மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்துள்ளார்.
இதன்படி, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் பழைய வாக்களிப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் பல தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முயற்சித்தார்.
இதேவேளை, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பான சட்டமூலம் ஏப்ரல் 28ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் 2023 இலக்கம் 04, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமாக அமுலுக்கு வரும்.
இதற்கிடையில், பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவும், பொது மனுக்கள் தொடர்பான குழுவும் இன்று (11.05.23) கூடவுள்ளன.
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடவுள்ளதுடன், தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.