Home இலங்கை வெடுக்குநாறிமலையிலிருந்து தையிட்டிக்கு – நிலாந்தன் 

வெடுக்குநாறிமலையிலிருந்து தையிட்டிக்கு – நிலாந்தன் 

by admin

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். போலீசாரோடு முரண்பட்டதன் மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக்கட்சிதான். அதன் விளைவாகத் தமிழரசுக்கட்சியும் உட்பட ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிமன்றம் தலையிடும் ஒருநி லைமை உருவாகியது.

எனினும் போராட்டம் பெருமளவுக்கு கட்சிப் பிரமுகர்களின் போராட்டமாகவே இருந்தது.கொஞ்சம் தொண்டர்களும் காணப்பட்டார்கள். முன்னணி போலீசாரோடு முரண்பட்டதுங்கூட அதன் பாணியில் வளமையானது என்று சொல்லலாம். அரசபடைகளோடு முரண்படுவதை ஒரு சாகசமாக முன்னணி செய்து வருகின்றது. இதுபோன்ற போராட்டங்களில் அவ்வாறான சாகசச் செயலுக்கும் ஒரு பொருள் உண்டு. அது போலீசாரை நிதானமிழக்கச் செய்யும். அதன் தக்கபூர்வ விளைவாக சிங்களபௌத்தமயமாக்கல் மேலும் அம்பலப்படும் என்பது உண்மை. ஆனால் அறவழிப்போராட்டங்கள் மட்டுமல்ல ஆயுதப் போராட்டங்களும் சாகசங்களால் வெற்றி பெறுவதில்லை.

இது விடயத்தில் சில அடிப்படையான கேள்விகள் உண்டு. அந்த விகாரை திடீரென்று வானத்திலிருந்து தரைக்கு வரவில்லை.அது கடந்த நான்கு வருடங்களா ககட்டப்பட்டு வருகிறது. அதற்கு அத்திவாரம் வைத்தபோதே அது விவகாரம் ஆக்கப்பட்டது. அதைக் கட்டியெழுப்பும் வரையிலும் ஏன் தமிழ்க்கட்சிகள் பார்த்துக்கொண்டிருந்தன?  இப்பொழுதும் விகாரை முழுமையாக திறக்கப்படவில்லை. அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட பொழுதுதான் தமிழ்த்தேசியமக்கள்முன்னணி களத்தில் இறங்கியது. நாவற்குழியிலும் அப்படித்தான்.

இதில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அத்திவாரம் வெட்டப்படும் பொழுதும் அதைத் தடுக்கமுடியவில்லை. அது கட்டி முடிக்கப்படுவதையும் தடுக்க முடியவில்லை. அது ஒரு மதம் சார்ந்த பொதுக்கட்டிடம் என்ற அடிப்படையில் அதை இனி அகற்றுவது மேலும் விவகாரமாகிவிடும். எனவே இங்கு தொகுத்துப் பார்த்தால் தெரிய வருவது எனவென்றால்,தமிழ்க்கட்சிகளின் இயலாமைதான். தமிழ்க்கட்சிகளின் நிகழ்வுகளை மையமாகக் கொண்ட அரசியல்தான்..(Event based)

நாவற்குழியில் சிங்களமக்கள் குடியமர்த்தப்பட்ட பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அங்கு போனார். முரண்பட்டார். அது போலவே தையிட்டி விகாரை விவகாரத்திலும் தொடக்கத்திலேயே அது பிரதேசசபையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. எனவே இது விடயத்தில் 5 ஆண்டுகள் தூங்கிக் கிடந்துவிட்டு திடீரென்று விழித்த அரசியலை எப்படிப் பார்ப்பது ?

ஆயிரம் விகாரைகள் கட்டப் போவதாக ரணில் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதைச் செய்கிறார். அது அரசுடைய தரப்பு. திணைக்களங்கள் அவர்களுடைய உபகரணங்கள். படைத்தரப்பு அதன் காவல்காரன். எனவே எல்லா வளங்களையும் கொட்டி அவர்கள் சொன்னதைச் செய்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறு சொன்னதைச் செய்யும் சக்தி உடையவர்களா ?அதற்குத் தேவையான நீண்டகால நோக்கிலான வழிவரைபடம் அவர்களிடம் உண்டா?இல்லையென்றபடியால்தான் அவர்கள் நிகழ்வுகளை மையமாக வைத்து எதிர்ப்பு அரசியல் செய்கின்றார்களா?அவர்கள் எதிர்த்த போதிலும் விகாரைகள் ,தாதுகோபங்கள் கட்டப்பட்டு கொண்டேயிருக்கின்றன.

