Home இலங்கை சிலை அரசியல் : அறிவும் செயலும் – நிலாந்தன்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் – நிலாந்தன்.

by admin

வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. நடராஜர் சிலை,வள்ளுவர் சிலை, சங்கிலியன் சிலை, என்பவற்றோடு திருநெல்வேலி சந்தையில் மணிக்கூட்டுத் தூபி ஒன்று.

இச்சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை கடந்த வாரக்கட்டுரையில் ஓரளவுக்குப் பார்த்தோம்.இச் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மத அரசியலைத் தனியாயகப் பார்க்கவேண்டும்.இன்று இக்கட்டுரையானது இச்சிலைகளின் அழகியல் அம்சங்களைக் குறித்த விவாதக் குறிப்புகள் சிலவற்றை முன்வைக்கின்றது.

பொதுவெளிச் சிற்பங்கள் அவற்றை நிறுவும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களின் விருப்பங்களை மட்டும் பிரதிபலிப்பவை அல்ல. அதைவிட ஆழமான பொருளில் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் கலை மேதமையை, அழகியல் உச்சங்களை, அரசியல் கலாச்சார பல்வகைமையை வெளிக்காட்டுபவைகளாக அமைய வேண்டும்.ஒரு வெளிப்பார்வையாளர் கண்டு வியக்கும் அளவுக்கு அது ஒரு வெற்றிபெற்ற கலைப் படைப்பாக அமைய வேண்டும்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சில பொதுச் வெளிச் சிற்பங்களை அல்லது சிலைகளை அல்லது தூபிகளைப் பார்க்கலாம்.

முதலில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் சிலையிலிருந்து தொடங்கலாம். இச்சிலை ஒரு வழிபாட்டு உருவாகத்தான் அந்த சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது.இச்சிலையை உருவாக்கியவர்கள் அதனை ஒரு வழிபாட்டு நோக்கத்தையும் மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.அப்படியென்றால் தங்களுடைய இஷ்ட தேவதையை சிலையாக்கும்போது அதன் அழகியல் முழுமை குறித்து ஆகக்கூடிய பட்ச கவனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் தனக்கு மிகவும் பாசத்துக்குரிய தன் தாய்க்கு ஒரு சிலை வைக்கும்போது அச்சிலை தாயைப் போலவே இருக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பார் ? அது வேறு யாரையோ போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாரா? இல்லைத்தானே? இது ஆஞ்சநேயருக்கும் பொருந்தும்.

ஆஞ்சநேயரின் ஆகிருதியைக் காட்டுவதுதான் சிலையின் நோக்கம் என்றால் அதற்கென்று செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும். அதற்குரிய துறைசார் நிபுணர்களை அணுக வேண்டும்.அதை ஒரு தவமாகச் செய்ய வேண்டும். ஆனால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் தமிழ் அழகியலின் வீழ்ச்சியின் குறியீடாக நிற்கிறார்.அவருடைய முகத்துக்கும் உடலுக்கும் இடையிலான அளவுப் பிரமாணம் பிழைத்து விட்டது. அதனால் அது ஒரு கறாளையான சிலை.

இத்தனைக்கும் அச்சிலை இருப்பது யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறை அமைந்திருக்கும் வளாகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்தான்.ஆனால் பல்கலைக்கழகத்தின் இது சம்பந்தப்பட்ட துறைசார் ஆளுமைகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு ஆஞ்சநேயர் சிலை கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது குறைந்தபட்சம் அந்த வளாகம் வளர்ச்சியடைந்த பின்னராவது அது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டதாகத் தெரியவில்லை.ஆயின்,யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்பிக்கப்படுகின்ற சிற்பம் தொடர்பான அழகியல் அறிவிற்கும் ஆஞ்சநேயருக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அதாவது அறிவுகும் செயலுக்கும் இடையிலுள்ள இடைவெளி.

இந்த இடைவெளி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான பொதுச் சிற்பங்களுக்குப் பொருந்தும்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் மட்டுமல்ல,ஆனையிறவுச் சிவனின் மீதும் அவ்வாறான விமர்சனங்கள் உண்டு. அதை உலோகத்தில் வார்த்திருந்தால் அதன் அழகு மேலும் பொலிந்திருக்கும் என்ற ஒரு கருத்து உண்டு. மேலும் அச்சிலையை வடிவமைக்கும் போதும் அது தொடர்பான துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட்டதா என்ற கேள்வி உண்டு.

