யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களிடம் காவற்துறையினர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் போது, தாம் தவறு இழைத்தால் பிளாஸ்ரிக் பைப் ஒன்றில் மண்ணை நிரப்பி அதனால் அடிப்பார்கள் என சிறுவர்கள் தெரிவித்துள்னர். அத்துடன் தாம் இல்லத்தில் துன்புறுத்தப்படுவது தொடர்பில் கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர்கள் பலரிடம் முறையிட்ட போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது எமது இல்ல போதகரிடம் நாம் கூறியவற்றை கூறி விடுவார்கள்.
அதனால் நாம் ஆசிரியர்களிடம் முறையிட்டமைக்காக மீண்டும் இல்லத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோம் என சிறுவர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்
அதேவேளை சிறுவர் இல்லத்தில் இருந்த 80 வயதான தலைமை போதகர் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியத்துடன், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து தலைமை போதகரை காவற்துறையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சம்பவத்துடன் தொடர்புடைய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.