தமிழ்க்கட்சிகளிடம் தெளிவான வழிவரைபடம் இல்லை என்பதைத்தான் தையிட்டி விவகாரம் நமக்கு உணர்த்துகின்றது. சிங்களபௌத்தமயமாக்கல் என்பது , தமிழ்மக்கள் ஒருதேசமாக இருப்பதைச் சிதைக்கும் நோக்கிலானது.எனவே தமிழ்மக்கள் ஒருதேசமாகத் திரண்டால்தான் அதைத்தடுக்கலாம். செல்வராஜாகஜேந்திரன் தையிட்டியில் வைத்து அதைச் சொன்னார். ஆனால் சொன்னால் மட்டும் போதாது. தமிழ்மக்களை ஒரு தேசமாகத்திரட்டுவதற்கு யார் தடை ?

எனைய கட்சிகளைத் துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், கைக்கூலிகள் என்றெல்லாம் கூறிக்கொண்டு எப்படி ஒற்றுமைப்படுவது?இனி தமிழ்த்தேசியமக்கள்முன்னணியை கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குள் கொண்டுவரமுடியாது. ஒன்றில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி ஒரு பிரதான நீரோட்ட கட்சியாக வளர்ச்சிபெற வேண்டும். அல்லது ஏனைய கட்சிகள் தாங்கள் ஒரு பெரிய கூட்டாக வளர்ச்சி பெறவேண்டும்.

எந்தக் கூட்டாக இருந்தாலும் அது தேசத்தை கட்டியெழுப்புவது என்ற நோக்கத்தோடு உருவாக்கப்படவேண்டும். நிச்சயமாக தேர்தல் வெற்றிக்கான கூட்டாக இருக்கக்கூடாது. அத்தகையஅடிப்படையில் கூட்டுக்களை உருவாக்கத் தவறியதன் விளைவாகத்தான் தேசநிர்மானத்திற்கான அடுத்தடுத்த கட்டவளர்ச்சிகளுக்குப் போக தமிழ்அரசியலால் முடியவில்லை.

தேசத்தை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்தித்து அதற்குரிய வழிவரைபடத்தைத் தயாரித்து இருந்திருந்தால் , சிங்களபௌத்தமயமாக்கலை எதிர்கொள்வதற்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்கியிருந்திருப்பார்கள். கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில்தான் , நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எதிர்ப்பு அரசியல் செய்யவேண்டி வந்தது. அதை ஒரு சட்டவிவகாரமாகச் சுருக்கவேண்டி வந்தது. இது ஒரு சட்டவிவகாரம் அல்ல. இது ஒரு அரசியல் விவகாரம். இதை அணுகுவதற்கு அரசியல்ரீதியான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். ஒருகட்சியிடமும் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லை என்பதைத்தான் தையிட்டியில் குந்திகொண்டிருந்த நாடாளுமன்றஉறுப்பினர்கள் நமக்கு உணர்த்தினார்கள். சில தொண்டர்களைத் தவிர மக்களை அங்கே கொண்டுவர முடியவில்லை.

எனவே இங்கு தேவையானது என்னவென்றால் , தேசத்தை நிர்மாணிப்பதற்குரிய கட்டமைப்புகள் எவை எவை என்று கண்டு அவற்றை கட்டியெழுப்புவதுதான். இது பல ஆண்டுகளாக நான் எழுதிவரும் ஒரு விடயந்தான். ஒரு தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான கட்டமைப்புகள் எவையெவை? ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்களைப் பலப்படுத்துவதற்குரிய கட்டமைப்புக்களே அவை. ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகவனையும் அம்சங்கள் எவை?

நிலம்;மொழி; இனம் அல்லது சனம்; பொதுப்பண்பாடு; பொதுப்பொருளாதாரம் போன்றவைதான். எனவே மேற்கண்ட அம்சங்களை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் தேவையான சுயகவசங்கள் என்று வர்ணிக்கத் தக்க கட்டமைப்புகளை புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் பங்களிப்போடு உருவாக்கலாம். தேசத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று கூறும் ஒரு கட்சிஅதற்கு தேவையான பொருத்தமான கட்டமைப்புகளை ஏன் இதுவரை உருவாக்கவில்லை ?அதற்கு பதில் வேண்டும்.

தையிட்டியில் தமிழ்மக்கள் ஒரு தேசமாக நிற்கவில்லை. கட்சிப்பிரமுகர்கள்தான் நின்றார்கள். அது ஒரு நிகழ்வு. அதுபோல பல நிகழ்வுகளை நாங்கள் கடந்த 14 ஆண்டுகளில் கண்டுவிட்டோம். நிகழ்வுகளை மையமாகக் கொண்ட அரசியலின் தோல்வியே இது. இப்பொழுது தேவையாக இருப்பது மூலோபாய ரீதியில் சிந்தித்து கட்டமைப்புகளை உருவாக்கி நீண்டகால அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதுதான். அவ்வப்போது நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றும் அரசியல் எனப்படுவது தேசத்தை நிர்மாணிப்பதற்கு உரியதல்ல. தேசத்தை நிர்மாணிப்பது என்பது எதிர்ப்பு அரசியல் மட்டுமல்ல .அது கட்டியெழுப்பும் அரசியலுந்தான்( (Constructive). எதைக் கட்டியெழுப்புவது?எதிர்க்கத் தேவையான கட்டமைப்புகளைக் கட்டியெழுப்புவது.

