210
சுற்றுலா சென்று நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.மொனராகலை மாவட்டம் வெல்லவாய காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா சென்ற 10 இளைஞர்கள் குளிப்பதற்காகச் சென்ற நிலையில் நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நான்கு இளைஞர்களும் அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 முதல் 23 வயதுக்குட்பட்ட தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்று வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த இளைஞர்கள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு . அங்கிருந்த குடியிருப்பாளர்கள் விடுத்த எச்சரிக்கையினை பொருட்படுத்தாமல் நீராட சென்றதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி
சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள மிக அழகிய நீர்வீழ்ச்சியான எல்லாவல நீர்வீழ்ச்சியை காணவும் நீராடவும் தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனா். அண்மையில் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று சிறு பிள்ளைகள் உட்பட பலர் உயிரிழந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த எல்லாவல நீர்வீழ்ச்சி கடந்த வருடம் (2022) செப்டம்பர் (06) முதல் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.
Spread the love