அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நெசவு சாலை யுத்தத்தின் பின் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் குறித்த கட்டிடத்தில் ஒரு மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
குறித்த மத ஸ்தலத்தினால் சுற்றுசூழலில் அதிகளவு சத்தம் போட்டு பிரார்த்தனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இம் மதஸ்தலத்திற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் குறித்த மதப்பிரிவின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலிப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக போதகரும் குழுவினரும் உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், போதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறித்த மதஸ்தலம் அமைந்துள்ள நெசவுசாலையினை மீளவும் கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் என்றும், சுற்றுச்சூழலில் இடம்பெறும் ஒலி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்காவும் அமைந்துள்ள மதஸ்தலம் அகற்றப்படவேண்டும் கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இதனால் அப்பகுதியில் காவற்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அடாவடி செய்யும் மதப்பிரிவே வெளியேறு, ஊடகங்களை அச்சுறுத்தாதே, இளைஞர்களின் தொழில் வாய்ப்பை பறிக்காதே, பொதுமக்கள் சொத்தில் மதம் வளர்க்காதே போன்ற பதாகைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்கியுள்ளனர்.