சிவ நடனம் எனப்படுவது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது. அப் பிரபஞ்ச அசைவை ஒரு அசையாச் சிலைக்குள் கொண்டு வருவதற்கு மகத்தான சிற்பிகள் தேவை. அசையாச் சிலை ஒன்று பிரபஞ்சப் பேரசைவைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அது ஒர் அழகியல் சவால். சுந்தர ராமசுவாமி கூறுவதுபோல ஒரு வேட்டை நாயின் பாய்ச்சலை ஓர் ஒளிப் படத்துக்குள் கைப்பற்றுவது போல.

ஆனால் நடராஜர் சிலையை வடிவமைக்கும்போது அது தொடர்பான துறைசார் நுட்பங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உரிய துறைசார் நிபுணர்களோடு அது தொடர்பாக உரையாடப்பட்டதாகவும் தெரியவில்லை. இது ஆஞ்சநேயருக்கும் நடராஜருக்கும் மட்டுமல்ல,முத்திரச் சந்தையடி சங்கிலியன் சிலையும் உட்பட,தமிழில் பெரும்பாலான பொதுவெளிச் சிற்பங்களுக்கும் பொருந்தும்.

தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு தூண்களில் தொடங்கி முள்ளிவாய்க்கால் நினைவுச் சிற்பம் வரையிலும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது. உரும்பிராயில் சிவகுமாரன் சிலையில் தொடங்கி வவுனியாவில் பத்மநாபா சிலை வரையிலும் நிலைமை அதுதான்.அவரவர் தன் வசதிக்கேற்ப தன் அழகியல் புரிதலுக்கு ஏற்ப சிலைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அது ஒரு மக்கள் கூட்டத்தின் கலை மேதமையை பிற நாட்டவர்கள் கண்டு பிரமிக்கும் அளவுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தைத் தவற விடுகிறார்கள்.

இதில் ஆகப்பிந்தியது கடந்த வாரம் திருநெல்வேலிச் சந்தியில் திறக்கப்பட்ட மணிக்கூட்டுடன் கூடிய ஓர் அலங்காரத்தூபி.அது யாழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழலுக்குள் காணப்படும் ஒரு சந்தி.அதுவும் பண்ணைச் சுற்று வளைவைப் போலவே பிறசமூகங்கள் புழங்கும் ஒரு சந்தி. யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு மிக அருகில் காணப்படும் அச் சந்தியில் வைப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த முன்னோடிகள் அல்லது,நிறுவன உருவாக்கிகள் என்று கூறத்தக்க யாருடைய சிலையும் இல்லையா? கடந்த வாரம் திறக்கப்பட்ட சிறுதூபி தமிழ் மக்களின் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகின்றதா? தமிழ்மக்களின் பெருமைகளைப் பிரதிநிதித் துவப்படுத்துகின்றதா?

ஏன் அதிகம் போவான் யாழ்.பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்கூட ஒர் அழகியல் முழுமை என்று கூற முடியாது.அதிர்ச்சியூட்டும் நவீனம் என்று கூற முடியாது.உலகிலுள்ள இதுபோன்ற நினைவுச் சின்னங்களோடு ஒப்பிடுகையில் அது மிகவும் சாதாரணமானது.

ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் காணப்படும் நினைவுச் சின்னத்தின் நிலைமை அதுவென்றால், அதுவும் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் தனது உயர்கல்வி நிறுவனத்தில் அப்படித்தான் ஒரு நினைவுத் தூபியைக்க கட்டுமென்றால், அதிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் ஏனைய பொது வெளிச்சிற்பங்கள் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை.இது ஒரு பொதுவான போக்காக தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவெளிச் சிற்பங்களை உருவாக்கும் பலரும் அது தொடர்பான துறைசார் நிபுணர்களை அணுகுவதில்லை என்பதைத்தான் பெரும்பாலான சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் மிக அருந்தலான புறநடைகளை உண்டு.அப்புறநடைகள் யாவும் அதற்குரிய துறைசார் அறிவுடையோரால் உருவாக்கப்பட்டவை.

