ரணில்,ஒப்பீட்டளவில் பலமடைந்துவரும் ஒரு சூழலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் அது சில வேலை அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்பக்கூடும். உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் தாமரை மொட்டு கட்சிக்கு பாதகமாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு.கடந்த பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சி பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை காலாவதியாகிவிட்டது என்பதனை தேர்தல் நிரூபிக்கக்கூடும். அது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்பும். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் பொருளாதாரத்தை நிமிர்ந்துவது கடினம். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் ஐ.எம்.எஃப் போன்ற மேற்கத்திய நிதி அமைப்புக்கள் உதவப்பின்னடிக்கும். எனவே அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேண வேண்டும். அதற்கு உள்ளுராட்சி சபை தேர்தலை வைப்பது புத்திசாலித்தனமல்ல..

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உள்ளூர் நிலவரங்களை பிரதிபலிப்பவை. அவை தேசிய அளவில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை காட்டுமா?என்று.உண்மைதான்.உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உள்ளூரில் காணப்படும் சாதி, சமயம், தனிப்பட்ட செல்வாக்கு போன்ற அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன.ஆனாலும் இறுதியிலும் இறுதியாக கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளை தேசிய மட்டத்தில் கணிக்கும்போது அங்கே அது கட்சிகளின் வெற்றி தோல்வியாகவும் வியாக்கியானம் செய்யப்படும்.

இப்படி ஒரு நிலைமை 2015ல் ரணில்+மைத்திரி அரசாங்கம் உருவாகிய பின் ஏற்பட்டது.2015 தேர்தலில் ரணில்+மைத்திரி கூட்டு வெற்றி பெற்ற பின் நடந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தலில் மஹிந்த அணி வெற்றி பெற்றது.அது உள்ளூர்ப் பண்புமிக்க ஒரு வெற்றிதான். எனினும் அதைக் கண்டு பயந்த ரணில்+மைத்திரி கூட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு ஒத்திவைத்தது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் 2018ல் நடந்தபோது அதில் மகிந்த அணி பெரு வெற்றி பெற்றது. அதன் மூலம் ரணில் மைத்திரி கூட்டு பெற்ற வெற்றி காலாவதியாகிவிட்டது என்பது நிரூபிக்கப்பட்டது.அதன் விளைவாக மைத்திரி தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். ஒரு யாப்புச் சதிப்புரட்சியில் ஈடுபட்டார்.

எனவே உள்ளூராட்சி தேர்தல்கள் உள்ளூர் பண்பு அதிகமுடைய முடிவுகளை வெளிக்கொண்டு வந்தாலும், அவை தேசிய அளவில் கட்சிகளுக்கு உரிய வெற்றி தோல்வியாகவே கணிக்கப்பட முடியும்.இந்த அடிப்படையில் சிந்தித்தால் தாமரை மொட்டுக்கு மக்கள் ஆணை உண்டா இல்லையா? சஜித்தின் உயரம் எவ்வளவு? ஜே.வி.பியின் உயரம் எவ்வளவு? என்பவற்றை நிரூபிக்கக் கூடிய ஒரு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்கும் என்பதே உண்மை.

பதிலாக பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு நிமிர்த்திய பின் அல்லது ஆகக் குறைந்த பட்சம் ஐஎம்எஃபிடமிருந்து உதவியைப் பெற்ற பின்பு அதை ஒரு வெற்றியாகக் காட்டி தேர்தல்களை வைப்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிகம் பாதுகாப்பானது. ஜனாதிபதி ஐ.எம்.எப்பிடமிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளைக் குறித்து கடந்த பல மாதங்களாக கட்டியெழுப்பிவரும் பிம்பமானது அதைத்தான் காட்டுகிறது.அவர் ஒற்றை யானையாக நாடாளுமன்றத்துக்கு வந்தபொழுதே அதாவது ராஜபக்சக்களின் காலத்திலேயே தனது முதல் உரையில் ஐ.எம்.எஃப்பிடம் போங்கள் என்று சொன்னார். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறார்; செய்கிறார். ஐ.எம்.எஃப்பை ஒரு சர்வரோக நிவாரணியாக அவர் உருவகித்து வருகிறார்.அதன்மூலம் ஐ.எம்.எஃப்பிடமிருந்து உதவிகளை வெற்றிகரமாகப் பெற முடிந்தால் அதை ஒரு சாதனையாகக் காட்டி அவர் வாக்குகளைத் திரட்ட முயற்சிக்கலாம். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால், ஜனாதிபதி எதிர்பார்ப்பது போல அடுத்த ஆண்டுக்குள் பொருளாதாரத்தை ஓரளவுக்குச் சரிக்கட்டலாமா என்பதுதான். ஏனெனில்,இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்த கிரேக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்குள் எழு தடவைகள் அரசாங்கம் மாறியது.அர்ஜென்டினாவில் ஐந்து தடவைகள் அரசாங்கம் மாறியது.ஐந்து தடவைகள் நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்.இலங்கையில் ?

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More