இன்றைக்கு தையிட்டி .நாளைக்கு வேறொரு இடத்தில் வேறு ஒரு பௌத்த மதக் கட்டுமானத்துக்கு அத்திவாரம் வைக்கப்படும். அப்பொழுதும் அந்தநிகழ்வுக்கு எதிராக தமிழ்க்கட்சிகள் போராடக் கூடும். வழக்குத் தொடுக்கக்கூடும். போலீசோடு தள்ளுமுள்ளுப் படக்கூடும். வழக்கில் வெல்லவும் கூடும்.ஆனால் அவை யாவுமே நிகழ்வுகள்தான். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொடர் செயற்பாடுகளாக இருக்கப்போவதில்லை. சிங்களபௌத்தமயமாக்கலைத் தடுக்கப்போவதில்லை.

இப்பொழுது வெடுக்குநாறிமலையில் இருந்து கவனக்குவிப்பு தையிட்டிக்குத் திரும்பிவிட்டது. அதுகூட சிங்களபௌத்தமயமாக்கலுக்குச் சாதகமான ஒரு விடயம்தான். தமிழ்மக்களின் கவனத்தை ,தமிழ்க்கட்சிகளின் கவனத்தை அவ்வப்போது வெவ்வேறு நிகழ்வுகளின் மீது திசை திருப்புவது. தமிழ்மக்களின் கூட்டுக்கவனத்தைச் சிதறவிடுவது.

அண்மை வாரங்களாக தமிழ்ச்சமூகத்துக்குள் காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வுகளைக் குறித்தும் சாதிஒடுக்குமுறைகளைக் குறித்தும் விமர்சனங்கள் வெளிவருகின்றன. தேசியவிடுதலை எனப்படுவது சமூகவிடுதலையுந்தான். சமூகவிடுதலை இல்லாத தேசியவிடுதலை, விடுதலையே அல்ல. இந்தவிளக்கத்தோடு உள்ளூரில்காணப்படும் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய பொறுப்பு தமிழ்கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் உண்டு .மதமுரண்பாடு,சாதிமுரண்பாடு ,நாவற்குழி, தையிட்டி வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை போன்ற அனைத்து அம்சங்களும் தமிழ்மக்களின் கவனத்தை அவ்வப்போது சிதறடிக்கின்றன. இவற்றிற்கு எதிராக தனித்தனியாக போராட்டத் தேவையில்லை. இவை அனைத்தும் தேசநிர்மானத்துக்கு ஏற்பட்ட சவால்களே. எனவே தேசத்தை ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுகட்டியெழுப்பும் போது இந்த விடயங்களை எதிர்கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுவிடும்.

இது மேமாதம். 2009 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் மத்தியில் இருந்த ஒரு கருநிலை அரசு தோற்கடிக்கப்பட்ட மாதம்.’யுத்தத்தை வெற்றி கொண்டவர்கள் நாங்கள்’ என்று தையிட்டியில் வைத்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். அதன் பொருள் இதுதான். நீங்கள் தேசமாக இருப்பதை நாங்கள் தோற்கடித்து விட்டோம் என்று பொருள். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்மக்கள் ஒரு தேசமாக மேலெழுவதைத் தோற்கடித்ததில் அரசாங்கத்தை விடவும் தமிழ்க்கட்சிகளுக்கே பங்கு அதிகம்.

இதை மறுவளமாகச் சொன்னால் தமிழ்மக்களை ஓரளவுக்காவது  தேசமாகத் திரட்டியது அரசாங்கந்தான். ஒடுக்குமுறைதான் தமிழ்க்கட்சிகளை ஒர் உணர்ச்சிப்புள்ளியில் சந்திக்க வைக்கின்றது. தையிட்டியில் அது நடந்தது. மு.திருநாவுக்கரசு mசிவத்தம்பி போன்றவர்கள் கூறுவது போல எதிரிதான் தமிழ்த்தேசியத்தின் பிரதான பலமா?

தியாகியாய் ,துரோகியாய் ,கைக்கூலியாய், ஒட்டுக்குழுவாய் . ,வடக்காய், கிழக்காய் , வன்னியாய், யாழ்ப்பாணமாய், கட்சியாய், சாதியாய், சமயமாய், இன்னபிறவாய், சிதறிப்போகும் சிறிய தமிழ்மக்களால், அரசாங்கம் கட்டிக்கொண்டிருக்கும் விகாரைகளிலிருந்து ஒரு செங்கல்லைத்தானும் அசைக்க முடியுமா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More