இவ்வாறான சிலைக் கலாசாரத்தின் பின்னணியில்,சிலை அரசியலின் பின்னணியில்,பண்ணைச் சுற்றுவளைவில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவரை இனிப் பார்ப்போம்.அச்சிலைக்குப் பின்னால் உள்ள மொழி,மத அரசியல் குறித்து ஏற்கனவே சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக வாதப்பிரதிவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.இங்கு அச்சிலையின் அழகியல் அம்சங்களை மட்டும் கவனிப்போம்.

கண்ணாடி நாரிழையில் செய்யப்பட்ட அச்சிலையானது தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜிபி குழுமத்தின் தலைவர் சந்தோசம் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும்.இலங்கையின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்தம் 18 சிலைகளை அவர் வழங்கியிருக்கிறார்.அதில் இரண்டு வடக்கு கிழக்குக்கு.ஒன்று திருகோணமலைக்கு.மற்றது யாழ்ப்பாணத்திற்கு.இச்சிலைகள் யாவும் வழமையானவை.அவற்றின் அழகியல் அம்சங்கள் குறித்து விவாதிக்க அதிகமில்லை.ஆனால் பண்ணைச் சுற்று வளைவில் அச்சிலை வைக்கப்பட்டிருக்கும் இடம்,அதன் பின்னணி என்பவற்றைத் தொகுத்து பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

அச்சிலைக்காகக் கட்டப்பட்ட பீடத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது அச்சிலை சிறுத்துப்போய்த் தெரிகிறது. முத்தவெளி, டச்சுக்கோட்டை என்பவற்றின் பின்னணியில் அச்சிலையை நிற்கின்ற வள்ளுவராக வடிவமைத்து இருந்திருந்தால் ஒரு பிரமாண்டத்தை காட்டியிருக்கலாம்.ஆனால் வீதிச்சுற்று வளைவில் எதைக் கட்டினாலும் அதற்குப் போக்குவரத்துத் துறைசார் வரையறைகள் உண்டு என்று சுட்டிக் காட்டப்படுகிறது.அதன்படி ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் எதையும் கட்ட முடியாது.ஆயின் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட வெளிக்குள் எப்படிப்பட்ட ஒரு சிலையை ஸ்தாபிப்பது என்பதில் அரசியல் மற்றும் அழகியல் தெரிவுகள் இருக்க வேண்டும். கோட்டை,முத்தவெளி என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அச்சிலை போதாது என்ற உணர்வே எழுகிறது.

இதுதான் பிரச்சினை.இதுதொடர்பில் துறைசார் நிபுணர்களின் அறிவை யாரும் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.சிலைகளின் விடயத்தில் மட்டுமல்ல, பொதுவெளிச் சிற்பங்கள்,பொதுக் கட்டங்கள் போன்றவற்றில் மட்டுமல்ல,அரசியலும் உட்பட ஈழத்தமிழர்களின் பெரும்பாலான பொதுவிடயங்களில் அறிவுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை.அறிவு தன் பாட்டில் பாடப்புத்தகங்களில் இருக்கின்றது.செயல் தன்பாட்டில் நடக்கின்றது.

அறிவுக்கும் செயலுக்கும் இடையிலான இந்த இடைவெளி அதிகமாக வெளிப்படும் இடமும் அதிக நாசத்தை விளைவித்த இடமும் எதுவென்றால் தமிழ் அரசியல்தான்.சிலைகள் கோணல்மாணலாக வருவதோ அல்லது பொருத்தமற்ற இடங்களில் பொருத்தமற்ற அளவுகளில் நிர்மாணிக்கப்படுவதோ அழகியற் சிதைவு மட்டுமே.பண்பாட்டுச் சிதைவு மட்டுமே.ஆனால் அரசியலில் அவ்வாறு துறைசார் நிபுணத்துவத்தைப் புறக்கணிப்பது அல்லது சட்டக் கண்களால் எல்லாவற்றையும் அளப்பது என்பது எத்துணை பாரதூரமானது என்பதனைக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கண்டோம்.அறிவையும் செயலையும் பொருத்தமான விதங்களில் இணைக்கத் தவறிய ஒரு சமூகம் இப்பொழுது சிலைகளை வைத்துவிட்டு ஆளையாள் தின்று தீர்க்கின்றதா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More