(27.02.2023 அன்று இயற்கையடைந்த மூத்த கலைஞர் க.பரசுராமன் பற்றிய அஞ்சலிக் குறிப்பு)
பிரசித்தமான பறைமேளக் கலைஞர் வையன் ஆனைக்குட்டி அவர்கள் மரபு ரீதியான அறிஞர் பாரம்பரியத்தின் பிரமாண்டமான ஆளுமைகளில் முதன்நிலை வகித்திருந்தவர். மரபு ரீதியான அறிவுப் பாரம்பரியத்தின் அடிப்படை இயல்பான பன்முக ஆளுமையின் பிரகாசிக்கும் அடையாளமாக வையன் ஆனைக்குட்டி விளங்கினார்.
இத்தகைய பெருமைமிக்க ஆளுமையுடனேயே க.பரசுராமன் அவர்களது அறிமுகமும், பழக்கமும் ஏற்படுகின்றது. ஆனைக்குட்டி அவர்களின் சொர்ணாளி வாசிப்பில் பறைமேளக் கூத்தை ஆடிய க.பரசுராமனின் கலை வல்லபம் நினைவில் நிறைந்திருப்பது.
சாதி காரணமான மோதல்கள், முரண்பாடுகள், நிராகரிப்புகள், அவமானப்படுத்தல்கள் என்ற அகோர மனிதப்பெருஞ் சூறைகளுக்குள்ளால் பறைமேளக் கலையை நிதானமாகவும் உறுதியாகவும் முழக்கி வந்தவர். சாந்தத்துள் குடியிருக்கும் உறுதி க.பரசுராமன் அவர்களின் அருமையான குணாதிசயம். இந்த நிலை வாய்க்கப் பெறுதல் ஆளுமை முதிர்ச்சியின் பக்குவத்தின் பாங்கு.
இவரது மனைவி, இவருக்கு வாய்க்கப் பெற்ற வரம். திண்மையான பெண் ஆளுமை அவர். வையன் ஆனைக்குட்டி அவர்களின் மகள் அவர், அவரது அறிவு திறம் மனப்பாங்கு உள்வாங்கப்பட வேண்டியது. இப்படியான பல பெரும் ஆளுமைகள், அவர்களது குடும்பச் சூழல் தாண்டி அறியப்படாதவர்களாகவே போய்விட்டார்கள். இத்தகைய அம்மாக்களின் கதைகளே மனிதரை மனிதர் மதிக்கும், சூழலை நேசிக்கும் சமூகங்களை உருவாக்கும் அறிவுச் செல்வங்களாகும். இது புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வருவது அறிவுடைய சமூகங்களின் பொறுப்பாகும். க.பரசுராமன் என்கின்ற மனிதன், கலைஞன் என்பவரின் பின்னணி இதுதான்.
சாதி மேலாதிக்கம் காரணமாக வெளியிருந்தும் உள்ளிருந்தும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அநியாயங்களை எதிர்கொண்டு மறைக்கப்பட முடியாத அடையாளங்களுடன் மேலெழுவதே க.பரசுராமனின் நிதானமான வாழ்வாக அமைந்திருந்தது. அவரது கலைப் பயில்வு அவரது வாழ்வின் குரலாக இருந்தது.
மேலாதிக்கப் பண்பாட்டுள் கரைந்துறைந்து மேல்நிலையாக்கத்தினுள் மறைவு வாழ்க்கையை மேற்கொள்ளும் முனைப்பு அவரிடம் காண முடியாது.
க.பரசுராமனிடம் இக்கருத்தியல்களை விளக்கும் வாசகங்கள் இருந்ததில்லை. ஆனால் அவரது வாழ்க்கையை அறிந்தவர்கள் அந்த வாசகங்களை அவரில் வாசித்துக் கொள்வர்.
இத்தகைய ஆளுமைகளை உலகறியும் பொழுது உன்னதமான உலகங்கள் உருவாவதற்கான வாழ்வியல் அம்சங்கள் பரிணமிக்கும்.
க.பரசுராமன் என்னும் மனிதன் தன் வாழ்வாலும் கலையாலும் செய்தியொன்றை எழுதிச் சென்று விட்டான்.
இச்செய்தியை இதையொத்த இலட்சோப இலட்சம் செய்திகளை புரிந்து கொள்ளும் பொழுது உலகம் உய்க்கத் தொடங்கும்.